Manoj CG
Outreach to G-23 as Sonia Gandhi sets up groups for 2024: நல்லிணக்கத்தின் மற்றொரு சமிக்ஞையாக, செவ்வாயன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஜி-23 தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை எட்டு பேர் கொண்ட அரசியல் விவகாரக் குழுவில் சேர்த்துக் கொண்டார். மேலும், 2024 மக்களவைத் தேர்தலுக்கான பணிக்குழுவையும் சோனியா அறிவித்துள்ளார், இதில் சுவாரஸ்யமாக, தேர்தல் வியூகவாதி சுனில் கனுகோலு உறுப்பினராக இடம்பெற்று உள்ளார்.
உதய்பூர் சிந்தன் ஷிவிரில் (காங்கிரஸின் சிந்தனை அமர்வு) தனது இறுதி உரையில் சோனியா காந்தி மேற்கூறிய இரண்டு குழுக்களையும் அமைப்பதாக அறிவித்தார். இப்போது சோனியா காந்தி தலைமையிலான அரசியல் விவகாரக் குழுவில் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மா சேர்க்கப்பட்டிருப்பதால், இருவரும் ராஜ்யசபா பதவிகளுக்கு பரிசீலிக்கப்படுவார்களா என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்க வேண்டும். அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு 9-10 ராஜ்ய சபா இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில், இவர்கள் இருவரும் தற்போது குழுக்களில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதால், ராஜ்ய சபாவுக்கு அவர்கள் பரிசீலிக்கப்பட மாட்டார்களா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
"பணிக்குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் அமைப்பு, தகவல் தொடர்பு மற்றும் ஊடகம், வெளிப்பாடு, நிதி மற்றும் தேர்தல் மேலாண்மை தொடர்பான குறிப்பிட்ட பணிகள் ஒதுக்கப்படும். அவர்கள் நியமிக்கப்பட்ட குழுக்களைக் கொண்டிருக்க வேண்டும், அவை பின்னர் அறிவிக்கப்படும். இந்த பணிக்குழு உதய்பூர் நவ் சங்கல்ப் பிரகடனம் மற்றும் 6 குழுக்களின் அறிக்கைகளையும் பின்பற்றும்” என்று காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் விவகாரக் குழுவில் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மாவைத் தவிர, ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அம்பிகா சோனி, திக்விஜய சிங், அமைப்பின் பொறுப்பான ஏஐசிசி பொதுச் செயலர் கே சி வேணுகோபால் மற்றும் ஏஐசிசியின் அஸ்ஸாம் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ராகுலின் டீமில் முக்கிய உறுப்பினராக கருதப்படும் இளம் தலைவரான ஜிதேந்திர சிங்கிற்கு இது ஒரு பெரிய உயர்வு.
பணிக்குழு உறுப்பினர்களாக ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக் (ஜி-23 கடிதத்தில் மற்றொரு கையொப்பமிட்டவர்), ஜெய்ராம் ரமேஷ், வேணுகோபால், அஜய் மாக்கன், பிரியங்கா காந்தி, ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் ஒரு காலத்தில் பிரசாந்த் கிஷோருடன் இருந்த கனுகோலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கனுகோலு குழுவில் இடம்பெற்றிருப்பது, அவர் காங்கிரஸின் பிரச்சாரம் மற்றும் 2024க்கான தேர்தல் மேலாண்மை முயற்சிகளில் ஒரு பகுதியாக இருப்பார் என்பது அதிகாரப்பூர்வமாகிவிட்டது.
செவ்வாயன்று, அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கும் பாரத யாத்திரையின் ஒருங்கிணைப்புக்கான மத்திய திட்டக்குழுவையும் சோனியா காந்தி அறிவித்தார். குழுவின் உறுப்பினர்களாக திக்விஜய சிங், சச்சின் பைலட், லோக்சபா எம்.பி.க்கள் சசி தரூர், ரவ்னீத் சிங் பிட்டு, ஜோதி மணி, பிரத்யுத் போர்டோலோய், கே ஜே ஜார்ஜ், ஜிது பட்வாரி மற்றும் சலீம் அகமது ஆகியோர் உள்ளனர்.
இந்த யாத்திரை மூலம், அரசியலமைப்பின் மீதான தாக்குதல், மதச்சார்பின்மை மீதான தாக்குதல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்று லாபம் ஈட்டுதல் போன்ற பிரச்சினைகளை முன்வைத்து, பரந்த அடிப்படையிலான பயிற்சியை மேற்கொள்ள, ஒத்த எண்ணம் கொண்ட அரசியல் சக்திகள் மற்றும் சிவில் சமூக குழுக்களை அணுக காங்கிரஸ் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. ராகுல் தலைமையிலான இந்த யாத்திரை, நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் ஒரு டஜன்கணக்கான மாநிலங்களில் 3,500க்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: உணவுப் பொருள் விலை உயர்வுக்கான காரணங்கள்
உதய்பூரில் சோனியா காந்தி தனது உரையில், அத்தியாவசியமான உள் சீர்திருத்தங்களின் செயல்முறையை செய்வதற்கு ஒரு சிறிய பணிக்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார், இது மூன்று நாட்களில் வெவ்வேறு குழுக்களில் விவாதிக்கப்பட்டது. "2024 மக்களவைத் தேர்தலை மையமாகக் கொண்ட இந்த சீர்திருத்தங்கள், அமைப்பு, கட்சி பதவிகளுக்கான நியமனங்களுக்கான விதிகள், தகவல் தொடர்பு மற்றும் விளம்பரம், வெளிப்பாடு, நிதி மற்றும் தேர்தல் மேலாண்மை உட்பட அமைப்பின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும்," என்று சோனியா காந்தி கூறினார்.
காங்கிரஸ் செயற்குழுவில் (CWC) இருந்து எடுக்கப்பட்ட ஒரு "ஆலோசனை குழு" அமைப்பதையும் அவர் அறிவித்தார், அது கட்சிக்கு முன் இருக்கும் அரசியல் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து ஆலோசிக்கவும் விவாதிக்கவும் வழக்கமாக கூடும். “நிச்சயமாக, எங்களிடம் செயற்குழு உள்ளது, அது அவ்வப்போது கூடுகிறது, அது தொடரும். இருப்பினும், புதிய குழு ஒரு கூட்டு முடிவெடுக்கும் அமைப்பு அல்ல, ஆனால் மூத்த சக ஊழியர்களின் பரந்த அனுபவத்தைப் பெற எனக்கு உதவும். அதுவும் மிக விரைவில் அறிவிக்கப்படும்” என்று சோனியா கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.