3 மாநில முதல்வர்கள் : சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. இதில் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றி பெற்று, அங்கு இரண்டாம் முறையாக கே.சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க உள்ளார். அதே போல் மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி வெற்றி பெற்று, அங்கு ஆட்சி அமைய உள்ளது.
மேலும் படிக்க : இத்தனை நலத்திட்டங்கள் செய்தும் பாஜக தோல்வியுற்றது ஏன் ?
3 மாநில முதல்வர்கள் : மத்தியப் பிரதேசம்
கடந்த 15 வருடங்களாக பாஜகவின் கோட்டையாக திகழ்ந்து வந்தது மத்தியப் பிரதேசம் மாநிலம். சிவராஜ் சிங் சௌஹான் இம்மாநில முதல்வராக மூன்று முறை ஆட்சி செய்து வந்தார். 230 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் 116 இடத்தில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக 109 இடங்களில் வெற்றி அடைந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தங்களில் ஆதரவினை காங்கிரஸ்ஸிற்கு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ம.பி.யில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்.
முதல்வர் பதவிக்கு தற்போது இருவர் மத்தியில் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் மூத்த உறுப்பினரும், முன்னாள் முதல்வர் கமல் நாத் மற்றும் குவாலியர் ராஜ குடும்பத்தின் வாரிசான ஜோதிராதித்ய சிந்தியா (47 வயது) மத்தியில் யார் முதல்வர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
72 வயதான கமல் நாத் காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே பல்வேறு பதவிகள் வகித்து வந்தார். தற்போதைய ம.பி. மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். சிந்த்வாரா தொகுதியின் எம்.பி. ஆக தற்போது செயல்பட்டு வரும் கமல் நாத் ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாரை முதல்வராக தேர்வு செய்யலாம் என ஏ.கே. அந்தோணி மற்றும் ஜித்தேந்தர் சிங் இருவர் முன்னிலையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் எம்.எல்.ஏக்களின் தேர்வு மற்றும் தங்களின் தனிப்பட்ட தேர்வாக கமல் நாத் இருக்கிறார்.
மேலும் ம.பி.யின் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கின் ஆதரவும் கமல்நாத்திற்கு தான் இருக்கிறது. ஜோதிர் ஆதித்ய சிந்தியா, குணா தொகுதியின் எம்.பியாக செயல்பட்டு வருகிறார். இளம் தலைமுறை மற்றும் குறைவான அனுபவம் காரணமாக இவரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
3 மாநில முதல்வர்கள் - ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்திலும் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டிற்கும் மத்தியில் முதல்வர் பதவிக்கான போட்டி நிலவி வருகிறது.
200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் 11ம் தேதி வெளியிடப்பட்டது. 99 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 73 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ராஷ்ட்ரிய லோக்தந்ரிக் கட்சி மூன்று இடங்களிலும், பாரதிய பழங்குடி கட்சி 2 இடங்களிலும் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களை வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன. சுயேட்சைகள் கட்சிகள் 13 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர் ராஜேஷ் பைலட்டின் மகன் தான் சச்சின் பைலட். 2009 மற்றும் 2014ம் ஆண்டு எம்.பியாக பதவி வகித்திருக்கிறார். டோங் தொகுதியில் தற்போது தன்னுடைய வெற்றியினை பதிவு செய்திருக்கிறார் சச்சின் பைலட். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார் அசோக் கெலாட். ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக ஏற்கனவே 2 முறை பதவி வகித்த அசோக் தற்போது சர்தார்புரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம்
மத்தியப் பிரதேச மாநிலத்தைப் போலவே சத்தீஸ்கர் மாநிலத்திலும் 3 முறை பாஜக ஆட்சி செய்தது. ஆனால் இம்முறை 67 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 15 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 பேர் முதல்வர் பதவிக்காக போட்டியிடுகின்றனர். குர்மி சமூகத்தைச் சேர்ந்த பூபேஷ் பாகல், தமர்த்வார் சாஹூ மற்றும் டி.எஸ். சிங்டியோவும் முதல்வர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த சோனியா காந்தி பின்பு ராகுல் காந்தியை தலைவராக்கினார். அதே போல் 3 மாநில முதல்வர்கள் தேர்வில் இளைஞரைத் தேர்வு செய்வாரா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.