In Copenhagen, PM Modi is told: Hope India influences Russia to end war: பிரதமர் நரேந்திர மோடியுடன் உக்ரைனில் நடந்த போர் மற்றும் "பொதுமக்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களின் விளைவுகள்" குறித்து விவாதித்ததை அடிக்கோடிட்டுக் காட்டிய டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன், போரை முடிவுக்கு கொண்டுவர "ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தும்" என ”நம்புகிறேன்” என்று செவ்வாயன்று கூறினார்.
பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்ததில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் ஐரோப்பிய தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்ட மற்றும் கூறப்பட்ட மிகத் தெளிவான எதிர்பார்ப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
ரஷ்யாவின் "சட்டவிரோதமான மற்றும் தூண்டுதலற்ற உக்ரைன் மீதான படையெடுப்பை" கண்டித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அவர் "இந்தப் போரை நிறுத்த வேண்டும்" மற்றும் "கொலைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என்பதில் "மிகத் தெளிவாக" இருப்பதாக மெட் ஃபிரடெரிக்சன் கூறினார்.
இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு அவர்கள் அறிக்கைகளை வெளியிட்டபோது அவருடன் நின்ற மோடி, அவர்கள் உக்ரைனைப் பற்றி விவாதித்ததாகவும், போர்நிறுத்தம் மற்றும் மோதலை பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் தீர்க்க அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். இது இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது, இது ஐ.நா.விலும் வெளிப்படுத்தப்பட்டது. மேலும், திங்கள்கிழமை பெர்லினில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் முன்னிலையிலும் வெளிப்படுத்தப்பட்டது.
ஸ்வீடன், பின்லாந்து, நார்வே மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டிற்காக இந்த பிரதமர்கள் புதன்கிழமை மீண்டும் சந்திப்பார்கள். 2018 இல் நடந்த முதல் உச்சிமாநாட்டிற்குப் பிறகு இது இரண்டாவது உச்சிமாநாடு ஆகும்.
"நாங்கள் பல மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் இரண்டு ஜனநாயக நாடுகள். நாங்கள் இருவரும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச அமைப்பை நம்புகிறோம். இதுபோன்ற சமயங்களில், நெருங்கிய நண்பர்களாகிய நமக்கு இடையே இன்னும் வலுவான பாலத்தை உருவாக்க வேண்டும். நாங்கள் நிச்சயமாக உக்ரைனில் நடந்த போரைப் பற்றியும் விவாதித்தோம்” என்று ஃபிரடெரிக்சன் கூறினார்.
“பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களின் விளைவுகள் மற்றும் உக்ரைனில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி குறித்து நாங்கள் விவாதித்தோம். புச்சாவில் பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றிய அறிக்கைகள் ஆழ்ந்த அதிர்ச்சியளிக்கின்றன. இந்தக் கொலைகளை நாங்கள் கண்டித்துள்ளோம், சுதந்திரமான விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தினோம். டென்மார்க் மற்றும் முழு ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத மற்றும் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பை கடுமையாகக் கண்டித்தன”
"எனது செய்தி மிகவும் தெளிவாக உள்ளது. புதின் இந்த போரை நிறுத்த வேண்டும் மற்றும் கொலைகளை முடிக்க வேண்டும். இதனை ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தும் என்று நான் நம்புகிறேன், ”என்று ஃபிரடெரிக்சன் கூறினார்.
தனது அறிக்கையில் ரஷ்யாவைக் குறிப்பிடாத மோடி, “இன்று நாங்கள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள், இந்தோ-பசிபிக் மற்றும் உக்ரைன், மற்ற பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்... உடனடி போர்நிறுத்தத்திற்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்… மோதலை தீர்க்க இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தைதான் பாதை." என்று கூறினார்.
கூட்டறிக்கையில், ஜெர்மனியின் அறிக்கையைப் போலவே, "ரஷ்யப் படைகளால் உக்ரைனுக்கு எதிரான சட்டவிரோத மற்றும் தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புக்கு டென்மார்க்கின் கடுமையான கண்டனத்தை டென்மார்க் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்."
