Rafale stolen documents : இந்திய விமானப்படைக்கு ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து 36 போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது மத்திய அரசு. இந்த போர் விமான ஒப்பந்தத்தில் நிறைய ஊழல் நடந்திருப்பதாக தொடர்ந்து காங்கிரஸ் குற்றம் சுமத்தி வருகின்றது.
திருடு போனது ரஃபேல் ஆவணங்கள்
இந்நிலையில் ஆங்கில நாளேடான தி இந்துவில் தொடர்ந்து ரஃபேல் விமானங்கள் தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (06/03/2019) மத்திய அரசு, பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த ரஃபேல் ஆவணங்கள் திருடு போய்விட்டன என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் நேற்று கே.கே. வேணுகோபால் ஆஜரானார். அவர் தான் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டன என்றும் அதன் அடிப்படையில் தான் கட்டுரைகள் எழுதப்பட்டு வந்தன என்றும் வாதிட்டார்.
Rafale stolen documents - குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு ராமின் பதில்கள்
இது தொடர்பாக என்.ராம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு கூறியது “நாங்கள் ஆவணங்கள் எதையும் திருடவில்லை" என்றும், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் மறுத்துவிட்டார்.
திருடப்பட்ட ஆவணங்களில் இருந்து தான் செய்திகள் வெளியிடப்பட்டன என்ற புகார்களுக்கு பதில் அளித்த அவர், எங்களுக்கு கிடைக்கப்பட்ட தகவல்கள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருந்து கிடைக்கப்பெற்றவை என்று கூறியுள்ளார் என்.ராம். மேலும் நாங்கள் எக்காரணம் கொண்டும் எங்கிருந்து தகவலைப் பெற்றோம் என்பதை யாருக்கும் அறிவிக்க இயலாது என்பதில் திட்டவட்டமாக இருப்பதாகவும் அறிவித்தார்.
நாங்கள் யாரிடமும் எந்த தகவல்களையும் பணம் கொடுத்து வாங்கவில்லை. முழுக்க முழுக்க மக்களுக்கு சரியான தகவலை தர வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த தகவலை பிரசுரித்தோம் என்று கூறினார் ராம். இதனை நீங்கள் திருடப்பட்ட ஆவணங்கள் என்று நீங்கள் கூறலாம். ஆனால் இன்வெஸ்டிகேசன் ஜெர்னலிசத்தில் இவை அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டம் குறித்து ராம் கூறியது
நாங்கள் வெளியிட்ட கட்டுரைகளின் சாராம்சங்களை மத்திய அரசு பாராளுமன்றத்தில் சமர்பிக்காதது. மேலும் அவர்கள் இந்த ஆவணங்களை உச்ச நீதிமன்றத்திலும் சமர்பித்திருக்க மாட்டார்கள் என்றும் நம்புகின்றேன்.
போபர்ஸ் டீலில் ஏற்பட்ட குளறுபடிகள் வெளியான போது நாங்கள் அதையும் வெளியிட்டோம். ஆனால் அன்று யாரும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பவில்லை.
இந்திய சாசன சட்டம் 19 பிரிவு 1 மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 8(1)(i) மற்றும் 8(2)ன் படி நாங்கள் செய்தது சரிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டம் எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தது. அதன் பின்பு எந்த ஒரு சூழலிலும், எந்த ஒரு இதழியல் நிறுவனத்திற்கும் எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டதில்லை என்பதையும் அவர் கூறினார்.
மேலும் படிக்க : ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டோம்- பிரான்ஸ் முன்னாள் அதிபர்
சர்வதேச அளவில் பெண்டகன் ஒப்பந்தம், விக்கி லீக்ஸ் ஆகியவையும் கூட அரசு ஆவணங்கள் தான். அதைத்தான் ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்தன. ஆனால் அரசு அந்த ஆவணங்கள் அனைத்தும் திருடப்பட்டன என்று தான் கூறப்பட்டது. இதற்கு முன்பும் இது போன்று நாங்கள் நிறைய கேள்விப்பட்டதுண்டு என்று என்.ராம் கூறியுள்ளார்.