மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கலந்து கொள்கிறார். இதை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் பலோச் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகள் எப்போதும் இல்லாத வகையில் சிக்கலாக உள்ள நிலையிலும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை 2011 இல் இந்தியா வந்த கடைசி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் ஆவார்.
இதையும் படியுங்கள்: அதிகரிக்கும் கொரோனா; தடுப்பூசி எடுத்துக் கொள்வோர் எண்ணிக்கை சரிவு; மாநிலங்களுக்கு சப்ளையை நிறுத்திய மத்திய அரசு
இந்த ஆண்டு ஜனவரியில், எஸ்.சி.ஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பாகிஸ்தானுக்கு இந்தியாவின் அழைப்பு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலில் செய்தி வெளியிட்டது.
இந்தியாவில் நடைபெறும் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பதை அறிவித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், “இந்த கூட்டத்தில் பங்கேற்பது SCO சாசனம் மற்றும் செயல்முறைகளில் பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது மற்றும் அதன் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளில் பிராந்தியத்திற்கு பாகிஸ்தான் வழங்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியை மே முதல் வாரத்தில் எஸ்.சி.ஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு கோவா வருமாறு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடமிருந்து அழைப்பு அனுப்பப்பட்டது.
சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்களைக் கொண்ட எஸ்.சி.ஓ.,வில் இந்தியாவும் பாகிஸ்தானும் உறுப்பினர்களாக உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil