Advertisment

மே.வங்க அமைச்சர் கைது: போராட்டத்தை தவிர்த்து அமைதி காக்கும் மம்தா

மம்தா பல ஆண்டுகளாக தனது கட்சித் தலைவர்கள் கைதுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால் பார்த்தா சாட்டர்ஜி விவகாரத்தில் அடக்கி வாசிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

author-image
WebDesk
Jul 25, 2022 11:18 IST
New Update
மே.வங்க அமைச்சர் கைது: போராட்டத்தை தவிர்த்து அமைதி காக்கும் மம்தா

Atri Mitra 

Advertisment

No protests for Partha: Minister in ED net but Mamata & TMC play waiting game: "நீங்கள் அவர்களை கைது செய்திருந்தால் என்னையும் கைது செய்ய வேண்டும்." மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) கடந்த ஆண்டு மேற்கு வங்க அரசின் இரண்டு அமைச்சர்கள், திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்.எல்.ஏ மற்றும் அக்கட்சியுடன் தொடர்புடைய ஒரு தலைவர் ஆகியோரை கைது செய்தபோது, ​​முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்திற்கு விரைந்து வந்து ஆறு மணி நேரம் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினார். அவருடன் அங்கு வந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் கூற்றுப்படி, நாரதா லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரையும் நிபந்தனையின்றி விடுவிக்க மம்தா பானர்ஜி கோரினார், மேலும் அவர்களை விடுவிக்க முடியாவிட்டால் தன்னையும் (மம்தாவையும்) கைது செய்யுமாறு மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ இடம் கேட்டுக் கொண்டார்.

ஆனால், பார்த்தா சாட்டர்ஜிக்கு அத்தகைய எதிர்ப்பு அல்லது கட்சி ஒன்றுபட்டு இருத்தல் போன்ற எதுவும் வரவில்லை. கடந்த சனிக்கிழமையன்று ஜோகாவில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்து மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு வெளியே வந்த மாநிலத் தொழில்துறை அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜியிடம், மம்தா பானர்ஜியை தொடர்பு கொள்ள முயற்சித்தீர்களா என்று கேட்கப்பட்டபோது, "நான் முயற்சித்தேன் ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை," என்று அவர் பதிலளித்தது, பள்ளி ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பான அமலாக்க இயக்குநரகம் (ED) விசாரணையின் திருப்பங்களை காத்திருந்து பார்க்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்: 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதற்கு தயாராகி வருகிறது நாடு – ராம்நாத் கோவிந்த்

2019 ஆம் ஆண்டு சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக கொல்கத்தா காவல்துறை கமிஷனர் ராஜீவ் குமாரைக் கைது செய்ய சி.பி.ஐ மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் எஸ்பிளனேட் பகுதியில் இரண்டு நாட்கள் தர்ணா (உள்ளிருப்பு) நடத்தியதைக் கருத்தில் கொள்ளும்போது, தற்போதைய விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தெருப் போராட்டங்களோ அல்லது முதல்வரின் கண்டன அறிக்கைகளோ இல்லாதது மிகவும் வியக்கத்தக்கது. 2017 ஆம் ஆண்டு ரோஸ் வேலி சிட் ஃபண்ட் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுதீப் பந்தோபாத்யாய் கைது செய்யப்பட்டபோது பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார். கடந்த ஆண்டு சி.பி.ஐ கைது செய்த நான்கு தலைவர்களில் ஒருவரான மதன் மித்ராவை சாரதா வழக்கு தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.ஐ காவலில் எடுத்தபோது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய நட்பு வட்டமான அர்பிதா முகர்ஜியின் கொல்கத்தா டோலிகங்கே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கணக்கில் வராத ரூ.21.2 கோடி பணம், வெளிநாட்டு கரன்சி, ஆபரணங்கள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றியதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில், பள்ளி ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையின் நிலை மோசமாக உள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். மாடல் மற்றும் நடிகையான அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டுள்ளார். அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நடந்த சோதனையைத் தொடர்ந்து, பணக் குவியலின் புகைப்படத்தை அமலாக்கத்துறை ட்விட்டரில் பதிவிட்டது.

"இது கட்சிக்கு பெரும் சங்கடமாக உள்ளது," என்று மூத்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி கூறினார். மேலும், “முன்பு, அமலாக்கத்துறை அல்லது CBI யால் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது, ​​எங்கள் தலைமை எப்போதும் அவர்களுக்குத் துணையாக நின்றது. ஆனால், இந்த முறை பெரும் தொகை மீட்கப்பட்டது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை ரெய்டுக்கு ஒரு நாள் முன்னதாக, மெகா ஷஹீத் திவாஸ் பேரணியில், அபிஷேக் பானர்ஜி கட்சி தொண்டர்களிடம், திரிணாமுல் காங்கிரஸில் ஊழல் தலைவர்களுக்கு இடமில்லை என்று கூறினார். அடுத்த 48 மணி நேரத்திற்குள், அவரது நெருங்கிய உதவியாளரின் குடியிருப்பில் இருந்து 20 கோடி ரூபாய்க்கு மேல் மீட்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட ஒரு தலைவரின் பக்கத்தில் கட்சி எப்படி நிற்கும்?,” என்றும் அந்த நிர்வாகி கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸின் பதில், அடக்கமாக இருந்தாலும், பார்த்தா சாட்டர்ஜி தன்னைத்தானே முழுவதுமாகத் தற்காத்துக் கொள்ள விட்டுவிடும் ஒரு உத்தியைக் கையாள்வதில் ஈடுபடவில்லை. கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் ஞாயிற்றுக்கிழமை மூத்த அமைச்சருக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கு குறித்து குறுகிய காலத்திற்குள் விசாரணையை முடிக்க கோரினார் மற்றும் அர்பிதா முகர்ஜிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

சில வழக்குகளில் மத்திய ஏஜென்சிகளின் விசாரணைகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன என்பதை சுட்டிக்காட்டி, "இந்த வழக்கில் குறுகிய கால விசாரணையை கட்சி கோருகிறது," என்று குணால் கோஷ் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், சாரதா வழக்கை 2014 முதல் சி.பி.ஐ விசாரித்து வருவதாகவும், 2016 தேர்தலுக்கு முன்னதாக வெளிவந்த நாரதா வழக்கு இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

”இத்தகைய தாமதங்கள் ஏற்கத்தக்கவை அல்ல, திரிணாமுல் காங்கிரஸின் போட்டியாளர்கள் கட்சியின் மீது "தவறான அபிமானங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக இதைப் பயன்படுத்துவார்கள்" என்று செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறினார். மேலும், "அமலாக்கத்துறை தனது குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் ஆதாரத்தை சமர்ப்பித்தால், நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டால், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அரசாங்கம் சம்பந்தப்பட்டத் தலைவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கையைத் தொடங்கும்," என்றும் அவர் கூறினார்.

அர்பிதா முகர்ஜியைப் பற்றி கேட்டதற்கு, “எங்களிடம் அமலாக்கத்துறை தகவல் கிடைத்துள்ளது ... அதாவது பணம் மீட்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்துக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நாங்கள் தெளிவாகச் சொல்லி வருகிறோம். இது யாருடைய வீட்டிலிருந்து மீட்கப்பட்டதோ அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரல்ல,” என்று குணால் கோஷ் கூறினார்.

பார்த்தா சாட்டர்ஜியின் கைது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்க் கட்சிகள் வசைபாடியதுடன், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதன் கூற்றுக்களை நிராகரித்தனர். “இதெல்லாம் திரிணாமுல் காங்கிரஸின் நாடகம். பார்த்தா சாட்டர்ஜிக்கும் மம்தா பானர்ஜிக்கும் என்ன தொடர்பு என்பது மக்களுக்குத் தெரியும்” என்று சிபிஐ(எம்) எம்.பி பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா கூறினார்.

பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவரும், அக்கட்சியின் மேற்கு வங்க இணைப் பொறுப்பாளருமான அமித் மாளவியா கூறுகையில், “தற்போது சிறையில் இருக்கும் அவரது நெருங்கிய நம்பிக்கையாளரான பார்த்தா சாட்டர்ஜி மீதான மம்தா பானர்ஜியின் மௌனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தவிர வேறு எதையும் விளக்கவில்லை. ஒரு போலீஸ் அதிகாரியைப் பாதுகாக்க மம்தா சாலையில் இறங்கி போராடினார். பார்த்தா சாட்டர்ஜியிடம் இருந்து மம்தா பானர்ஜி தன்னை விலக்கிக் கொள்ள முயற்சிக்கலாம் ஆனால் அவர்களின் தொடர்பு நன்கு அறியப்பட்டதாகும்,” என்று கூறினார்.

இந்த ஊழல் நடந்ததாக கூறப்படும் போது பார்த்தா சாட்டர்ஜி மாநில கல்வி அமைச்சராக இருந்தார். அவர் மம்தா பானர்ஜியின் நம்பகமான தளபதிகளில் ஒருவராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை நெருக்கடி மேலாளராகவும் கருதப்படுகிறார். மம்தா பானர்ஜி 1998 இல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியபோது, ​​​​அவருடன் சேர தனது கார்பரேட் வேலையை விட்டுவிட்டு, முகுல் ராய் மற்றும் சுப்ரதா பக்ஷி ஆகியோருடன் பார்த்தா சாட்டர்ஜி முதல் மூன்று ஆலோசகர்களில் ஒருவரானார். பார்த்தா சாட்டர்ஜியை மம்தா முடக்கியது இது முதல் முறையல்ல. 2013 ஆம் ஆண்டில், பாலிமர் உற்பத்தியாளரின் இணை ஊக்குவிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அதன் 40 சதவீத பங்குகளை மாநில நிர்வாகம் விலக்கிக் கொள்ள முடியாது என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு, பார்த்தா சாட்டர்ஜி தொழில் துறை அமைச்சர் பொறுப்பை இழந்தார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மம்தா பானர்ஜியின் குட் புக்கில் இடம்பெற்றார் பார்த்தா சாட்டர்ஜி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Mamata Banerjee #West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment