Advertisment

தமிழக சிலபஸில் இருந்து மத்திய பாடத் திட்டத்திற்கு மாறும் புதுவை பள்ளிகள்: தி.மு.க கண்டனம்

புதுச்சேரியில் திடீரென ஒரு நாள் அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களும் 10,000 செலுத்தி தாமாக முன்வந்து ஒன்றிய அரசின் பாடத்திட்டத்திற்கு மாறுவதைப் போல் பதிவு செய்ய வைத்தது கண்டனத்திற்குரியது; தி.மு.க எம்.எல்.ஏ அறிக்கை

author-image
WebDesk
New Update
Puducherry

புதுச்சேரியில் சிலபஸ் மாற்றத்திற்கு தி.மு.க எம்.எல்.ஏ கண்டனம்

புதுச்சேரி மாநில மக்கள் விருப்பமில்லாமல், புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தை அமல்படுத்த அவசரகதியில் தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பள்ளிக்கல்வித் துறை செயல் கண்டனத்துக்குரியது என உப்பளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அணில் பால் கென்னடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இதையும் படியுங்கள்: ஆளுனருக்கும் கருத்துரிமை இருக்கு; விமர்சித்தால் பதில் சொல்லி ஆகணும்: தமிழிசை

புதுச்சேரி அரசானது தற்பொழுது தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி வருகிறது. திடீரென ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தை அமல்படுத்த உத்தேசித்து அதற்கான பணியினை அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவரையும் ஈடுபடுத்தி செயல்பட வைக்கிறது. ஒவ்வொரு பள்ளியும் தனித்தனியாக ஒன்றிய அரசின் பாடத்திட்டத்திற்கு மாறுவதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது மிகுந்த கண்டனத்துக்குரியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்வந்து பதிவு செய்வதை போல் பள்ளிக்கல்வித் துறை செயல்பட வைக்கிறது.

திடீரென ஒரு நாள் அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களும் 10,000 செலுத்தி தாமாக முன்வந்து ஒன்றிய அரசின் பாடத்திட்டத்திற்கு மாறுவதைப் போல் பதிவு செய்ய வைத்தது இந்த அரசு. எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் பயணிக்கிறது என்பதனை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தற்பொழுது அனைத்து பள்ளிகளிலும் தீயணைப்பு சான்றிதழ், கட்டிட உறுதிமொழி சான்றிதழ், சுகாதார சான்றிதழ், சுத்தமான குடிநீர் சான்றிதழ் என பல்வேறு துறைகளின் சான்றிதழ்களை பெற்று இணையதள வழியாக பதிவு செய்திட ஆசிரியப் பெருமக்களை அரசு நிர்பந்தப்படுத்துகிறது.

ஒன்றிய அரசின் பாடத்திட்டத்திற்கு மாறுவதற்கு பதிவு செய்திட ஓரிரு தினங்களை கொடுத்து கால அவகாசம் கொடுக்காமல் அவசரகதியாய் ஒரு குழு கூட்டம் மட்டும் நடத்தி தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களிடம் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தை அமல்படுத்த உத்தேசித்த அரசு, ஏன் ஒரு வருடத்திற்கு முன்பே இப்பணிகளை செய்திருக்கலாம்.

இப்போது தீயணைப்பு சான்றிதழ் பெறுவதற்கு பள்ளியில் போதுமான தீயணைப்பு உபகரணங்கள் இல்லை. அதனால் தலைமை ஆசிரியரே இவற்றை மூன்று மாதங்களில் சரி செய்து விடுகிறேன் என்று உறுதிமொழி சான்றிதழ் கொடுத்து பதிவு செய்ய வைக்கிறார்கள். அப்படி பதிவு செய்யவில்லை என்றால் அந்த தலைமை ஆசிரியரே பொறுப்பு என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கூறுவதாக தெரிகிறது.

பள்ளியின் கட்டமைப்பு சரி செய்வது என்பதெல்லாம் ஜீபூம்பா வேலை அல்ல. ஓரிரு தினங்களில் செய்து விடுங்கள் என்று வாய்மொழியில கூறுவது எப்படி அரசு நடந்து கொள்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கென்று பிரத்தியேகமாக எந்த ஒரு மேலாண்மை குழுவும் அமைக்கப்படவில்லை .ஓரிரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு whatsapp குழு மூலம் அவர் கட்டளையிட்டு அனைத்து தலைமை ஆசிரியர்களும் செய்கின்ற ஒரு நிலை இருக்கிறது. விடுமுறை மற்றும் தொழிலாளர் தினம் என்றும் பாராமல் அனைத்தையும் முடித்து விடுங்கள் என்று  இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் கூறுவதாக தெரிகிறது .இதனால் அனைத்து தலைமை ஆசிரியர்களும் மிகுந்த ஒரு மனச்சோர்வுடன் இப்பணியை செய்து வருவதாக தெரிகிறது.

ஒன்றிய பா.ஜ.க அரசினை திருப்தி படுத்துவதற்காக மாநில கல்வி அமைச்சர் ஒன்றிய கல்வித் திட்டத்தை மாணவர்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார். கல்வி அமைச்சரை திருப்திப்படுத்துவதற்காக இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் முயற்சியில் இறங்கி  இருக்கிறார்கள். ஆனால் இதில் எந்த ஒரு அமைப்போ குழுவோ செயல்படுவது போல் இவர்கள் கட்டமைப்பு ஏற்படுத்தவில்லை. மாறாக பள்ளிகளின் தலையிலும் தலைமையாசிரியர் தலையிலும் இந்த வேலையை சுமத்தி தப்பிக்க பார்க்கிறார்கள்.

கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியது பள்ளிக் கல்வித் துறையின் வேலை. ஒரு குறுகிய அதிகாரம் கொண்ட தலைமை ஆசிரியர்களை நெருக்கடி கொடுக்கும் வகையில் இயக்குனர் செயல்பாடு அமைந்துள்ளதாக தெரிகிறது. எந்தவிதமான தரவுகள் இல்லாமல் ஒன்றிய அரசின் பள்ளி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாண்புமிகு கல்வி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment