Advertisment

அந்தமான் பாலியல் புகார்; 20க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக முக்கிய சாட்சி தகவல்

அந்தமானில் அரசு வேலை தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த புகார்; 20க்கும் மேற்பட்ட பெண்கள் தலைமைச் செயலாளரின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக முக்கிய சாட்சி தகவல்

author-image
WebDesk
New Update
அந்தமான் பாலியல் புகார்; 20க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக முக்கிய சாட்சி தகவல்

Ritu Sarin

Advertisment

அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரேன் மற்றும் தொழிலாளர் ஆணையர் ஆர்.எல்.ரிஷி ஆகியோர் மீது 21 வயது பெண் ஒருவரின் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்களை விசாரித்ததில், அந்தமான் & நிக்கோபார் (A&N) காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) ஆதாரங்களைக் கண்டறிந்து, அரசு வேலைக்கான பாலியல் மோசடியை சுட்டிக்காட்டும், முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிந்துக்கொண்டது.

இதன் ஒரு பகுதியாக, நரேனின் ஓராண்டு பதவிக் காலத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் போர்ட் பிளேயரில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலருக்கு பாலியல் துஷ்பிரயோகத்திற்குப் பதிலாக வேலை கிடைத்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: கத்தார் நிறுவனத்தில் பணிபுரியும் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேர் தோஹாவில் சிறை வைப்பு

நரேன், அக்டோபர் 28-ம் தேதி SIT முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கல்கத்தா உயர்நீதிமன்றத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கடைசி தேதியாகும்.

போர்ட் பிளேயரில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகளின் சி.டி.ஆர் (அழைப்பு தரவு பதிவுகள்) மற்றும் செல்போன் டவர் இருப்பிடங்களை, 21 வயதான பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய நிகழ்வுகளின் வரிசையை ”பொருத்தி” உறுதி செய்துள்ளதாக கூறினர்.

தலைமைச் செயலாளரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த க்ளோஸ் சர்க்யூட் (சி.சி.டி.வி) கேமரா அமைப்பின் டி.வி.ஆர் (டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர்) ஹார்ட் டிஸ்க் முதலில் அழிக்கப்பட்டதாகவும், அதன்பிறகு, ஜூலையில் போர்ட் பிளேயரிலிருந்து டெல்லிக்கு அவர் மாற்றப்பட்ட நேரத்தில் டி.வி.ஆர் அகற்றப்பட்டதாகவும் ஆதாரங்கள் உறுதி செய்துள்ளன.

PWD அதிகாரி மற்றும் உள்ளூர் சி.சி.டி.வி நிபுணர் ஆகியோர் மின்னணு ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் சாட்சியங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தலைமைச் செயலாளருக்கு ட்ரான்சிட் ஜாமீன் மறுத்து வாதிடுகையில், அந்தமான் & நிக்கோபர் வழக்கறிஞர், டெல்லி உயர்நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்டவரின் கூற்று "பாதுகாக்கப்பட்ட சாட்சி" மற்றும் மின்னணு ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறினார். "மனுதாரர் (நரேன்) மூலம் சாட்சியங்களை சிதைக்கும் நிகழ்வுகள் உள்ளன" என்றும் அக்டோபர் 20 ஆம் தேதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளை மறுத்த நரேன், உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தமான் & நிக்கோபர் நிர்வாகத்திற்கு எழுதிய கடிதங்களில், தனக்கு எதிராக ஒரு "சதி" இருப்பதாகவும், "வழக்கின் போலி தன்மையை நிரூபிக்கும் குறிப்பிட்ட பொருட்கள் தன்னிடம் இருப்பதாகவும்" கூறியுள்ளார்.

எஃப்.ஐ.ஆரில் கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளில் ஒன்றில் போர்ட் பிளேயரில் தான் இருப்பதை சவால் செய்த நரேன், புதுதில்லியில் தனது இருப்பைக் காட்ட விமான டிக்கெட்டுகள் மற்றும் சந்திப்பு அட்டவணையை மேற்கோள் காட்டியுள்ளார். புதன்கிழமை, அவரது வழக்கறிஞர்கள் அந்த சாட்சியங்களை அழிக்கக் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

publive-image

எவ்வாறாயினும், 21 வயதான பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த பெண் வழங்கிய தேதிகளில் குழப்பம் இருப்பதாக காவல்துறையிடம் கூறியுள்ளனர், அதேநேரம், பின்னர் எஸ்.ஐ.டி.,க்கு அவர்கள் அளித்த சாட்சியங்களில் இதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

புது தில்லியில் தொடர்பு கொண்டபோது, ​​இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று நரேன் கூறினார். இன்று போர்ட் பிளேயரில் சமீபத்திய மனுவை தாக்கல் செய்த அவரது வழக்கறிஞரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து, அக்டோபர் 17 அன்று உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நரேன் இடைநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் நவம்பர் 14 வரை இடைக்கால ஜாமீன் பெற்றார். ரிஷியும் இடைநீக்கம் செய்யப்பட்டார் மற்றும் அவரது பெயரில் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. போர்ட் பிளேயரில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

அக்டோபர் 18 அன்று, A&N காவல்துறையின் குழு, டெல்லி காவல்துறை அதிகாரிகளுடன், புதுதில்லியில் உள்ள நரேனின் இல்லத்திற்கு வந்து, SIT முன் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியது. அவர் தனது இல்லத்தில் இல்லாத போது, ​​மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட "மின்னணு" ஆதாரங்களை போலீஸ் குழு சேகரித்து தடயவியல் பரிசோதனைக்காக போர்ட் பிளேயருக்கு கொண்டு சென்றது. A&N போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களில் காணாமல் போன DVR பிளேயர் இல்லை.

தொடர்பு கொண்டபோது, ​​A&N இன் காவல்துறை இயக்குநர் ஜெனரல் நீரஜ் தாக்கூர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், 21 வயதான பெண்ணால் அக்டோபர் 1 ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட கும்பல் பலாத்கார குற்றச்சாட்டை விசாரிப்பதே உடனடி முன்னுரிமை என்று கூறினார்.

“நாங்கள் ஒரு SITயை உருவாக்கியுள்ளோம், அவர்களால் சேகரிக்கப்பட்ட வாய்வழி மற்றும் மின்னணு ஆதாரங்கள் குறித்து நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். விசாரணை முன்னேறி வருவதால், நீதிமன்றத்தில் வலுவான வழக்கை முன்வைக்க நாங்கள் தயாராகி வருகிறோம், ”என்று நீரஜ் தாக்கூர் கூறினார்.

விசாரணைக்கு முக்கியமானது, ஓட்டுனர்கள், சமையல்காரர்கள் மற்றும் பிற வீட்டுப் பணியாளர்கள் உட்பட முன்னாள் தலைமைச் செயலாளரின் ஊழியர்கள் SIT-க்கு அளித்த சாட்சியங்கள் (சில பிரிவு 164 CrPC இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன). அவர்களில் ஒருவரையாவது அவரது பாதுகாப்புக்கு பயந்து SIT "பாதுகாக்கப்பட்ட சாட்சியாக" பட்டியலிட்டுள்ளது.

ஊழியர் ஒருவர் கூறுகையில், “வீட்டுக்கு வந்த (பெண்கள்) விருந்தினர்களைப் பற்றி நான் எப்போதாவது பேசினால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அப்போதைய தலைமைச் செயலாளரால் மிரட்டப்பட்டேன்,” என்றார்.

ஊழியர் உட்பட பலர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினர், மேலும் 20-25 பெண்களை அவர் முன்னாள் தலைமைச் செயலாளரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக, A&N போலீசில் அசல் புகாரிலும் பின்னர் எஃப்.ஐ.ஆரிலும் 21 வயது பெண் விவரித்த வரிசைக்கு "பொருந்தும்" வருகைகளின் முறையுடன் குற்றம்சாட்டினர்.

குறைந்த பட்சம் ஒரு ஊழியர் SITயிடம் சாட்சியமளித்தார், அவர் அடிக்கடி உள்ளூர் உணவகத்தில் இருந்து உணவை எடுத்து, தலைமைச் செயலாளரின் வீட்டில் பரிமாறும்போது, "பெண்களை அழைத்துச் சென்று" பின்னர் பெண்களை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இறக்கிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 21 வயது பெண்ணின் இரண்டு வருகைகளுக்குப் பிறகும், தலைமைச் செயலாளரின் குறைந்தது இரண்டு "விருந்தினர்கள்" அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று பணியாளர் கூறினார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய 21 வயதான பெண், எஸ்.ஐ.டி.,க்கு “ஒவ்வொரு நிமிட விவரங்களையும்” வழங்கியதாகக் கூறினார். தனது இரண்டு வருகைகளிலும், ஊழியர்களை உள்ளே அடைத்து வைப்பதற்காக சமையலறையின் கதவு வெளியில் இருந்து பூட்டப்பட்டதைக் கண்டதாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்கியவர் ஒரு "ஓட்டுனர்" என்றும் அவர் கூறினார்.

வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தனது கைப்பேசியை வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், தன்னை தொழிலாளர் ஆணையர் ரிஷியிடம் அறிமுகப்படுத்திய ஹோட்டல் உரிமையாளர் ரிங்குவும், ரிஷியும் பாலியல் வன்கொடுமை குறித்து யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் அந்த பெண் கூறினார். ரிங்கு தற்போது தலைமறைவாக உள்ளார்.

அந்தப் பெண் தனக்கும் ரிங்குவுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் ஆடியோ உரையாடலையும் SITயிடம் கொடுத்துள்ளார், அதில் ரிங்கு வெளியில் சொல்லக்கூடாது என எச்சரித்து அவருக்கு அரசு வேலை தருவதாக உறுதியளித்தார். பின்னர் அந்த பெண் SIT ஆல் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் மற்றும் விசாரணையாளர்களுக்கு நிகழ்வுகளை மறுகட்டமைக்க உதவுவதற்காக பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தான் அழைத்துச் செல்லப்பட்ட காரை அந்த பெண் அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.

“எனக்கு வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் பலமுறை உறுதியளித்தனர். பிறகு இதெல்லாம் நடந்தது, ரிஷி என்னிடம் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டுவிட்டார், வேலை இல்லை என்று சொன்னதும், நான் காவல்துறைக்கு செல்ல முடிவு செய்தேன்,” என்று அந்தப் பெண் கூறினார்.

கல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கிய முன்னாள் தலைமைச் செயலாளரின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சாத்தியமான அனைத்து விரிவான ஆதாரங்களையும் சேகரித்துவிட்டதாகவும், அடுத்த சில வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் எஸ்.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலை தேடி, ஹோட்டல் உரிமையாளர் ரிங்கு மூலம் ரிஷிக்கு அறிமுகமானதாகவும், ரிஷி தன்னை நரேனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். அங்கு, தனக்கு மதுபானம் வழங்கப்பட்டதாகவும், அதை அவர் மறுத்துவிட்டதாகவும், அரசு வேலை உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார். பின்னர், அந்த இரண்டு ஆண்களும் தன்னை கொடூரமாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மீண்டும் இரவு 9 மணிக்கு தலைமைச் செயலாளரின் இல்லத்திற்கு தன்னை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டதாக அந்தப் புகாரில் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Andaman Nicobar Island
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment