PM Narendra Modi: பிரதமர் அறிவித்த ஊரடங்கு வரும் 14-ன் தேதியோடு முடியும் நிலையில், இன்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொளி மூலம் ஆல்லோசனை நடத்தினார் மோடி.
சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா – தமிழர்கள் உட்பட வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து பிரதமர் உருக்கம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் 24-ந் தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது பிரதமர் மோடி இதை அறிவித்தார்.இந்த முடக்கம் வரும் 14-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இருப்பினும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் மகாராஷ்டிரா உள்ளிட்ட, கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மாநிலங்கள் முடக்கத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. அதோடு, மக்களின் விருப்பத்துக்காக முடக்கத்தை தளர்த்தினால், மிகப்பெரிய உயிர்ச் சேதத்தை நாடு சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முடக்கத்தை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஊரடங்கு நடவடிக்கையை தொடங்கும் முன் மார்ச் 20-ந் தேதியும் மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம், பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு கடந்த 2-ந் தேதியும் அவர் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவே கவுடா உள்ளிட்ட தலைவர்களுடனும் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
அதோடு, கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி, நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய போது, அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்தனர். கொரோனா வைரஸின் தாக்கத்தை மனதில் கொண்டு, பல்வேறு மாநில முதல்வர்களும், ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்துகிறார்கள்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் மீண்டும் பேசினார். இதில் முதல்வர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில், முடக்கத்தை நீட்டிப்பது பற்றிய இறுதி முடிவை நாளையோ, நாளை மறுதினமோ மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 14-ம் தேதி முதல் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை நீக்கிவிட முடியாது என பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருப்பதால், ஒரு சில பகுதிகளில் அல்லது குறிப்பிட்ட சில மணி நேரம் ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.