திருமணம் செய்வதற்காக மருத்துவக் கல்லூரி பேராசிரியரின் குடும்பத்தினர் திருமண தகவல் மையத்தில் பதிந்த தகவலை இணைய வழி மோசடிக்காரர்கள் எடுத்து சமூக வலைதளம் மூலமாக, வெளிநாட்டுப் பெண் உதவியுடன் 35 லட்ச ரூபாயை ஏமாற்றியது தொடர்பாக புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு ஆய்வாளர் கீர்த்தி இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் உருளையன்பேட்டையை சேர்ந்த மருத்துவரின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்வதற்காக புதுவையில் உள்ள ஒரு தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்கிறார்கள். மேற்படி தகவலை அங்கிருந்து எடுத்த சமூக வலைதள மோசடியாளர்கள் நேரடியாக மருத்துவ பேராசிரியருக்கு ஒரு பெண் மூலமாக தொடர்பு கொள்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: ஜப்தி நடவடிக்கைக்கு புதுவை பல்கலை., எதிர்ப்பு; அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு
மருத்துவ பேராசிரியரை தொடர்பு கொண்ட பெண் நான் சிரியாவில் இருக்கிறேன் என்றும், நானும் இந்தியர் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றும் அவருடைய அனைத்து விவரங்களையும் அனுப்பி உள்ளார்.

மேலும் நான் அமெரிக்கவாசி, சிரியாவில் நடந்த நிலநடுக்கத்திற்காக தன்னார்வலராக வேலை செய்ய இங்கு வந்துள்ளேன். இங்கு வந்த பிறகு நான் அமெரிக்கர் என்பதால் என்னுடைய அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு விட்டது என்று சொல்லி அவருடைய கணக்குகள் முடக்கப்பட்ட விவரங்கள் மற்றும் வேறு சில தகவல்கள் அந்த பெண் இருக்கும் இடத்திற்கான லொகேஷன் அவர் பணி புரிகின்ற மருத்துவமனை போன்றவற்றை அனுப்பி இருக்கிறார். நீங்கள் உதவி செய்தால் மட்டுமே நான் இங்கு இருந்து வெளியேற முடியும் என்று வரி, கஸ்டம்ஸ் சார்ஜ், டாக்குமெண்டேஷன் இன்னும் சில தேவைகள் இருக்கிறது என்று சொன்னதை நம்பிய அந்த மருத்துவ பேராசிரியர் அவருக்கு எட்டு முறை பணத்தை இரண்டு இந்திய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி இருக்கிறார்.
மேற்படி அப்படி அனுப்பிய பணம் 35 லட்ச ரூபாய் ஆகும். 35 லட்சம் ரூபாய் பணத்தை பெற்ற பிறகு மேற்படி பெண்ணிடமிருந்து எந்த தகவலும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவ பேராசிரியர் இன்று இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இந்த மோசடியில் இந்தியாவில் உள்ள சில நபர்களும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக இணையவழி போலீசார் சந்தேககின்றனர். முன்பின் தெரியாத நபர்கள் யாராக இருப்பினும் அல்லது பொருட்கள் வாங்குவதாக இருப்பினும் அல்லது வியாபாரம் சம்பந்தமாக தொடர்பு கொள்வதாக இருப்பினும் அவர்களுடைய வார்த்தையை நம்பி அல்லது அவர்கள் அனுப்புகின்ற புகைப்படம் வீடியோ போன்றவற்றை நம்பி பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்று இணையவழி போலீசார் பொதுமக்களை எச்சரிக்கை செய்கின்றனர்.

மேலும் திருமண தகவல் மையங்களில் வரன் தேடுவோர் தங்களைப் பற்றிய முழு தகவல்களையும் அங்கே இருக்கின்ற பதிவேட்டில் பதிவிடுகின்றனர். இணையவழி மோசடிக்காரர்கள் பெண்களைப் பற்றியோ ஆண்களைப் பற்றியோ முழு தகவலையும் திருமண தகவல் மையத்தின் மூலம் பெற்று கொண்டு, இதுபோன்ற நிறைய மோசடிகளில் ஈடுபடுவதாகவும் இணைய வழி காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகவே உண்மையான நபர் தான் உங்களை தொடர்பு கொள்கிறாரா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதில் முக்கியமாக இரண்டாம் திருமணத்திற்கு பதிவு செய்பவர்களின் தகவல்கள் அதிகமாக திருடப்பட்டு இதுபோன்ற மோசடி நடக்கிறது என்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் பொதுமக்களை எச்சரிக்கை செய்துள்ளனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil