Google Map : கூகுள் சேவைகளில் பலருக்கும் பெரும் நம்பிக்கையை தரும் ஒன்று என்பது கூகுள் மேப் தான். பலரையும் தங்கள் கார்களையும் பைக்குகளையும் நம்பி பயணம் மேற்கொள்ள வைக்க இந்த செயலி மிகப் பெரிய அளவில் உதவி வருகிறது. ஆனாலும் சில நேரங்களில் சொதப்பல்கள் ஏற்படத்தான் செய்கிறது. டேக் டைவர்சன் என்று கேட்டு கேட்டு ஊட்டிக்கு வந்த பெங்களூர்வாசிகள் நடுக்காட்டில் மாட்டியது போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் இங்கே இல்லை. புனேவில்.
மேலும் படிக்க : அடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு! என் புத்திய…
மகாராஷ்ட்ராவின் புனேவில் இருந்து மத்திய பிரதேசத்தின் ஜபல்பூருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. டாட்டா ஹாரியர் வைத்திருக்கும் அந்நபர் தன் பெற்றோர்களுடன் ஜபல்பூருக்கு பயணமாகியுள்ளார். ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தமாக ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் அது. முன் பின் அனுபவம் ஏதும் இல்லை என்றாலும் கூட கூகுள் மேப் தந்த முரட்டு தைரியத்தில் வண்டியை ஓட்ட துவங்கியுள்ளார்.
புனேவில் கிளம்பி இரவில் நாக்பூரில் தங்கிவிட்டு மீண்டும் தன் பயணத்தை துவங்கலாம் என்று நினைத்திருந்தார் அவர். நாக்பூர் 700 கி.மீ தொலைவில் உள்ளது. அமராவதி வழியே வந்து கொண்டிருந்த போது மெயின் ரோட்டில் இருந்து கூகுள் மேப் டைவர்ஸன் காட்ட, இன் டூ தி வைல்ட் அனுபவத்திற்கு தன்னை தயார் செய்து கொண்டார் காரின் உரிமையாளர்.
கரடுமுரடான பாதையில் ஒரு மணி நேரம் வந்த பிறகு தான் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதையே அவரால் உணர முடிந்தது. போதாக்குறைக்கு அங்கு ஓடிக் கொண்டிருந்த சிற்றாற்றின் மேல் இருந்த பாலம் உடைந்த நிலையில் இருக்க, காரை கொண்டு போய் அதில் மேல் ஓட்ட முயற்சித்து அது தோல்வியில் முடிவடைந்துள்ளது. அதன் பின்னால் அருகில் இருக்கும் மெக்கானிக்குகளை கூப்பிட்டால் தோராயமாக 80 கி.மீ-க்கு அந்த பக்கத்தில் இருந்து வந்து, நள்ளிரவு 02:30 மணி அளவில் வண்டியை மீட்டுக் கொடுத்துள்ளனர். கூகுள் மேப்பினை நம்பி தான் பயணம் என்றால் இலக்குகளை நிர்ணயம் செய்து, இரண்டு அல்லது மூன்று முறை நண்பர்களிடம் தெரிவு செய்து பின் பயணத்தை துவங்குங்கள். மேலும் 5 மணிக்குள் இலக்கை அடையும்மாறு வைத்துக் கொண்டாலும் நல்லது தானே.. நள்ளிரவில் மாட்டிக் கொண்டு முழிப்பதைக் காட்டிலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil