பூஜைக்கு நேர அனுமதி பிற்போக்கு; மாதவிடாய்க்கு விடுமுறை விடுங்கள்: புதுவை மாதர் சங்கம் முழக்கம்

புதுச்சேரியில் பெண் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை பூஜை செய்ய காலதாமத அனுமதி; இந்த வேலை நேர சலுகை அறிவிப்பு, பெண்களை ஏமாற்றும் அரசியல் கபட நாடகம் என சி.பி.எம் கண்டனம்

புதுச்சேரியில் பெண் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை பூஜை செய்ய காலதாமத அனுமதி; இந்த வேலை நேர சலுகை அறிவிப்பு, பெண்களை ஏமாற்றும் அரசியல் கபட நாடகம் என சி.பி.எம் கண்டனம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry women asso leaders

T.G முனியம்மாள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புதுச்சேரி மாநில தலைவர் மற்றும் இளவரசி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புதுச்சேரி மாநில குழு செயலாளர்

என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி அரசு மாதம் மூன்று வெள்ளிக்கிழமைகள் பூஜை செய்வதற்காக காலதாமத நேர அனுமதி வழங்கி உள்ளது போல், கேரளா மாநிலத்தை பின்பற்றி பெண்களுக்கு மாதவிடாய் சமயத்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டுமென மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Advertisment

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைவர் முனியம்மாள், செயலாளர் இளவரசி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இதையும் படியுங்கள்: சம்பளம் கேட்டு பினாயில் குடித்த அமுத சுரபி ஊழியர்கள்: புதுவை ஷாக்

என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி அரசு மாதம் மூன்று வெள்ளிக்கிழமைகள் பூஜை செய்வதற்காக காலதாமத நேர அனுமதி வழங்கி உள்ளது வேதனையளிக்கிறது. பெண்களை மீண்டும் வீட்டுக்குள் அடைக்கும் விதமாகவும், பூஜை செய்வதை திணிக்கும் விதமாகவும் ஆணாதிக்க சிந்தனையுடன், மத அடையாளத்துடன், பாகுபாட்டை உருவாக்கக்கூடிய பிற்போக்குத்தனமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பெண்களின் மாதவிடாய் காலம் எவ்வளவு வலியும் வேதனையும் மிக்கது என்று அனைவரும் அறிவர். புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி அரசுக்கு உண்மையில் பெண்கள் மீது அக்கறை இருந்தால், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கேரளா அரசை போல் மாதந்தோறும் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்துத்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல், பெண்களுக்கு வேலை நேர சலுகை அறிவிப்பு, பெண்களை ஏமாற்றும் அரசியல் கபட நாடகம் என சி.பி.எம் மாநில செயலாளர் ராஜாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

publive-image
சி.பி.எம் மாநில செயலாளர் ராஜாங்கம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பெண்களுக்கு மாதத்தில் 3 வெள்ளிக்கிழமையில் இரண்டு மணி நேர பணி சலுகை செயல்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனது கோரிக்கையை ஏற்று முதல்வர் தான் அனுப்பி உள்ள பெண்கள் வேலை நேர கோப்பில் கையெழுத்து இட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது தனது முயற்சியில் பெண்கள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு உள்ளதாக பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தி உள்ளார் துணைநிலை ஆளுநர்.

மேற்படி துணைநிலை ஆளுநரின் அறிவிப்பு சட்டபூர்வமானதா? அரசு துறைகள் அனைத்திற்கும் பொருந்துமா? தனியார் துறைகளுக்கு விரிவுபடுத்த என்ன திட்டம் என்பதில் தெளிவில்லை. மாதத்தில் மூன்று நாட்கள் 2 மணி நேர வேலை குறைப்பு, பெண்கள் முன்னேற்றத்திற்கு என்ன பலனை அளித்திடும் என்பது தெரியவில்லை. 12 மணி நேர வேலை சட்டத்தை துணைநிலை ஆளுநர் வேகவேகமாக ஆதரித்த போது, பெண்கள் மீதான அக்கறை எங்கே போனது?. இதனால் எழுந்த கடும் எதிர்ப்பால் அவசர கதியில் இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கருத வேண்டி உள்ளது.

பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பில் 28.04.2023 தேதியிட்ட எம்.எஸ் நம்பர் 34 எண்ணுடைய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி அரசாணையில் வழிபாடு மற்றும் பூஜை செய்வதற்காக வெள்ளிக்கிழமையில் காலை 8. 45 முதல் 10 .45 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மேலும் கல்வி, காவல், சுகாதாரத் துறைகளுக்கு பொருந்தாது என்றும் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படாமல் சுழற்சி முறையில் சிறப்பு அனுமதி வழங்கப்படவும் வழிவகை செய்கிறது.

இது ஆளுநர் கூற்றுப்படி வேலை நேர குறைப்பு அல்ல. அரசு நிர்வாகத்தில் நடைமுறையில் உள்ளதை வேலை குறைப்பாக பொதுவெளியில் குறிப்பிடுவது அரசியல் நோக்கம் கொண்ட செயலாகும்.

துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் பேட்டிகளில் வெள்ளிக்கிழமை வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிக்காக என குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அரசாணையில் பாரம்பரிய வழிபாடுகள்  மற்றும் பூஜைகளுக்காக என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்து மத வழிபாட்டு உரிமைகளை மதிக்கிறது. அனைத்து மத பண்டிகைகளுக்கும் மதிப்பளித்து தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறைகள் அறிவிக்கப்படுகிறது. இவைகள் எல்லாம் கவனத்தில் கொண்டதாக அரசின் உத்தரவு அமையவில்லை.

பெண்கள் குடும்பத்தில், பணியிடத்தில், சமூகத்தில் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுகிறார்கள் .குழந்தை பேறு தொடங்கி குழந்தை பராமரிப்பு, குடும்ப பராமரிப்பு ஆகிய பணிச்சுமைகளோடு பொருள் ஈட்ட பணியிடங்களிலும் உழைக்க வேண்டி உள்ளது. ஏழைகளுக்கும், பெண்களுக்கும் ஞாயிற்றுக்கிழமையும் இல்லை.. நாளும் கிழமையும் இல்லை.

இவ்வாறான குடும்பம் மற்றும் பணிச் சூழலில் பாரம்பரிய வழிபாடு மற்றும் பூஜைகளுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் இரண்டு மணி நேர முன் அனுமதி என்பது பெண்கள் நலன் சார்ந்ததாக அமையவில்லை. இது உள்நோக்கம் கொண்ட அரசியல் செயலாகும்.

மாநில ஆளுநருக்கும், முதல்வருக்கும் பெண்கள் நலன், அவர்களின் ஆரோக்கியத்தில் உள்ளார்ந்த அக்கறை இருக்குமானால், பெண்களுக்கு வேலை நேரத்தை தினசரி 6 மணி நேரமாக குறைத்திட வேண்டும். தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் கடை மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் புதிய விதிகளை சேர்த்து ஆலைகள் மற்றும் கடை நிறுவனங்களில் பெண்களுக்கு 6 மணி நேர வேலையை உறுதி செய்திட வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சட்ட உரிமைகளை செயல்படுத்த வேண்டும். மேலும் அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற பாலின சமத்துவம், பொது சுகாதாரம், அனைவருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஏதுவாக ரேஷன் கடைகளை திறப்பது, மதுபான கடைகளை படிப்படியாக குறைப்பது, மதுவிலக்கு செயல்படுத்துவது, போதைப் பழக்கத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

ஆகவே மாநில அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்து பெண்களுக்கு வேலை நேரத்தை 6 மணி நேரமாக அரசு மற்றும் தனியார் துறைகளில் செயல்படுத்த வேண்டும். இவைகளுக்காக அனைத்து உழைப்பாளி மக்கள் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும். மேலும் மக்கள் ஒற்றுமையை சிதைக்கும், மதவாத நிகழ்ச்சி நிரலுக்கு மாநிலத்தில் இடம் அளிக்கக்கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுகிறது.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Puducherry Tamilisai Soundararajan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: