Number of women scientists up; CSIR head aims at further push: இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான 80 ஆண்டுகள் பழமையான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக டாக்டர்.என்.கலைச்செல்வி இந்த மாத தொடக்கத்தில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க போக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நாட்டில் கடந்த இரண்டு தசாப்தங்களாக அறிவியல் ஆராய்ச்சியில் பெண்களின் பங்களிப்பு பொதுவாக அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன
2018-19 ஆம் ஆண்டில் எக்ஸ்ட்ராமுரல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) திட்டங்களில் பங்கேற்பவர்களில் கால் பகுதிக்கும் அதிகமானோர், அதாவது 28% பெண்கள். இந்த திட்டங்களில் 2000-01ல் 13% சதவீதமாக இருந்த பெண்களின் பங்கேற்பு அடுத்தடுத்து அரசாங்கங்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளால் உயர்ந்துள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் தொகுக்கப்பட்ட தரவுகள் காட்டுகின்றன. 2000-01ல் 232 ஆக இருந்த R&Dயில் பெண் முதன்மை ஆய்வாளர்களின் எண்ணிக்கை 2016-17ல் 941 ஆக நான்கு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்: 2021-22 நிதியாண்டில் 19 மாநிலங்களின் ஜி.எஸ்.டி.பி அதிகரிப்பு
ஆராய்ச்சியாளர்களிடையே பெண்களின் சதவீதம் 2015 இல் 13.9% ஆக இருந்து 2018 இல் 18.7% ஆக உயர்ந்துள்ளது என்று தரவு காட்டுகிறது. இயற்கை அறிவியல் மற்றும் விவசாயம் (ஒவ்வொன்றும் 22.5%), மற்றும் சுகாதார அறிவியல் (24.5%) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் (14.5%) பெண் ஆராய்ச்சியாளர்கள் குறைவு. இருப்பினும், சமூக அறிவியல் மற்றும் மனிதநேயத்தில் பெண் ஆராய்ச்சியாளர்களின் 36.4% சதவீதமாக அதிகமாக உள்ளது.
“பெண்களின் பங்கேற்பு அதிகரிப்பு, குறிப்பாக ஆராய்ச்சியில், அரசின் திட்டங்கள் மற்றும் இயற்கையான முன்னேற்றம் ஆகியவற்றின் கலவையாகும். தனிப்பட்ட முறையில், எனது வாழ்க்கையில் நான் ஒருபோதும் தடைகளை சந்தித்ததில்லை. ஆனால், பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் போது அல்லது குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னர் வேலையை விட்டுவிடும் போக்கை நான் பார்த்திருக்கிறேன்,” என்று டாக்டர்.கலைசெல்வி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இருப்பினும், “முந்தைய தசாப்தங்களில் இது அதிகமாக இருந்தது, ஏனெனில் இரண்டையும் செய்வதற்கான (ஆராய்ச்சி மற்றும் குடும்பக் கடமைகளை ஒரே நேரத்தில் தொடர) உள்கட்டமைப்பு எதுவும் இல்லை”, என்று டாக்டர் கலைச்செல்வி கூறினார். மேலும், “இனிமேல் அப்படி இல்லை. பல சி.எஸ்.ஐ.ஆர் (CSIR) ஆய்வகங்களில், பெண் விஞ்ஞானிகள் வசிக்கும் குடியிருப்பு காலனிகளில் தற்போது குழந்தை வளர்ப்பு வசதிகள் இருப்பதால், பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. அறிவியலைத் தொடரும் பெண்கள் மீதான பெற்றோரின் அணுகுமுறையும் ஒரு மாற்றத்தைக் கண்டுள்ளது, மேலும் பெண்கள் இப்போது அதிகமாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.
38 ஆய்வகங்கள் மற்றும் 4,500 விஞ்ஞானிகளைக் கொண்ட CSIR நெட்வொர்க்கின் தலைவராக, நிறுவனத்திற்குள் பெண்களின் பங்கேற்பை மேலும் அதிகரிக்கச் செய்வதே தனது நோக்கமாக இருக்கும் என்று டாக்டர் கலைச்செல்வி கூறினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) செயலாளர் டாக்டர்.எஸ்.சந்திரசேகர் கூறியதாவது: அறிவியலில் AI இன் பயன்பாடு அதிகரித்து வருவதால், அடுத்த 5-6 ஆண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் (S&T), பெண்களின் பங்கேற்பில் அதிவேக வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஆன்லைன் லைப்ரரிகளுக்கான அணுகல் போன்ற தொலைதூரத்தில் செயல்பட அனுமதிக்கும் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெண்கள் பங்கேற்பு அதிகரிக்கும். இரசாயன அறிவியல் மற்றும் தொழில்துறையும் கூட புத்திசாலித்தனமாகவும் சுத்தமாகவும் வருகிறது, மேலும் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை இப்போது அதிகரிக்கும் என்று நான் நினைக்கிறேன்.
உயர்கல்வி மீதான அகில இந்திய ஆய்வு (AISHE) 2019 இன் முடிவுகள், அறிவியல் கல்வியில் முறையே இளங்கலை மற்றும் முதுகலை நிலைகளில் 53% மற்றும் 55% பெண்களின் பங்கேற்பைக் காட்டியது, இந்த எண்ணிக்கை பல வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடக்கூடியது. ஆனால் முனைவர் பட்டம் பெற்ற பெண்கள் (44%) ஆண்களை விட (56%) பின்தங்கியுள்ளனர்.
“முதுகலை நிலை வரை (பெண்களின்) பங்கேற்பு ஆரோக்கியமானது என்பதை நாங்கள் கவனித்தோம். ஆனால் பிந்தைய முனைவர் மட்டத்தில் ஒரு வீழ்ச்சி உள்ளது, முனைவர் பட்டத்தில் பெரும்பாலான ஆராய்ச்சி நடைபெறுகிறது. இதுவும் அதிகரித்துள்ள போதிலும், இது இன்னும் 30% உலக சராசரியை விட மிகக் குறைவாகவே உள்ளது,” என்று DST இன் மூத்த ஆலோசகரும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு (STI) கொள்கையை உருவாக்கிய குழுவின் தலைவருமான டாக்டர் அகிலேஷ் குப்தா கூறினார்.
2030 ஆம் ஆண்டுக்குள் S&Tயில் பெண்களின் பங்களிப்பை 30% ஆக உயர்த்துவதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று டாக்டர் அகிலேஷ் குப்தா கூறினார். “நாங்கள் ஏற்கனவே அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்… DST இல் உள்ள 97 விஞ்ஞானிகளில் 35 பேர் பெண்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில், DST இல் உள்ள பெரும்பாலான திட்டக் குழுக்களில் குறைந்தது 20-25% பெண்கள் உள்ளனர். அதேநேரம் பெரிய சாதனை என்னவென்றால், DST இல் உள்ள 18 பிரிவுகளில் 11 பிரிவுகளுக்கு இப்போது பெண்களே தலைமை தாங்குகிறார்கள், அதாவது 61%, எந்த ஒரு அரசாங்கத் துறையிலும் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்களின் மிகப்பெரிய சதவீதமாகும்,” என்று டாக்டர் அகிலேஷ் குப்தா கூறினார்.
இந்தியாவில் 2014ல் 30,000 ஆக இருந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை தற்போது 60,000 ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அகிலேஷ் குப்தா கூறினார். கடந்த ஆண்டு, UK இன் அதீனா ஸ்வான் சாசனத்தின் அடிப்படையில், DST-ஆதரவு பாலின முன்னேற்றத்திற்கான நிறுவனங்களை மாற்றுவதற்கான (GATI) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. GATI இன் முதல் கட்டத்தில், DST ஆல் 30 கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, இது தலைமைப் பொறுப்பு, ஆசிரியர்கள் மற்றும் பெண் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பங்கேற்பை மையமாகக் கொண்டது.
“இப்போது முடிவடைந்த முதல் கட்டத்தில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களான ஐ.ஐ.எஸ்.சி ஐந்து ஐ.ஐ.டி.,கள், பிட்ஸ் பிலானி, ஐ.சி.ஏ.ஆர் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் உட்பட S&T கீழ் உள்ள நிறுவனங்களின் கலவையை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்,” என்று GATI திட்டத்தின் தலைவரான டாக்டர் நிஷா மெண்டிரட்டா கூறினார். அடுத்த சில மாதங்களில் இந்த நிறுவனங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்து DST ஆய்வு செய்யும், என்றும் டாக்டர் நிஷா கூறினார்.
ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, ஐந்து ஐ.ஐ.டி.,களில் பெண்களின் பங்கேற்பு விகிதம் குறிப்பாக குறைவாக உள்ளது. டெல்லி, மும்பை, கான்பூர், சென்னை மற்றும் ரூர்க்கி ஆகியவை 9% முதல் 14% வரை.
பயோடெக்னாலஜி (40%) மற்றும் மருத்துவத்தில் (35%) பெண்களின் பங்கேற்பு அதிகமாக உள்ளது. ICAR 29% பெண்களின் பங்கேற்பையும், CDRI 18%, NIPER ஹைதராபாத் 21%, மற்றும் பெங்களூரில் உள்ள Defense Bio-Engineering and Electro-Medical Lab (DEBEL) 33% பெண்களின் பங்கேற்பையும் கொண்டுள்ளது என டாக்டர் நிஷா மெண்டிரட்டா கூறினார். டெல்லி பல்கலைக்கழகத்தில் 33% பெண்களும், அசாமில் உள்ள தேஜ்பூர் பல்கலைக்கழகத்தில் 17% பெண்களும் பங்கு பெற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil