Padma Bhushan: குலாம் நபி ஆசாத் விவகாரம் நாளுக்கு நாள் யூகங்களுக்கு மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்து குலாம் நபி நீக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் மாற்றம் தேவை என்று கூறி வந்த ஜி23 தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்தை உத்தரப்பிரதேசத்தின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
செவ்வாய்க் கிழமை அன்று பாஜக அரசு வெளியிட்டுள்ள பத்ம பூஷன் விருது பட்டியலில் ஆசாத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த விருதைப் பெறும் முதல் காங்கிரஸ் தலைவராகிறார் குலாம் நபி ஆசாத். இதற்கு முன்பு ப்ரனாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் அது குடியரசுத் தலைவராக அங்கம் வகித்த பின்னரே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசாத் ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பல கட்ட பிரச்சாரங்களை நடத்தி வருகின்ற நிலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த இரண்டு அறிவிப்புகள் மேலும் பல சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்து ஆசாத் நீக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த பிரச்சாரத்தை அவர் ஜம்மு காஷ்மீரில் நடத்த துவங்கினார். ஏற்கனவே கட்சித் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று பலவிதமான கோரிக்கைகளை ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியினர் வைத்து வந்த நிலையில், ஆசாத்திற்கு நெருக்கமாக கருதப்பட்ட 20 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிரடி காட்டினர்.
காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்து நீக்கப்பட்டார் குலாம் நபி ஆசாத்
ஆசாத்துடன், ஜி23 தலைவர்களில் ஒருவரான முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா பெயரும் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஒரு சில முறை சம்பிரதாயத்திற்கு மட்டுமே சில செயல்பாடுகளுக்காக இவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். பெரும்பான்மை சமயங்களில் கட்சித் தலைமை இந்த தலைவர்களை புறக்கணித்து வந்தது. தற்போது வந்திருக்கும் இந்த அறிவிப்பை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது தெளிவில்லை. ஜி23 தலைவர்களில், முன்னாள் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான ஆசாத் இதில் மூத்த உறுப்பினர்.
உ.பி.யில் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பலமுறை ஆசாத் பணியாற்றியுள்ளார். அவருக்கு இந்த பிராந்தியம் குறித்து அதிகம் தெரியும். கிட்டத்தட்ட அனைத்து மூத்த உ.பி தலைவர்களுடனும் தனிப்பட்ட உறவைப் பகிர்ந்து கொள்கிறார், மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் பலமுறை பிரச்சாரம் செய்துள்ளார் என்று ஆசாத்தின் தேர்வு குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி.சட்டசபைத் தேர்தலின் போது ஆசாத் சமாஜ்வாடி கட்சியுடன் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டணியை உறுதி செய்து காங்கிரஸுக்கு 114 இடங்களை பெற்றுக் கொடுத்தார். ஆனாலும், உ.பியில் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவை சந்தித்து வருகிறது என்பது வேறு விஷயம்.
அதே போன்று ஹூடா காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான ஜாட் இன தலைவர். ஜாட் மக்கள் அதிகம் வாழும், கரும்பு உற்பத்திக்கு பெயர் போன உ.பி.யின் மேற்கு பகுதியில் காங்கிரஸுக்கு உதவும் வகையில் இவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்று கூறலாம்.
உ.பி. தேர்தலில் கணிசமான இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற இவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொண்டாலும், இது போன்று இதற்கு முன்பு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் இவர் பெயர் இடம் பெறவில்லை. 2016ம் ஆண்டு மே.வங்க சட்டமன்ற தேர்தல் மற்றும் பீகார் 2020 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் ஆசாத் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், காங்கிரஸ் தலைமையுடன் ஆசாத்திற்கு ஏற்பட்டிருக்கும் பிணக்கு குறித்து ராகுல் காந்தி கூறியதாக சில விசயங்களை சாம்னா இதழில் எழுதினார். “ராகுல் காந்தி ஆசாதை ஜம்மு காஷ்மீருக்கு திரும்பி செல்லும்படியும், பிரச்சாரத்தில் ஈடுபடும் படியும் கூறியுள்ளார். அப்போது தான் அவர் ஜம்மு காஷ்மீரில் முதல்வராக மீண்டும் வருவார் என்று ராகுல் கூறியுள்ளார். அதற்கு ஆசாத் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். “மூத்த தலைவர்களுக்கு கட்சி நிறைய கொடுக்கிறது. ஆனால் தற்போது இத்தகைய தலைவர்கள் கட்சிக்கு தேவை. ஆனாலும் அவர்கள் மற்றொரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். நான் இதில் என்ன செய்ய இயலும்? நான் அப்படி என்ன ஆசாத்திடம் மரியாதை இன்றி நடந்து கொண்டேன்? என்று ராகுல் கூறியதாக ராவத் எழுதியுள்ளார்.
இது குறித்து ஜி23 தலைவர்களில் ஒருவரிடம் கேட்ட போது, நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் ஆசாத் பெயர் இடம் பெற்றிருப்பது ஒரு கேலிகூத்து, இது எப்படி முக்கியமாகும். பிரச்சாரத்தில் யார் பங்கேற்க போகிறார்? முதல் கட்ட உ.பி. தேர்தல் பிரச்சாரங்கள் ஏதும் இன்றியே நடந்து முடிந்துவிடும். காங்கிரஸ் இந்த நட்சத்திர பேச்சாளர்களுக்காக ஏதேனும் திட்டங்கள் வைத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா? 30 பெயர்கள் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கலாம். ராகுல் மற்றும் ப்ரியங்காவை தவிர ஆனால் யாரும் எங்கேயும் போகப்போவதில்லை. அவர்களுக்காக மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
உண்மை தன்மை இல்லாத காரணத்தால் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி அன்று எட்டப்பட்ட புரிதல் சுக்குநூறாக உடைந்து சிதறிவிட்டது. ஜி-23 தலைவர்களின் முக்கிய குழுவுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடத்திய ஐந்து மணி நேர சந்திப்பை அவர் குறிப்பிட்டு பேசிய அவர் தினமும் கடிதம் எழுதிக் கொண்டே இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.