Advertisment

ஜிப்மரில் சிகிச்சைக்கு கட்டணம்; ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி தி.மு.க ஆர்ப்பாட்டம்

ஜிப்மர் மருத்துவமனை வேலைவாய்ப்பில் புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். சிகிச்சை பெற வருவோரின் வருமான உச்சவரம்பை அடியோடு நீக்க வேண்டும்; தி.மு.க ஆர்ப்பாட்டம்

author-image
WebDesk
New Update
Puducherry DMK

ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து புதுச்சேரி தி.மு.க ஆர்ப்பாட்டம்

ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் கொண்டு வந்துள்ள சிகிச்சைக்கு கட்டண முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் ஜிப்மர் நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையிலான 500–க்கும் மேற்பட்ட தி.மு.க–வினரை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏழைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஜிப்மர் நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: ஓடும் ரயிலில் சக பயணி மீது தீ வைப்பு: 3 பேர் பலி.. கேரளாவில் பயங்கரம்

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தி.மு.க அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா தலைமையிலான தி.மு.க–வினர் ’ரத்து செய், ரத்து செய்’, ’சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்’, ’பறிக்காதே, பறிக்காதே என ஏழை எளிய மக்களின் சுகாதாரத்தை பறிக்காதே’ என கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர் இரா.சிவா பேசியதாவது: புதுச்சேரி மக்களுக்கு நம்பிக்கையான, ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்த ஜிப்மர் நிர்வாகம் இன்று ஒன்றிய அரசின் ஏழைகளுக்கு எதிரான போக்கின் காரணமாக ஏழை மக்களுக்கு இல்லாமல் ஆகிவிட்டது. ஏழை நோயாளிகளை திருப்பி அனுப்புகின்ற சம்பவம் தொடர்கிறது. 2008–ஆம் ஆண்டு ஒன்றியத்தில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அமைச்சராக இருந்த பொழுது ஜிப்மர் நிர்வாகத்தை தன்னாட்சி நிறுவனமாக உருவாக்கினார். அதை எதிர்த்து அப்போது பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. அப்போது உறுதியளித்த ஒன்றிய அமைச்சர் புதுச்சேரி மக்களுக்கு உரிய இலவச சிகிச்சையும், புதுச்சேரி மாணவர்களுக்கு கல்வி இடஒதுக்கீடும், புதுச்சேரி மக்களுக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீடும் உறுதி செய்கின்ற வகையில் சட்டம் இயற்றப்பட்டதாக உறுதியளித்தார். அதெல்லாம் இன்று மறுக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த நான்கு ஆண்டாக இயக்குநராக உள்ள அகர்வால் அவர்கள் ஜிப்மர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை சீர்குலைத்துள்ளார். தன்னுடைய சர்வாதிகாரப் போக்கால் ஏழை, எளிய மக்களை துச்சமாக நினைத்து, மருத்துவம் பார்க்க வரும் கர்ப்பிணி தாய்மார்கள், அவசர சிகிச்சைக்கு வருபவர்களை எல்லாம் திருப்பி அனுப்பி வருகிறார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஜிப்மர் நிர்வாகத்தை செயல்பட விடாமல் முடக்கினார். இருதயம், கிட்னி, கல்லீரல், அறுவைச் சிகிச்சை போன்ற உயர் சிகிச்சைக்கு வருபவர்களைக் கூட இயக்குநர் அகர்வால், இணை இயக்குநர் துரைராஜ் மற்றும் உள்ளிருப்பு அதிகாரி கிருஷ்ணகோபால் ஆகியோர் கூட்டாக சேர்ந்து திருப்பி அனுப்புகிறார்கள். இவர்கள் மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் பற்றாளர்கள். தொடர்ந்து இவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

publive-image

உயிர்காக்கும் ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்திற்கு கூட மருத்துவம் பார்க்க முடியாது என்று சொல்லும் நிலை ஜிப்மரில் தொடர்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மருந்துகள் எல்லாம் தற்பொழுது வெளியில் வாங்கச் சொல்லுகிறார்கள். இதுகுறித்து தி.மு.க பலமுறை சுட்டிக்காட்டியது. ஆளுநர், சபாநாயகர், அமைச்சர் எல்லாம் ஜிப்மர் சென்று ஆய்வு செய்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இன்னும் இயக்குநரின் சர்வாதிகாரப் போக்கு தொடர்கிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் மீது இயக்குநர் கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அத்தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜிப்மரில் இலவசமாக மருத்துவம் பார்க்கலாம் என்ற காலம் மாறி இன்று எதற்கெடுத்தாலும் பணம் என்ற நிலை மாறிவிட்டது. அதானியின் ஆதிக்கம் ஜிப்மரிலும் கால்பதிக்க தொடங்கி உள்ளது. ஜிப்மர் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் நல்ல மருந்துகள் கிடைத்து வந்த நிலையில், இன்று ஜிப்மரில் கொள்முதல் செய்யும் மருந்துகள் அதானிக்கு சொந்தமான ஜெம்ஸ் என்ற நிறுவனத்திடம் பெறுகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலை உள்ளது. ஏழை நோயாளிகள் அலைகழிக்கப்படுகிறார்கள்.

ஜிப்மர் நிர்வாகம் மீண்டும் பழையபடி இயங்க வேண்டும். புதுச்சேரி, தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் ஏழை நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களை அலைகழிக்காமல் உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.  புதுச்சேரியின் மருத்துவ கேந்திரமாக, கர்ப்பக்கிரகமாக திகழ்ந்த ஜிப்மர் மருத்துவமனை இயக்குநரின் செயல்பாட்டால் இன்று குட்டிச்சுவராக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு செவிலியர் பணி நியமனத்தில் புதுச்சேரிக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரி அரசுக்கு இழுக்கு. அரசு வெட்கப்பட வேண்டும். வெளி மாநிலத்தில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தேர்வில் வெற்றிபெற தேர்வு வினாத்தாள் அவர்களுக்காக தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. செவிலியர் பணி வழங்கியதில் நடைபெற்ற ஊழல் முறைகேட்டை விசாரிக்க ஒன்றிய அரசு குழு அமைக்க வேண்டும். புதுச்சேரியில் நடைபெறும் அனைத்து விவகாரத்திலும் தலையிடும் ஆளுநர் அவர்கள் இந்த விவகாரத்தில் ஏன் தலையிடவில்லை. ஜிப்மர் இயக்குநருக்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாளர்களும் உள்ளனர். ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தை துச்சமாக எண்ணி, ஏழை மக்களுக்கு விரோதமாக இருக்கும் இயக்குநர் மீது ஆளுநர் ஏன் ஒன்றிய அரசுக்கு புகார் அளிக்கவில்லை.

ஆகவே, வேலைவாய்ப்பில் புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். சிகிச்சை பெற வருவோரின் வருமான உச்சவரம்பை அடியோடு நீக்க வேண்டும். அனைவருக்கும் தரமான மருத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். ஏழை நோயாளிகளுக்கு எதிரான விரோதப் போக்கை கடைபிடிக்கும் ஜிப்மர் இயக்குநரையும் அவரது கூட்டாளிகளையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர்கள் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அ.தைரியநாதன் (எ) தைரியன், ஏ.கே. கல்யாணி கிருஷ்ணன், பொருளாளர் இரா.செந்தில்குமார், எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர் லீ.சம்பத் மற்றும் பல்வேறு அணிகளின் துணை அமைப்பாளர்கள், தொகுதி கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா உள்ளிட்ட நான்கு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 500–க்கும் மேற்பட்ட தி.மு.க–வினரை காவல் கண்காணிப்பாளர் பக்தவச்சலம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். டி.நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்ற தி.மு.க–வினரை சிறிது நேரத்திற்கு பின் விடுவித்தனர்.

இதேபோல், புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து இன்று போராட்டம் நடத்தினர். ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தில் மற்றும் அரசு பணியில் மண்ணின் மைந்தர்களுக்கு 80% வேலை வாய்ப்பை வழங்கிடவும், மகப்பேறு மருத்துவத்திற்கு வரும் அண்டை மாநில உறவுகளை புறக்கணிப்பதை கண்டித்தும், பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், வட இந்திய பண்டிகைகளுக்கு புற நோயாளிகள் சிகிச்சை பிரிவை அடிக்கடி விடுப்பு விடுவதை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில செயலாளர் சிவக்குமார் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மாநில பொருப்பாளர்கள், தொகுதி செயலாளர்கள், தொகுதி தலைவர்கள், பாசறை பொருப்பாளர்கள் மற்றும் நூற்றுக்கு மேற்ப்பட்ட உறவுகளுக்கும் பங்கேற்றனர்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment