புதுச்சேரியில் அடிக்காசு உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெம்போக்கள் இன்று திடீர் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து முத்தியால்பேட்டை, கோரிமேடு, முத்திரையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு டெம்போக்கள் இயக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: சமூக நீதி நாயகன் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை; மிக பொருத்தம் ஏன்?
புதுவையை பொறுத்த வரையில நகரப் பகுதிகளுக்குள் செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் புதுவை மக்கள் மட்டுமன்றி வெளியூரில் இருந்து வருபவர்களும் டெம்போக்களையே அதிகம் பயன்படுத்துவர். பஸ் நிலையத்தில் டெம்போக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கு நகராட்சி அடிக்காசு வசூல் செய்கிறது. இந்த அடிக்காசு வசூலுக்கு நகராட்சி சார்பில் டெண்டர் விடப்படும்.
இந்தநிலையில், அடிக்காசு வசூலுக்கு சமீபத்தில் புதிய டெண்டர் விடப்பட்டது. டெண்டரை எடுத்த குத்தகைதாரர் அடிக்காசை ரூ 10ல் இருந்து ரூ20 உயர்த்தியுள்ளார். இதற்கு டெம்போ உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தள்ளனர். புதுவை பஸ் நிலையத்தில் தங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியையும் செய்து தராமல் கட்டணத்தை உயர்த்த கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
டெம்போ நிறுத்துமிடத்தில் மேல்கூரை சேதம் அடைந்து விழும் நிலையில் உள்ளது. குடிநீர், கழிவறை வசதி இல்லை. பஸ் நிலையத்தின உட்புறத்தில் 4 டெம்போக்களை மட்டுமே நிறுத்த முடியும். இவற்றை எல்லாம் சீரமைத்த பிறகுதான் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரியுள்ளனர்.
இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 1 ஆம் தேதி புதுவை நகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்தனர். நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையம் எடுக்கவில்லை. எனவே 1 ஆம் தேதியில் இருந்து டெம்போக்கள் அடிக்காசு செலுத்தவில்லை.
இந்த நிலையில், டெண்டர் எடுத்த குத்தகைதாரர் உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என டெம்போ டிரைவர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் டெம்போ டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டனர்
காலை 11 மணி முதல் டெம்போ இயக்குவதை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நகரம் மற்றும் புறநகர் பகுதியில் ஒடும் 125 டெம்போக்கள் இயங்காததால் பொதுமக்கள் பாதிக்கபட்டனர். இன்று சனிக்கிழமை என்பதால் வெளியூரில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகளும் டெம்போ இல்லாமல் அவதிக்குள்ளாகினர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil