நிதி ஆயோக்கின் ஆட்சிமன்றக் குழுவின் எட்டாவது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது, இதில் பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் இருந்து பல முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை.
ஆதாரங்களின்படி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் நிதி ஆயோக் கூட்டத்தின் போது "மாநிலங்களின் உரிமைகள்" பிரச்சினையை எழுப்பினார். “மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம், மேலும் மாநிலங்களின் வளங்களின் பங்கை மரியாதையுடன் மாற்றும் முறையை மேலும் வலுவாக மாற்ற வேண்டும்" என்று கூட்டத்தின் போது வளர்ந்த இந்தியா @2047 பற்றி பேசும் போது பூபேஷ் பாகேல் தனது உரையில் கூறினார்.
இதையும் படியுங்கள்: பாட்டில் வாட்டர் பயன்படுத்துகிறீர்களா? வீட்டில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் உள்ளன? புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்விகள்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களான பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய இரு மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை அறிவித்துள்ள நிலையில், மற்ற மாநிலங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு பல்வேறு காரணங்களை கூறியுள்ளன.
கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை அறிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “கூட்டுறவு கூட்டாட்சி முறையை மத்திய அரசு வெளிப்படையாக கேலி செய்யும் போது இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதால் என்ன பயன்?” என்று கூறியுள்ளார்.
“நிதி ஆயோக்கின் நோக்கம் இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வையை தயாரிப்பதும், கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்துவதும் ஆகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, ஜனநாயகம் தாக்கப்பட்ட விதம் மற்றும் பா.ஜ.க அல்லாத அரசுகள் கவிழ்க்கப்படும் விதம் ஆகியவை நமது நாட்டின் தொலைநோக்கு பார்வையோ அல்லது கூட்டுறவு கூட்டாட்சி முறையோ அல்ல” என்று அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஊரக வளர்ச்சிக் கட்டணமாக (ஆர்.டி.எஃப்) மாநிலத்திற்கு ரூ.3,600 கோடியை மத்திய அரசு செலுத்தாததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் இருவரும் சனிக்கிழமையன்று ஹைதராபாத் சென்று, தேசிய தலைநகர் டெல்லியில் சேவைகளை கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசின் அரசாணையை எதிர்த்து பாரத ராஷ்ட்டீரிய சமிதி (BRS) இன் ஆதரவைப் பெறுகின்றனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஐதராபாத்தில் டெல்லி முதல்வருக்கு விருந்தளிப்பதால், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஒடிசா மற்றும் கேரளாவின் முதல்வர்களும் அந்தந்த மாநிலங்களில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தார். இதற்கிடையில், முதல்வருக்கு பதிலாக மாநில நிதியமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை கூட்டத்திற்கு அனுப்புகிறோம் என்ற திரிணாமுல் காங்கிரஸ் அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த நிகழ்வில் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளலாம் என்று மத்திய அரசு "வற்புறுத்தியது".
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் டெல்லி பயணம் அவரது உடல்நிலை மோசமானதால் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மற்றும் இமாச்சல பிரதேச முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றனர். இருப்பினும், சனிக்கிழமையன்று தனது அமைச்சரவையை விரிவுபடுத்துவதற்கான பதவியேற்பு நிகழ்ச்சியில் மும்முரமாக இருந்ததால், கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஹரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்த ஒரு நாள் கூட்டம் சனிக்கிழமை காலை தொடங்கி மாலை வரை நடந்தது. பிரதம மந்திரி தலைமையிலான ஆட்சிமன்றக் குழு, அரசாங்கத்தின் சிந்தனைக் குழுவான நிதி ஆயோக்கின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பாகும். சட்டப் பேரவைகளைக் கொண்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், பிற யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர் மற்றும் நிதி மற்றும் வர்த்தக அமைச்சர் உட்பட பல மத்திய அமைச்சர்கள் இந்த கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளனர்.
கவுன்சிலின் எட்டாவது கூட்டமான இந்தக் கூட்டம், 2047க்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்து விவாதிக்கும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது. தவிர, MSMEகள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், இணக்கங்களைக் குறைத்தல், பெண்கள் அதிகாரமளித்தல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு மற்றும் பகுதி மேம்பாடு மற்றும் சமூக உள்கட்டமைப்புக்கான கதி சக்தி ஆகியவை நிகழ்ச்சி நிரலில் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.