“உக்ரைனில் நடந்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து இரு பிரதமர்களும் தங்களது தீவிர கவலையை வெளிப்படுத்தினர். அவர்கள் உக்ரைனில் பொதுமக்கள் இறப்புகளை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தனர். போர்களை உடனடியாக நிறுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். சமகால உலகளாவிய ஒழுங்கு ஐநா சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் இறையாண்மை மற்றும் அரசாங்கங்களின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் உக்ரைனில் உள்ள மோதலின் சீர்குலைக்கும் விளைவு மற்றும் அதன் பரந்த பிராந்திய மற்றும் உலகளாவிய தாக்கங்கள் பற்றி விவாதித்தனர். இரு தரப்பினரும் இந்த விவகாரத்தில் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர்”
2020 செப்டம்பரில் இரு பிரதமர்களுக்கு இடையே நடந்த காணொலி வாயிலான உச்சிமாநாட்டின் போது நிறுவப்பட்ட பசுமை வியூக கூட்டாண்மையில் இரு தரப்பு ஒத்துழைப்பும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2021 இல் ஃபிரடெரிக்சனின் இந்தியா வருகைக்குப் பிறகு, குறிப்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுகாதாரம், கப்பல் போக்குவரத்து மற்றும் தண்ணீர் ஆகிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.
பிரதமர்கள் இருவரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தங்கள் ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்தனர். மேலும், இந்தியா மற்றும் டென்மார்க் இடையே ஒருங்கிணைந்த எரிசக்தி கொள்கை உரையாடல் பணியை வரவேற்றனர்.
"இன்று, நாங்கள் பல உறுதியான நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளோம். தண்ணீர், பசுமை ஆற்றல் மற்றும் அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியை எதிர்கொள்தல், போன்றவை அவற்றில் ஒரு சில உதாரணங்கள். பசுமையான வளர்ச்சியில் இரு நாடுகளும் கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதைக் காட்டுவதன் மூலம் நாம் இருவரும் முன்மாதிரியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். மேலும் இந்தியாவும் டென்மார்க்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு விஷயத்தில் மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று ஃபிரடெரிக்சன் கூறினார்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க முடியும் என்று அவர்கள் நம்புவதாக மோடி கூறினார்.
நகர்ப்புற மற்றும் கிராமப்புற நீர் வழங்கல், நிலத்தடி நீர் மேப்பிங், கழிவு நீர் மேலாண்மை, நதி புத்துயிர் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பால் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு பிரதமர்களும் திருப்தியுடன் குறிப்பிட்டதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஆர்.எஸ்.எஸ் பாணியை கையிலெடுத்த ஆம் ஆத்மி; உ.பி., முழுவதும் 10000 கூட்டங்களை நடத்த திட்டம்
"தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், தூய்மையான நதி நீருக்கான ஸ்மார்ட் ஆய்வகம் உட்பட புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கும் பரந்த அடிப்படையிலான கட்டமைப்பாக ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் டேனிஷ் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும் இடையே, வாரணாசியில் சுத்தமான நதி நீர் பற்றிய ஸ்மார்ட் ஆய்வகம் மற்றும் ஸ்மார்ட் நீர் வள மேலாண்மைக்கான சிறந்த மையம் அடங்கிய, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படுவதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருதரப்பு கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் பசுமைக் கப்பல் போக்குவரத்துக்கான சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான நோக்கக் கடிதத்திலும் அவர்கள் கையெழுத்திட்டனர். "இரு தலைவர்களும் பால் உற்பத்தியில் சிறந்து விளங்கும் மையம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பிற துறைகள் மற்றும் விவசாயம் தொடர்பான ஒத்துழைப்பை ஒரு கூட்டு பிரகடனத்தின் மூலம் விரிவுபடுத்த ஒப்புக்கொண்டனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் வழக்கமான குடியேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இடம்பெயர்வு மற்றும் சுற்றுலா" மூலம் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்த பிரதமர்கள் ஒப்புக்கொண்டதாக அறிக்கை கூறியது.
திறன் மேம்பாடு, சுற்றுலா மற்றும் குடியேற்றம், கலாச்சாரம், தண்ணீர், ஸ்டார்ட்-அப்கள், எரிசக்திக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒன்பது ஒப்பந்தங்களில் இரு தரப்பும் கையெழுத்திட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.