பிரதமரின் “ஏக் பாரத் சிரேஷ்ட் பாரத்“ திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று (17-04-2023) தொடங்கியது.
நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்புத்துறை ராஜநாத் சிங் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், குஜராத் மாநில சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல், குஜராத் மாநில சுற்றுலா அமைச்சர் முலுபாய் பேரா, மக்களவை உறுப்பினர் சி.ஆர். பட்டேல் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படியுங்கள்: கர்நாடக முன்னாள் முதல்வர், 6 முறை பா.ஜ.க எம்.எல்.ஏ; காங்கிரஸில் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்
நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதாவது;
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவான சௌராஷ்டிரா - தமிழ் சங்கமத்தை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக குஜராத் முதல்வரை பாராட்டுகிறேன்.
தமிழர்கள் எப்பொழுதும் ஒற்றுமையை பறைசாற்றியவர்களாக இருந்திருக்கிறார்கள். வடபுலத்தில் பாரதப் போர் நடந்த போது தமிழ் மன்னன் சேரலாதன் படைகளுக்கு உணவளித்தான் என்கிறது வரலாறு.
இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்கிறோம் என்பதை பறைசாற்றும் ஒரு நிகழ்ச்சி இது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றுப்படி பாரதப் பிரதமர் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.
தமிழர்களுக்கும் சௌராஷ்டிரர்களுக்கும் உள்ள தொடர்பு நெடுங்காலம் தொட்டு இருக்கிறது. தமிழகத்தில் சௌராஷ்ட்ரிய அமைப்பானது 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும், பாரத நாட்டின் விடுதலைக்காக முக்கிய பங்காற்றியதில் தமிழர்களின் சௌராஷ்ட்ரிய அமைப்பின் பங்கும் மிக முக்கியமானது. அதில் மிக முக்கிய பங்காற்றியவர் எல்.கே. துளசிராம். இவர் 1921 இல் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கினார் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
ஒரு காலத்தில் மதுரை மீனாட்சி அம்மனின் கோவிலுக்குள் நுழைய சில சமூகத்தினருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், சௌராஷ்ட்ரிய அமைப்பின் மூலமாக என்.எம்.ஆர். சுப்பிரமணியம் அவர்களோடு சேர்ந்து போராட்டம் நடத்தி அனைத்து சமூகத்தினரும் கோவிலுக்குள் நுழைய உரிமை வாங்கி தரப்பட்டது.
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு அ.தி.மு.க கட்சியை துவங்கியதிலும் சௌராஷ்ட்ரிய அமைப்பின் முக்கிய நபரான எஸ்.ஆர்.ராதாவின் பங்களிப்பு இருந்தது.
தமிழர்களின் தொன்மையும் பெருமையையும் பறைசாற்றும் கீழடி அகழ்வாய்வின் பயணத்தில் முக்கிய பங்காற்றியவர் அமர்நாத். அவர் சௌராஷ்ட்ரிய சமூகத்தைச் சேர்ந்தவர். நாம் பட்டுத்துணி உடுத்துவதிலும் சௌராஷியர்களின் பங்கு இருக்கிறது.
150 ஆண்டுகளுக்கு முன்பே சௌராஷ்ட்ரிய சமூகத்தினரால் கோதண்டராமன் ஆலயம் நாகர்கோவிலில் நிறுவப்பட்டது. அங்கு 'சௌராஷ்டிரா பாடசாலை' இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
காசி தமிழ்ச் சங்கத்தை போல நம்மை மேலும் இணைப்பதற்கு இந்த நிகழ்ச்சி வழி வகுக்கும். அதற்காக பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார்.
சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குஜராத் சென்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஸ்ரீ சோம்நாம் மகாதேவ் கோயிலுக்கு சென்று ஜோதிர்லிங்க சிறப்பு அபிசேகத்தில் பங்கேற்றார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.