ஓ.பி.எஸ் அணியினருக்கு சூடு சொரணை இருக்கா, அப்படி என்றால் அ.தி.மு.க என்ற பெயரை பயன்படுத்தாதீர்கள் என புதுச்சேரி காவல்துறை தலைவரிடம் அ.தி.மு.க புகார் மனு அளித்துள்ளது.
புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடன் கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்தில் காவல்துறை தலைவர் மனோஜ் குமார் லாலை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதையும் படியுங்கள்: புதுச்சேரி மருத்துவ கல்வி அரசு இடஒதுக்கீடு: ‘நியாமான முடிவு தேவை’ – அ.தி.மு.க செயலாளர் அன்பழகன்
அந்த புகார் மனுவில், புதுச்சேரியில் ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஓம் சக்தி சேகர் தன்னை அ.தி.மு.க மாநில செயலாளர் என்று கூறி மாநில முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார். அ.தி.மு.க சின்னம் மற்றும் கட்சியின் பொது செயலாளர் பதவி எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கும்போது வேண்டுமென்றே கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், இரட்டை இலை சின்னம் அவருக்கே சொந்தம் என்றும் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் உறுதி செய்துள்ள நிலையில், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தி.மு.க.,வின் பி டீமாக செயல்படும் ஓ.பி.எஸ் அணியினர் தாங்கள்தான் அ.தி.மு.க என்று மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ ஓம் சக்தி சேகர் தன்னை மாநில செயலாளர் என்று கூறி மாநிலம் முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓ.பி.எஸ் அணியினருக்கு உடம்பில் நல்ல ரத்தம் ஓடுகிறதா… சூடு சொரணை இருக்கிறதா… சோற்றில் உப்பு போட்டு தானே திங்குறீங்க… அப்படி இருந்தால் அ.தி.மு.க பெயரை பயன்படுத்தாதீர்கள் என்று காட்டமாக கூறினார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil