மத்திய பா.ஜ.க அரசின் அத்தனை சட்டதிட்டங்களையும் கண்மூடித்தனமாக எதிர்த்து அரசியல் நடத்தும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்கள் ஆதரவு அளிக்க வேண்டிய அவசியம் என்ன? என புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளார்
புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புறம் தள்ளப்பட்டு தொண்டர்களை ஏமாற்றும் விதமாக மாநாடு என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான பொய்யான தகவலை கூறிய ஓ.பி.எஸ்-ன் வார்த்தைகளை எந்த உண்மையான அண்ணா தி.மு.க தொண்டனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அரசியல் அரங்கில் ஒதுக்கப்பட்ட ஓ.பி.எஸ் தனது இருப்பை நிலைநாட்டிக் கொள்ள சசிகலாவை துணைக்கு அழைப்பது வியப்பாக உள்ளது.
இதையும் படியுங்கள்: ராணுவ வீரர்கள், மத்திய அரசு ஊழியர்கள் பெயரில் மோசடி: புதுவையில் இது புதுசுங்கோ!
சின்னம்மா இவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள் என்றும், அந்தப் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய் என்றார். நான் உடனே ராஜினாமா செய்து விட்டேன் என கூறுகிறார். தர்மயுத்தம் நடத்தும் பொழுது ஒரு முதலமைச்சர் என்று கூட பார்க்காமல் டி.டி.வி தினகரன் என்னை முதுகில் அடித்து மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றார் என்றார்.
அம்மா மரணத்தில் மரியாதைக்குரிய சின்னம்மாவுக்கு தொடர்பு உண்டு என கூறியதோடு, அம்மா மரணத்திற்கு விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்று எடப்பாடியார் அவரிடம் ஏன் கேட்க வேண்டும். அம்மா மரணத்திற்குப் பிறகு ஆர்.கே நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் உடைய வேட்பாளர் மறைந்த மதுசூதனன் நிற்கும் பொழுது அம்மா அவர்களின் திருவுருவ பொம்மையில் இரண்டு கால்கள் அகற்றப்பட்டு இந்த கால்களை சசிகலா வெட்டிவிட்டார் என பிரச்சாரம் செய்தது எதற்காக?
அம்மா ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களோடு இணைந்து கழக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தது ஏன்?
உண்மை நிலைகள் இவ்வாறு இருக்க தனக்கு சாதகமாக கடந்த கால கசப்பான உண்மைகளை திருத்திக் கூறி கழகத் தொண்டர்களை ஏமாற்றும் முயற்சியில் ஓ.பி.எஸ் அவர்கள் ஈடுபட்டுள்ளார். நான் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கத்தில் இருக்கின்றேன். அந்த அடிப்படையில் ஓ.பி.எஸ் கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசிய துரோகங்களை எதையும் மறக்க முடியாத நிலையில், ஒவ்வொரு உண்மையான தொண்டனுக்கும் மனதில் ஏற்படும் கேள்விகளையே நான் ஓ.பி.எஸ் இடம் கேட்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் பல்வேறு அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியானதை மூடி மறைக்கின்ற விதத்தில் சர்ச்சைக்குரிய 12 மணி நேரம் வேலை சட்ட மசோதாவை தமிழகத்தில் தொழிலாளர் விரோத அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்ட ஆரம்ப நிலையிலேயே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடியார் உறுதியாக அதை எதிர்த்தார்.
தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ள பல்வேறு கட்சிகளும் அதை எதிர்த்தவுடன், அந்த மசோதா மேல் நடவடிக்கை இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீது உண்மையில் தி.மு.க.,வுக்கு அக்கறை இருந்தால் அந்த சட்ட மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற தொழிலாளர் விரோத சட்ட மசோதா கொண்டு வரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சட்ட மசோதா கொண்டு வந்தவர்களே அதை திரும்ப பெற்றுக் கொண்டுள்ள நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்கள் 12 மணி நேர சட்ட மசோதாவிற்கு திரும்பத் திரும்ப ஆதரவளித்து பேசுவது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. உலகத்தில் பல நாடுகளில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக சொல்லி உள்ளார். ஐ.நா சபையில் அங்கீகரிக்கப்பட்ட 195 நாடுகளில் எந்த நாட்டிலும் 12 மணி நேர வேலை என்கின்ற சட்டம் கொண்டுவரப்படவில்லை. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களிலும், 8 யூனியன் பிரதேசத்திலும், கர்நாடகத்தை தவிர எங்கும் கொண்டுவரப்படவில்லை. உண்மை நிலை எவ்வாறு இருக்க 12 மணி நேரம் வேலை செய்தால் தொழிலாளர்கள் நலமாக இருப்பார்கள், தொழிலாளர்களுடைய நன்மைக்காக தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்ற துணைநிலை ஆளுநரின் கருத்து என்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
மத்திய பா.ஜ.க அரசின் அத்தனை சட்டதிட்டங்களையும் கண்மூடித்தனமாக எதிர்த்து அரசியல் நடத்தும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆதரவு அளிக்க வேண்டிய அவசியம் என்ன?
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரின் தந்தை பனைமர தொழிலாளர்களுக்காக அரும்பாடுபட்டவர். ஆனால் நம்முடைய துணைநிலை ஆளுநர் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு ஆதரவான கருத்தினை கூறுகிறார். 12 மணி நேரம் வேலை செய்தால் என்ன தவறு என்கிறார். ஒரு நாள் முழுவதும் ஒரு தொழிலாளியை 24 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு மறுநாள் ஓய்வு எடுத்துக் கொள் என்றால், அந்த தொழிலாளியின் உடல் ஒத்துழைக்குமா?
புதுச்சேரியில் இரவு நேரத்தில் துப்புரவு பணி செய்யும் பெண்களில் 70 வயதை கடந்தவர்கள் பணி செய்கின்றனர். அவர்களுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியத்தை கூட தனியார் நிறுவனங்கள் வழங்குவதில்லை. இதில் துணைநிலை ஆளுநர் ஏன் கவனம் செலுத்தவில்லை. எத்தனையோ வர்த்தக வியாபார நிறுவனங்களில் வறுமையில் வாடும் பெண்கள் 10 மணி நேரம் 12 மணி நேரம் பணி செய்கின்றனர். அவர்களுக்கு 6,000 ரூபாய், 7000 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்குகின்றனர். குறைந்தபட்ச ஊதியம் கூட அவர்களுக்கு வழங்குவதில்லை. பல ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 8000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படுவதில்லை.
எல்லா வர்த்தக வியாபார நிறுவனங்களிலும் ஐ.டி நிறுவனங்களிலும் 10 மணி நேரத்துக்கு மேலாக வேலை வாங்கிக் கொண்டு வருகின்றனர். இத்தனைக்கும் எட்டு மணி நேரம் வேலை என சட்டம் இருந்தும் தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுகின்றனர். அதை தடுக்க நாதியில்லை.
இந்தியாவிலேயே முதன் முதலில் எட்டு மணி நேர வேலையை உறுதி செய்தது புதுச்சேரி தான். 8 மணி நேர வேலைக்காக 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குண்டடிப்பட்டு மரணமடைந்ததும் புதுச்சேரியில் தான். இதுதான் புதுச்சேரியின் மே தின வரலாறு ஆகும்.
பலருடைய உயிர் தியாகங்களுக்கு பிறகு கிடைத்த 8 மணி நேர வேலை உரிமையை நம்முடைய துணைநிலை ஆளுநர் பறிக்க முற்படுவதாக தெரிகிறது. வேண்டுமென்றால் நிரந்தர ஆளுநராக செயல்படும் தெலுங்கானா மாநிலத்தில் இது போன்ற கருத்துக்களை எடுத்துக் கூறி அங்கு 12 மணி நேர வேலையை அமல்படுத்த முற்படுவாரா? எங்களை பொறுத்தமட்டில் தனிப்பட்ட முறையில் துணை நிலை ஆளுநர் மீது வருத்தம் இல்லை. ஆனால் கொள்கை ரீதியில் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை துணைநிலை ஆளுநர் எடுக்கும் பொழுது அதற்கு எதிராக உண்மை கருத்தை கூற வேண்டியது அ.தி.மு.க.,வின் கடமை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil