Advertisment

'குடியரசுத் திருநாள் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கொண்டாட்டம்' - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
president ram nath kovind republic day 2020 address full speech - 'குடியரசுத் திருநாள் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கொண்டாட்டம்' - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரை

president ram nath kovind republic day 2020 address full speech - 'குடியரசுத் திருநாள் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கொண்டாட்டம்' - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரை

நாட்டின் 71-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

Advertisment

அதில், "71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு நம் நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் இந்தியாநாட்டின் அனைவருக்கும் என் இருதயபூர்வமான நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றிலிருந்து 70 ஆண்டுகள் முன்பு, ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நமது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அதற்கு முன்னரே கூட, இந்தத் தேதியின் சிறப்பான மகத்துவம் நிறுவப்பட்டு விட்டது. பூரண சுயராஜ்ஜியம் அடைந்த பின்னர் நமது நாட்டுமக்கள், 1930 முதல் 1947ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று பூரண சுயராஜ்ஜிய தினத்தைக் கொண்டாடி வந்தார்கள். ஆகையால் 1950ஆம் ஆண்டில், இதே வரலாற்றுச் சிறப்புமிக்க நாளன்று இந்தியாவைச் சேர்ந்த மக்களனைவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களின்பால் நமது நம்பிக்கையை வலியுறுத்தும் வகையில், ஒரு குடியரசு என்ற வகையில், நமது பயணத்தைத் துவக்கினோம். அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நாம் குடியரசுத் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

Padma Awards 2020: தமிழகத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

நவீன குடியரசின் நிர்வாக அமைப்பிலே 3 அங்கங்கள் இருக்கின்றன – சட்டமியற்றும் அவைகள், நிர்வாக அமைப்பு, நீதிமன்றம். இந்த மூன்று அங்கங்களும் சுதந்திரமானவையாக இருந்தாலும் கூட, ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாகவும் இருக்கின்றன, ஒன்றை ஒன்று சார்ந்தும் இருக்கின்றன. இருந்தாலும், மக்கள் தான் ஒரு நாட்டை உருவாக்குகிறார்கள். இந்திய நாட்டைச் சேர்ந்த நாம் தான் நமது குடியரசை இயக்குகிறோம். நமது பகிரப்பட்ட எதிர்காலம் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளும் மெய்யான சக்தியானது இந்திய நாட்டு மக்களான நம்மிடம் தான் அடங்கியிருக்கிறது.

நமது அரசியலமைப்புச் சட்டமானது, சுதந்திரமான மக்களாட்சியின் குடிமக்கள் என்ற முறையிலே, சில உரிமைகளை நமக்கு அளிக்கிறது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத் தான், நாம் அனைவரும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற அடிப்படையான ஜனநாயகக் குறிக்கோள்களின்பால், என்றும் மாறாத அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்போம் என்ற இந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நாட்டின் தொடர் வளர்ச்சி மற்றும் பரஸ்பர சகோதரத்துவத்திற்காக, இதுதான் மிகவும் உன்னதமான மார்க்கம். தேசப்பிதா காந்தியடிகளின் வாழ்க்கைச் சித்தாந்தங்களை ஏற்பதன் வாயிலாக, இந்த அரசியலமைப்புச் சட்டக் குறிக்கோள்களைப் பின்பற்றும் செயல்பாடு மேலும் சுலபமானதாக மாறி விடுகிறது. இப்படிச் செய்வதன் மூலம், நாமனைவரும் காந்தியடிகளின் 150ஆவது ஜெயந்தியை மேலும் பொருளார்ந்த நிகழ்வாக பரிமளிக்கச் செய்ய முடியும்.

25, 2020

என் பிரியமான நாட்டுமக்களே, மக்கள் நலன் பொருட்டு, அரசு பல இயக்கங்களை செயல்படுத்தி வருகிறது. குடிமக்கள் தன்னிச்சையாக இந்த இயக்கங்களை, அனைவருக்கும் விருப்பமானவையாக மாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் பங்களிப்பு காரணமாக, தூய்மை இந்தியா இயக்கம் மிகக்குறைவான காலத்தில், மெச்சத்தகுந்த வெற்றியைக் கண்டிருக்கிறது. பங்களிப்பின் இந்த உணர்வு, வேறுபல துறைகளிலும் செய்யப்பட்டுவரும் முயற்சிகளிலும் பிரதிபலிப்பதை நம்மால் காண முடிகிறது. அது சமையல் எரிவாயு மீதான மானியத்தைத் துறப்பதாக இருக்கட்டும், அல்லது டிஜிட்டல்முறை பணம் செலுத்தலுக்கான ஊக்கமாகட்டும். பிரதம மந்திரி உஜ்வலா திட்டம் என்ற சமையல் எரிவாயு வழங்கல் திட்டம் படைத்திருக்கும் சாதனைகள் பெருமிதம் கொள்ளத்தக்கவை. இலக்கை நிறைவேற்றும் அதே வேளையில், 8 கோடி பயனாளிகள் இந்தத் திட்டத்தினால் பயனடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக, தேவை இருக்கும் மக்களுக்கு இப்போது தூய்மையான எரிபொருள் வசதி கிடைத்து வருகிறது. பிரதம மந்திரி அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கல் திட்டமான சௌபாக்கியா திட்டம், மக்களின் வாழ்க்கையில் புதிய ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது. இந்தியப் பிரதமரின் விவாயிகள் கௌரவக் கொடை வாயிலாக 14 கோடிக்கும் அதிக விவசாய சகோதர சகோதரிகளுக்கு ஆண்டொன்றுக்கு 6000 ரூபாய் குறைந்தபட்ச வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இதன் வாயிலாக நமக்கெல்லாம் அன்னம் படைப்போர், கௌரவமாக வாழ உதவி கிடைக்கிறது.

பெருகிவரும் நீர்ப்பற்றாக்குறை என்ற சங்கடத்தை எதிர்கொள்ள ஜலசக்தி அமைச்சகம் உருவாக்கப் பட்டிருக்கிறது; மேலும் நீர்ப் பாதுகாப்பு - வழங்கல் ஆகியவற்றுக்கு முதன்மை அளிக்கப்பட்டு வருகிறது. ஜல ஜீவன் இயக்கமும்கூட, தூய்மை பாரத இயக்கத்தைப் போலவே, ஒரு மக்கள் இயக்கமாகப் பரிமளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

அரசின் ஒவ்வொரு கொள்கைத்திட்டத்தின் பின்புலத்திலும், ஏழைகளின் நலன்களோடு கூடவே, அனைத்திலும் நாட்டிற்கே முதன்மை என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது. ஜி.எஸ்.டியை அமல் செய்ததன் வாயிலாக ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை என்ற குறிக்கோளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதோடு கூடவே, ஈ-நாம் திட்டம் வாயிலாகவும், ஒரு நாட்டிற்காக ஒரு சந்தையை உருவாக்கும் செயல்பாடு பலப்படுத்தப்பட்டு வருகிறது; இதன் வாயிலாக விவசாயிகள் பலன் அடைவார்கள். அது ஜம்மு கஷ்மீரம் லடாக்காகட்டும், வடகிழக்குப் பகுதியாகட்டும், அல்லது இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் நமது தீவுக்கூட்டங்கள் ஆகட்டும், நம் நாட்டின் ஒவ்வொரு பாகத்திற்கும் முழுமையான முன்னேற்றம் ஏற்படுவதில் செரிவான ஈடுபாட்டோடு இருக்கிறோம்.

25, 2020

நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு உறுதியான உள்நாட்டுப் பாதுகாப்பு முறை மிகவும் அவசியமான ஒன்று. ஆகையால், அரசின் உள்நாட்டுப் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்த, பல சிறப்பான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஆரோக்கியம் மற்றும் கல்வி வசதிகள் அனைவருக்கும் கிடைக்க, நல்ல நிர்வாகம் அடித்தளங்களாகக் கருதப்படுகின்றன. கடந்த ஏழு பத்தாண்டுகளில் நாம் இந்தத் துறைகளில் ஒரு நீண்ட பயணத்தைத் தீர்மானம் செய்திருக்கிறோம். அரசு தனது சீரிய சிறப்பான திட்டங்கள் வாயிலாக, உடல்நலத் துறையில் விசேஷமான அழுத்தத்தை அளித்து வருகிறது. பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரதம் போன்ற திட்டங்கள் வாயிலாக, ஏழைகளின் நலன்கள் குறித்த புரிந்துணர்வு வெளிப்படுத்தப்படுவதோடு, அவர்களுக்கு சிறப்பான ஆதாயங்களும் கிடைத்து வருகின்றன. ஆயுஷ்மான் பாரதம் திட்டமானது உலகின் மிகப்பெரிய மக்கள் உடல்நலத் திட்டமாகி விட்டது என்பது நம் அனைவருக்குமே தெரியும். சாமான்ய மக்களுக்கு, உடல்நலச் சேவைகள் கிடைத்தல் மற்றும் அவற்றின் தரம் ஆகிய இரண்டிலுமே மேம்பாடு காணப்பட்டிருக்கிறது. மக்கள் மருந்தகங்கள் வாயிலாக மிக மலிவான விலைகளில் தரம்வாய்ந்த ஜெனரிக் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருப்பதால், சாதாரணக் குடும்பங்களில் சிகிச்சைக்கான செலவினம் குறைந்திருக்கிறது.

பண்டைய காலம் தொட்டே, ஒரு நல்ல கல்விமுறையின் அடித்தளங்கள் நாலந்தா மற்றும் தக்ஷிணஷீலாவின் மகத்தான பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட்டு விட்டன. நமது நாட்டில் சக்தி, புகழ், செல்வம் ஆகியவற்றை விட என்றுமே ஞானம் அதிக மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இந்தியப் பாரம்பரியத்தில், கல்வியமைப்புகள் ஞானம் பெறும் இடங்கள், அதாவது கல்விக் கோயில்களாகவே கருதப்பட்டு வந்திருக்கின்றன. நீண்ட நெடுங்காலமாக காலனியாதிக்கம் காரணமாக ஏற்பட்ட துர்பாக்கிய நிலையை அகற்ற, கல்வி மட்டுமே அதிகாரப்பங்களிப்புக்கான வலுவான ஊடகமாக ஏற்பட்டிருக்கிறது. நமது நவீன கல்விமுறையின் அடிப்படைக் கட்டமைப்பு, சுதந்திரம் கிடைத்தவுடனேயே தொடங்கி விட்டது. அப்போது நமக்கிருந்த சாதனங்கள் மிகவும் குறைவானவையாகவே இருந்தன. இருந்தாலும்கூட, கல்வித் துறையில் நமது பல சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. நாட்டின் எந்தவொரு குழந்தையோ, இளைஞனோ, கல்வி பெறாமல் இருக்கக்கூடாது என்பதே நமது கல்விமுறையின் நோக்கம். கூடவே, கல்விமுறையில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் அதே வேளையில், கல்வியமைப்பில் உலகத் தரத்தை எட்ட, நாம் தொடர்முயற்சிகளை மேற்கொண்டு வர வேண்டும்.

25, 2020

இந்திய விண்வெளி ஆய்வு மையம், அதாவது இஸ்ரோவின் சாதனைகள் நாட்டுமக்களான நம்மனைவரையும் பெருமிதம் கொள்ள வைக்கின்றன. இஸ்ரோவின் குழுவானது தனது மிஷன் ககன்யான் திட்டத்தில் முன்னேறி வருகிறது. மேலும் நாட்டுமக்கள் அனைவரும் இந்த ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்பும் கலம் தொடர்பான திட்டம் மேலும் விரைவு கதியில் முன்னேறுவதை மிகுந்த உற்சாகத்தோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டில் தான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. பாரம்பரியமான வகையிலே, பல விளையாட்டுக்களில் நம்நாடு சிறப்பாகச் செயல்பட்டு வந்திருக்கிறது. நமது புதிய தலைமுறை ஆட்டக்காரர்களும், தடகள வீரர்களும், சமீபத்தில் நடைபெற்ற பல விளையாட்டுப் போட்டிகளில் நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். ஒலிம்பிக் 2020 விளையாட்டுப் போட்டிகளில், இந்தியக்குழுவுடன் கோடிக்கணக்கான நாட்டுமக்களின் நல்வாழ்த்துக்களும் நல்லாதரவின் உத்வேகமாகத் துணைவரும்.

அயல்நாடுகளில்வாழ் இந்தியர்கள் எப்போதுமே நாட்டிற்கு அதிக பெருமை சேர்த்து வந்திருக்கிறார்கள். எனது அயல்நாட்டுப் பயணங்களின் போது, அங்கு வாழும் நம் தேசத்தவர்கள், தங்கள் உழைப்பினால் அந்த மண்ணிற்கு வளம் சேர்த்திருப்பதோடு மட்டுமல்லாமல், உலக சமுதாயத்தின் கண்களில் இந்திய நாடு பற்றிய நல்பிம்பத்திற்கு மேலும் அழகு சேர்த்திருப்பதை என்னால் காண முடிந்தது. பல அயல்நாடுவாழ் இந்தியர்கள் பலவகையான துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.

நாட்டின் இராணுவத்தினர், துணை இராணுவத்தினர், உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் ஆகியோரை நான் திறந்த மனதோடு பாராட்டுகிறேன். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றைப் பராமரிக்க அவர்களின் தியாகம், ஈடு இணையற்ற சாகஸம், ஒழுங்குமுறை ஆகியவை காலம் கடந்தும் அவர்கள் பெருமையை பறைசாற்றும். நமது விவசாயிகள், நமது மருத்துவர்கள் - செவிலியர்கள், கல்வியையும் நற்பண்புகளையும் அளிக்கும் ஆசிரியர்கள், கடமையே கருத்தாக இருக்கும் விஞ்ஞானிகள் - பொறியாளர்கள், விழிப்பும் உழைப்பும் உடைய இளைஞர்கள், தொழிற்சாலைகளில் தங்கள் வல்லமையைப் பறைசாற்றும் உழைப்பாளர்கள், தொழில்வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பை அளிக்கும் நமது தொழிலாளர் சகோதரர்கள், நமது கலாச்சாரம் கலைகள் ஆகியவற்றுக்கு மெருகூட்டும் கலைஞர்கள், இந்திய நாட்டுச் சேவைத் துறைக்கு உலகெங்கும் பெருமை சேர்க்கும் அனைத்துத் தொழில் வல்லுனர்கள், மேலும் பல்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்பை அளித்துவரும் நமது நாட்டுமக்கள், குறிப்பாக எல்லா வகையான தடைகளையெல்லாம் தாண்டி, வெற்றியின் புதிய அளவுகோல்களை நிறுவிக் கொண்டே இருக்கும் நமது சாதுர்யம் நிறைந்த பெண்கள்…… இவர்கள் தாம் நமது நாட்டின் பெருமிதங்கள்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், கருமமே கண்ணாக இருக்கும் நம் நாட்டினர் சிலரைச் சந்திக்கும், உரையாடும் பேறு கிடைத்தது; அவர்கள் பல்வேறு துறைகளில் பாராட்டத்தக்க பணிகளை ஆற்றியிருக்கிறார்கள். எளிமை, அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் அமைதியாகத் தங்கள் பணிகளை ஆற்றிய அதே வேளையில், அறிவியல் மற்றும் புதுமைகள் படைத்தல், விவசாயம் மற்றும் வனவளங்கள் மேம்பாடு, கல்வி, உடல்நலம், விளையாட்டுக்கள், பண்டைய கைவினைத்திறத்தை மீண்டும் பிரபலமாக்குதல், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரப் பங்களிப்பு, ஏழைகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான வழிவகைகளை ஏற்படுத்தல் போன்ற பல துறைகளில் மகத்தான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஜம்மு கஷ்மீரத்தில் ஆரிஃபா ஜான் அவர்கள் நமதா தஸ்தகாரீ என்ற கைவினைத் திறனுக்குப் புத்துயிர் அளிப்பதிலும், தெலங்கானாவின் ரத்னாவலீ கோட்டப்பள்ளி அவர்கள் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதிலும், கேரளத்தின் தேவகீ அம்மா அவர்கள் தனது தனிப்பட்ட முயற்சியால் வன வளங்களை மேம்படுத்துவதிலும், மணிப்பூரைச் சேர்ந்த ஜாமகோஜாங் மிஸாவோ அவர்கள் சமூக மேம்பாட்டிற்கான முன்னெடுப்புக்களிலும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபர் அலி அவர்கள் சிறுவயது முதல் நலிவுற்ற சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியளிப்பதிலும் பாராட்டத்தகுந்த பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மக்களின் வாழ்வினில் ஒரு நம்பிக்கைக் கீற்றை ஏற்றியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பலர் இருக்கிறார்கள்; நான் ஒரு சிலரின் பெயர்களை மட்டுமே இங்கே கூறியிருக்கிறேன். சாமான்ய மனிதர்கள்கூட, தங்களின் குறிக்கோள்கள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வின் சக்தியால் மாத்திரம், சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இப்படிப்பட்ட மனிதர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். பெரிய எண்ணிக்கையில், இப்படி பல தன்னார்வ அமைப்புக்களும், அரசோடு கைகோர்த்து, தேசத்தை நிர்மாணிக்கும் இயக்கத்தில், தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

71வது குடியரசு தினம் : டெல்லியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன?

நாம் 21ஆம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டிற்குள் கால் பதித்திருக்கின்றோம். புதிய பாரதத்தின் நிர்மாணம் மற்றும் இந்தியாவின் புதிய தலைமுறையினரின் விடிவெள்ளிப் பத்தாண்டாக இது மலரவிருக்கிறது. இந்தப் பத்தாண்டிலே பிறந்த இளைஞர்கள், உற்சாகத்தோடு, தேசத்தின் சிந்தனை ஓட்டத்தில் தங்களின் பங்களிப்பை அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். காலம் கடந்து செல்லச் செல்ல, நமது விடுதலைப் போராட்டத்தின் நேரடி சாட்சியாகத் திகழ்ந்தவர்கள் அனைவரும் நம்மை விட்டு மெல்ல மெல்லப் பிரிந்து சென்று கொண்டிருக்கிறார்கள்; ஆனால் நமது சுதந்திரப் போராட்டத்தின் நம்பிக்கைகள் என்றும் நீக்கமற நிறைந்து நிற்கும். தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் காரணமாக, இன்றைய இளைஞர்கள் வசம் பரந்துபட்ட தகவல்வளம் கொட்டிக் கிடக்கிறது என்பதோடு, அவர்களிடம் தன்னம்பிக்கை நிரம்ப இருக்கிறது என்பதும் முக்கியமான ஒன்று. நமது அடுத்த தலைமுறையினர் நமது நாட்டின் அடிப்படை விழுமியங்களில் ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேசம் தான் என்றுமே அனைத்திற்கும் மேலானதாகத் திகழ்கிறது. இத்தகைய இளைஞர்களிடத்தில் நான் புதிய இந்தியா உதயமாவதைக் காண்கிறேன்.

தேசத்தின் நிர்மாணத்திற்காக, அண்ணல் காந்தியடிகளின் கருத்துக்கள் இன்றும்கூட முழுமையான அளவு பயனுடையவையாக இருக்கின்றன. காந்தியடிகளின் வாய்மை மற்றும் அஹிம்சை தொடர்பான செய்தியை நினைத்து பார்த்து அதன் வழிநடப்பது என்பது நமது தினசரி வாடிக்கையாக வேண்டும். வாய்மை மற்றும் அஹிம்சை பற்றிய அவரது செய்தி இன்றைய காலகட்டத்தில் மேலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எந்த ஒரு குறிக்கோளுக்காகவும் போராடுவோர், குறிப்பாக இளைஞர்கள், காந்தியடிகள் அளித்திருக்கும் அஹிம்சை என்ற மந்திரத்தை என்றும் மறவாமல் இருக்க வேண்டும்; ஏனென்றால் மனித சமூகத்துக்கு இதுவே விலைமதிப்பில்லாத கொடையாகும். எந்த ஒரு செயலும் அது உசிதமா, உசிதம் இல்லையா என்பதைத் தீர்மானம் செய்ய காந்தியடிகள் விதித்திருக்கும் மக்கள் நலன் என்ற உரைகல், நமது ஜனநாயகத்தின் மீதும் அமல் செய்யப்படக்கூடியது. மக்களாட்சியில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு – இருவரின் பங்குபணியுமே மகத்தானவை. அரசியல் கருத்துக்கள் பற்றிய வெளிப்பாட்டுடன் கூடவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நாட்டுமக்களின் நலன் ஆகியவற்றுக்காக இருவருமே இணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும்.

குடியரசுத் திருநாள் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கொண்டாட்டம். இந்த நாளில், நான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதன்மைச் சிற்பியான பாபாசாஹேப் அம்பேத்கரின் கருத்துக்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா? நாம் மேலோட்டமாக மட்டுமே அல்லாமல், உள்ளார்ந்தரீதியாக ஜனநாயகத்தை நிலைநிறுத்த முதலில், நாம் என்ன செய்ய வேண்டும்? நமது அரசியல் மற்றும் பொருளாதாரக் குறிக்கோள்களை எட்ட, தீவிரமான அர்ப்பணிப்போடு, அரசியலமைப்புச் சட்டத்தின் துணை ஒன்றையே நாட வேண்டும் என்று நாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் என்றார். பாபாசாஹேப் அம்பேத்கரின் இந்தச் சொற்கள், நமது பாதையை என்றுமே பிரகாசப்படுத்தட்டும். அவரது இந்தச் சொற்கள், நமது தேசத்தை கௌரவத்தின் சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்வதில் நிரந்தரமான வழிகாட்டுதலாய் இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் அயல்நாட்டுத் தலைவர்களை வரவேற்பது நமது பாரம்பரியமாக இருந்து வந்திருக்கிறது. இந்த ஆண்டும், இந்தப் பாரம்பரியத்தை அனுசரித்து, நாளைய நமது குடியரசுதினக் கொண்டாட்டத்தில், நமது நீண்டகாலத்திய நண்பரான, பிரேசில் அதிபர் ஹாயர் போல்ஸோனாரோ அவர்கள், நம்முடைய மதிப்பிற்குரிய விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார். வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லுகையில், நம்முடைய நாடும், நாட்டுமக்கள் அனைவரும், நம்முடைய எதிர்காலத்திற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எதிர்காலமும் பாதுகாப்பாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் இருக்க, உலக சமுதாயத்திற்கு ஒத்துழைப்பும் உதவிகளும் அளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

நான் மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் குடியரசுத் திருநாளுக்கான இதயம்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான எதிர்காலம் அமைய என் பிரார்த்தனைகளை உரித்தாக்குகிறேன்.

ஜெய் ஹிந்த்!! ஜெய் ஹிந்த்!! ஜெய் ஹிந்த்!!

இவ்வாறு அவர் தன் உரையில் கூறியுள்ளார்.

Ramnath Kovind Republic Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment