Pakistan Jet Violates Indian Airspace: பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நேற்று (பிப்.26) இந்தியா தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் இன்று(பிப்.27) ஜம்மு காஷ்மீரின் ரஜவ்ரி மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியிலும், பூன்ச் பகுதியிலும் பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறியுள்ளன என்றும், அவற்றை இந்திய விமானப்படை விரட்டியடித்துள்ளன என்றும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை, இச்சம்பவம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. “பாகிஸ்தானின் ஜெட் விமானங்கள், இன்று காலை நவ்ஷேரா பகுதியில் அத்துமீறி நுழைந்தன” என்று பிடிஐ தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று காலை பட்கம் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், இரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அத்துமீறல் குறித்த Updates
07:20 PM – விங் கமாண்டர் அபிநந்தன் புகைப்படம் வெளியான பிறகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் வெளியிட்டுள்ள இந்திய விமானப்படை வீரரின் முகம் மிக மோசமாக காணப்படுகிறது. இதன்மூலம், உலக மனித உரிமை சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது. இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறது. அவர் பத்திரமாக உடனே நாடு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
06:40 PM – “பாகிஸ்தான் கஸ்டடியில் ஒரேயொரு இந்திய பைலட் மட்டுமே உள்ளார். விங் கமாண்டர் அபி நந்தனுக்கு ராணுவ மரபுப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என பாகிஸ்தான் ஆயுதப் படையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
There is only one pilot under Pakistan Army’s custody. Wing Comd Abhi Nandan is being treated as per norms of military ethics. pic.twitter.com/8IQ5BPhLj2
— Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) 27 February 2019
05:35 PM – செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, “பிப்ரவரி 14-ம் தேதி, 2019-ல் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, நமது ஆயுதப்படைகளின் நடவடிக்கைகளை, 21 எதிர்கட்சிகளின் தலைவர்கள் பாராட்டுகிறோம்” என்றார்.
05:30 PM – எல்லையில் பாதுகாப்பு நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள், கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது
Joint statement issued by 21 opposition parties. @IndianExpress pic.twitter.com/mFls6sGACh
— Manoj C G (@manojcg4u) February 27, 2019
05:25 PM – பாகிஸ்தான் துணை உயர் ஆணையர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சவுத் பிளாக்கிற்கு வருகை.
05:20 PM – இந்த பதட்டமான சூழலில்,பாகிஸ்தானின் துணை தூதரகத்திற்கு சம்மன் அனுப்பியிருப்பதாகவும், பாகிஸ்தான் ராணுவ விமானம் இந்திய ராணுவ தளபதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளது வெளியுறவு அமைச்சகம்.
04:47 PM – புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் டெல்லியிலிருந்து லாகூர் செல்லும் சம்ஜ்ஹாதா எக்ஸ்பிரஸை நிறுத்த சொல்லி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என ரயில்வே வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்திருக்கின்றன. ஏ.சி-யில் 4, நான் ஏ.சி-யில் 22 என மொத்தம் 26 பயணிகள் இந்த ரயிலில் முன்பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
04:39 PM – நான் இந்தியாவிடம் கேட்கிறேன், உங்களிடம் இருக்கும் அதே ஆயுதங்கள் எங்களிடமும் உள்ளது. நாம் தவறான மதிப்பைப் பெற வேண்டுமா? இந்த பதட்டம் அதிகரித்தால், அது என் கட்டுபாட்டிலோ, இந்திய பிரதமரின் கட்டுபாட்டிலோ இருக்காது. அதனால் இருவரும் அமர்ந்து பேசி தீர்வு காண்போம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
04:34 PM – தொலைக்காட்சி நேரலையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் எல்லையை தாண்டி வந்த 2 மிக் ரக விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். ”எவ்வித சேதமும், உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பது தான் எங்களது திட்டம். ஆனால் எங்களது திறனைக் காட்ட விரும்பினோம். 2 மிக் ரக விமானங்கள் பாகிஸ்தான் எல்லையைக் கடந்து வந்ததால், அதனை சுட்டு வீழ்த்தினோம். நல்லொழுக்கத்தை வென்றெடுக்க வேண்டும் என இப்போது நான் இந்தியாவிடம் கூறுகிறேன்.
04:00 PM – இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நிலவும் பதட்டமான சூழலில், நேபால் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ”ஜம்மூ-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிலவிவரும் பதட்டமான சூழலால் நேபால் அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. இரு நாடுகளும் மக்களின் பாதுகாப்பையும், அமைதியையும் கருத்தில் கொண்டு அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என சார்க் அமைப்பின் தற்போதைய தலைமையகமான நேபாளம் கேட்டுக் கொள்கிறது. அதோடு பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னைக்கு தீர்வு காணும்படி இரு நாடுகளையும் வலியுறுத்துகிறோம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
03:39 PM – காணாமல் போயிருக்கும் இந்திய விமானி குறித்து, பாகிஸ்தான் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
03:27 PM – இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்நாடு தெரிவிக்கிறது – வெளியுறவுத்துறை அதிகாரி ரவீஷ் குமார்.
03:26 PM – விமானப்படை மார்ஷல் ஆர்.ஜி.கே கபூர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரி ரவீஷ் குமார், செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தியாவை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், ஆனால் வெற்றிகரமாக அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டதாகவும், இந்திய விமானப் படையின் பதில் தாக்குதலில், பாகிஸ்தான் விமானம் ஒன்றும் சுடப்பட்டதாகவும், ரவீஷ் தெரிவித்திருக்கிறார்.
03:20 PM – ஜம்மூ, லே மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட்ட 7 விமான நிலையங்களில், விமான சேவைகள் மீண்டும் தொடங்கின.
03:13 PM – வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே பிற்பகல் 03:15 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
02:55 PM – இந்தியா – பாகிஸ்தானில் நிலவும் பதட்டமான சூழலையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாட்டு பிரதமர்களையும், தொலைபேசியில் தொடர்பு கொள்வார் எனத் தெரிகிறது.
02:40 PM – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாட்டு மக்களிடையே இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற இருக்கிறார்.
02:30 PM – ‘இந்தியா-பாகிஸ்தான் அமைதி காக்க வேண்டும்’ என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு கங் கூறுகையில், “சீனா தனது நிலையில் தெளிவாக உள்ளது. இரு நாடுகளும் பதட்டமான சூழ்நிலைகளை தவிர்த்து, பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியும், நிலைத்தன்மையும் நீடிக்க உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
02:20 PM – பிடிஐ செய்தி நிறுவனத்தின் அறிக்கை படி, ‘டெல்லிக்கு வடக்கே உள்ள வான் பகுதி முழுவதிலும் பயணிகள் விமானகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
02:10 PM – இந்தியாவின் MiG29 ரகத்தைச் சேர்ந்த இரண்டு போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், ஒன்று இந்திய பகுதியிலும், மற்றொன்று பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும் விழுந்ததாக தெரிகிறது. அதேபோல், பாகிஸ்தானைச் சேர்ந்த F16 விமானத்தை இந்திய படைகள் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.
02:00 PM – பாகிஸ்தான் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னை விங் கமாண்டர் அபிபானந்தன் என்று குறிப்பிடுகிறார்.
01:57 PM – இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் ஆப்கனில் நிலவும் அமைதியை குலைக்கும் என தலிபான் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா தனது நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும். பதட்டமான இந்த சூழ்நிலை தொடர்வது, ஆப்கனின் அமைதியை குலைத்து விடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
01:42 PM – ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், உயர்மட்ட அளவிலான ஆலோசனை நடைபெற்று வருகிறது. எல்லைப் பாதுகாப்பு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
01:26 PM – ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் லே (Leh) பகுதி விமான நிலையங்களைத் தொடர்ந்து, அம்ரிஸ்டரில் உள்ள விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.
01:20 PM – உயர் மட்ட அளவிலான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானின் F-16s விமானம் இன்று(பிப்.28) காலை எல்லையை கடந்து வந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் வெடிபொருட்கள் வீசி தாக்குதலும் நடத்தின. ஆனால், பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
01:12 PM – போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்… ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பணி தீவிரம்…
01:00 PM – இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் விமானங்கள் எல்லையைத் (LoC) தாண்டிச் சென்றன. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்கவும் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தாமல் எல்லையை தாண்டிச் சென்று வந்திருக்கின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இந்த அத்துமீறல் எங்கள் உரிமையை நிலைநாட்டவும், எங்களது வலிமையை வெளிக்காட்டவும்” மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
12:45 PM – ரஜவ்ரி பகுதியில், பாகிஸ்தான் மக்கள் வசிப்பிடத்தில் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஜம்முவின் அக்னூர் பகுதியில் உள்ள பல்லன்வாலா மற்றும் லாலேலி ஆகிய இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், பூன்ச் பகுதியில் உள்ள மன்கோட்டில் நடத்திய தாக்குதலில் இரு வீடுகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
12:35 PM – பாகிஸ்தான் விமானங்களின் அத்துமீறலைத் தொடர்ந்து, ஸ்ரீநகர், ஜம்முவில் பயணிகளின் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.