குஷ்பு நாராயண்
NSEL Scam : பைனான்சியல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் மீது பண மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. நேசனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் ( National Spot Exchange Ltd (NSEL) ) நடைபெற்ற 5600 கோடி ரூபாய் பண மோசடியைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் நிறுவனர் ஜிக்னேஷ் ஷாவின் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 2014ம் ஆண்டு மே மாதம் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் ஜிக்னேஷ் ஷா.
ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி வத்ராவிற்கு சொந்தமான பண்ணை வீட்டினை டெல்லியில் வாடகைக்கு எடுத்திருந்திருக்கிறார் ஜிக்னேஷ் ஷா என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்ச்சைக்கு உள்ளான இந்திரா காந்தி பண்ணை வீடு
இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பைனான்சியல் டெக்னாலஜீஸ் FTIL மற்றும் காங்கிரஸ் தரப்பு “ஒருவருக்கு வாடகைக்கு விட என்னென்ன முறைகளை பின்பற்ற வேண்டுமோ அதை பின்பற்றியே இந்த வீடு வாடகைக்கு விடப்பட்டது” என்று கூறியுள்ளனர்.
அந்த வீட்டிற்கான வாடகை ஒப்பந்தம் பிப்ரவரி 1, 2013 அன்று தொடங்கி அக்டோபர் மாதம் 2013ம் வருடம் முடிவடைந்தது. நேசனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் நடைபெற்ற மோசடி 2013ம் வருடம் ஜூலை மாதம் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறையினர் பைனான்சியல் டெக்னாலஜீஸ் நிறுவனத்திடம் “ராகுல் மற்றும் ப்ரியங்கா காந்திக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்ததிற்கான வாடகை தொடர்பான தகவல்களை” அளிக்குமாறு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
மேலும் படிக்க : ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல்கள் கருத்துக் கணிப்பு
நேசனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் ஊழல் வழக்கு ( NSEL scam )
பைனான்சியல் டெக்னாலஜீஸ் நிறுவனம் இந்திரா காந்தி ஃபார்ம் ஹவுசினை மாதம் 6.7 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து கெஸ்ட் ஹவுசாக மாற்றியது. 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. வட்டி இல்லாத டெபாசிட் தொகை 40.20 லட்சம் மற்றும் 20.10 லட்சம் ரூபாயினை ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தியின் பெயரில் காசோலை கொடுக்கப்பட்டது என்று தன்னுடைய விளக்கத்தினை பதிவு செய்தது.
NSEL scam தொடர்பாக காங்கிரஸ் விளக்கம்
அதே போல் காங்கிரஸ் தரப்பும் இதற்கு பதில் அளிக்கையில் “தேசிய முற்போக்குக் கூட்டணி மத்தியிலும், மகாராஷ்ட்ராவில் என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இருக்கும் போது தான் இந்த ஊழல் அம்பலமானது. ஜிக்னேஷ் ஷாவிற்கு எதிராக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது” காங்கிரஸ் அரசு தான் என்று கூறியுள்ளது.
மேலும் 8 மாதம் 22 நாட்கள் அந்த வீடு பைனான்சியல் டெக்னாலஜீஸ் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெறப்பட்ட வாடகைக்காக வரியினை வருமான வரித்துறையினரிடம் முறையாக கட்டப்பட்டதற்கான சான்றுகளும் கையில் இருப்பதாக கூறியிருக்கிறது காங்கிரஸ்.
சோனியா காந்திக்கோ, ராகுல் அல்லது பிரியங்கா காந்திக்கோ இந்த பண மோசடி வழக்கிற்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது காங்கிரஸ்.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா கூறுகையில் கூறுகையில் “தற்போது நடைபெற்றிருக்கும் 5 மாநிலத் தேர்தல்களின் தோல்வி பையத்தினாலும், பொருளாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் ஏற்பட்ட தோல்விகளாலும் இது போன்ற மக்களைத் திசை திருப்பும் நோக்கத்தில் அமலாக்கத்துறையையும் வருமான வரித்துறையினரையும் பயன்படுத்திக் கொள்கிறார் மோடி ஜீ என்று தெரிவித்துள்ளார்.
விருந்தினர் மாளிகை தொடர்பாக FTIL விளக்கம்
Forward Contracts Regulation Act சட்டத்தின் கீழ் சில விலக்குகளை அந்நிறுவனத்திற்கு அளித்தது அன்றைய மத்திய அரசு. அதற்கான சட்டங்களைப் பின்பற்றாமல் நிறுவனத்தை நடத்தி வந்தது NSEL. மேலும் வர்த்தகத்தினை மேம்படுத்தும் முனைப்பிலும் நிறுவனம் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அதன் விளைவாக, அது நாள் வரை செய்யப்பட்ட அனைத்துவிதமான ஒப்பந்தங்களையும் முடிவிற்கு கொண்டு வருமாறு NSEL உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜூலை 30, 2013ம் வருடம் தங்களின் அனைத்துவிதமான ஒப்பந்தங்களையும் நிறுத்திக் கொண்டது NSEL நிறுவனம்.
வெளி வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஏற்பட்ட நஷ்ட்டத்தினை இதுவரை ஈடு செய்யவில்லை அந்நிறுவனம். பைனான்சியல் டெக்னாலஜி நிறுவனம், 13000 முதலீட்டாளர்களின் 5600 கோடி ரூபாய் நிதியை NSEL நிறுவனத்தை சேர்ந்த 24 நபர்கள் மோசடி செய்துள்ளனர் என்று குற்றம் சுமத்தி வருகிறது.
இந்த மோசடிக்குப் பின்னர் NSEL, FTIL, அதனுடைய ப்ரோமட்டர்கள், புரோக்கர்கள், 24 நிறுவன ஊழியர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது அரசு. ஃபார்வர்ட் மார்கெட்ஸ் கமிஷன் நிறுவனம் செபியுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பைனான்சியல் டெக்னாலஜிஸ் ”இந்திரா காந்தி ஃபார்ம் ஹவுஸ்ஸை தங்களின் நிறுவனத்திற்கு வரும் விருந்தினர்களை தங்க வைப்பதற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எப்படி வாடகைக்கு ஒரு கட்டிடம் எடுத்தல் தொடர்பாக செயல்படுமோ அப்படியாகவே செயல்பட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறது.