ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழி தான் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ மொழி குழுவின் 37ஆவது கூட்டத்தில் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அரசை இந்தி மொழியைப் பயன்படுத்தி நடத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருக்கிறார். இது இந்தி மொழிக்கான முக்கியத்துவத்தை இன்னும் அதிகரிக்கும்.
நாட்டின் ஒற்றுமையை பறைசாற்ற நமக்கு ஒரு அலுவல் மொழி தேவை. நாட்டின் குடிமக்கள் பேசும் மொழி ஒரே மொழியாக இருக்கும்போது அது இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும்.
ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும். அது உள்ளூர் மொழியாக இருக்கக் கூடாது. பிற உள்ளூர் மொழிகளை கிரகித்துக் கொள்கிற மொழியாக இந்தி இருக்க வேண்டும்.
குறைந்தது 9ஆம் வகுப்பு வரையிலாவது இந்தி வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அமித் ஷா.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
வடகிழக்கில் இருந்து 22,000 இந்தி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் 70 சதவீத திட்டங்கள் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் 10ஆம் வகுப்பு வரை இந்தியை பள்ளிகளில் பயிற்றுவிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
அமித் ஷா தலைமை வகிக்கும் இந்தக் குழுவின் 11ஆவது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறோம்.
இந்தியாவின் கலாசாரமும், மதிப்பும் மொழியால் தான் பாதுகாக்கப்படுகிறது. கடந்த 2019இல் நடைபெற்ற இந்தி தின விழாவில் பேசி அமித் ஷா, ஒரு நாடு, ஒரு மொழி யோசனையை முன்வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன.
ஒவ்வொரு மொழியும் அதற்கே உரிய தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளன. ஆனாலும் நாடு முழுமைக்கும் ஒரு மொழி தேவை. அந்த மொழி இந்தியாகவே இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையில் நடத்தப்படும் தாக்குதல் இது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.
இதையும் படியுங்கள்: ‘ஒர்க் லைஃப் பேலன்ஸ் இதுதானா..!’ நெட்டிசன்களிடம் சிக்கிய சசி தரூர்!
அரசமைப்புச் சட்டத்தின் 29ஆவது பிரிவு பல்வேறு இந்திய மொழிகளை கெளரவித்துள்ள என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் கவுடா தெரிவித்திருந்தார்.
அப்போதிலிருந்து, அமித் ஷா மொழிக்கான தனது ஆதரவைக் குறைத்து, இந்தி வேறு எந்த பிராந்திய மொழியுடனும் போட்டியிடவில்லை என்றும் அவற்றை முழுமையாக்குகிறது என்றும் பலமுறை தெளிவுபடுத்தி வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil