நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தை வசைபாடிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானியின் வானளாவிய உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பணக்காரர்கள் பட்டியல் தரவரிசையில் 2014 இல் 609 இல் இருந்து 2022 இல் 2 ஆக உயர்ந்துள்ளார், அவருக்கு ஆதரவாக ஏதேனும் "அதிசயம்" நடந்ததா என்று ஆச்சரியப்பட்டார்.
மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய ராகுல் காந்தி, அதானியின் எழுச்சியை 2014ல் ஆட்சிக்கு வந்த மோடி அரசுடன் தொடர்புபடுத்தினார்.
இதையும் படியுங்கள்: அதானி குழும விவகாரம் : நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்கட்சிகள்
”மோடி-அதானி உறவைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அதானிக்கு ஆதரவாக விதிகள் புறக்கணிக்கப்பட்டன... தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப் பிரதேசம் வரை எல்லா இடங்களிலும் ‘அதானி’ என்று ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும், இது வெறும் ‘அதானி’, ‘அதானி’, ‘அதானி’... அதானி எந்தத் தொழிலிலும் இறங்குவது குறித்தும் தோல்வியடையவில்லை என்பது குறித்தும் மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்,” என்று ராகுல் காந்தி கூறினார்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், பங்கு மோசடி மற்றும் முறைகேடான கையாளுதல் என அதானி நிறுவனம் மீது குற்றச்சாட்டுகளை வைத்ததைத் தொடர்ந்து அதானி குழுமம் பங்குச் சந்தை வீழ்ச்சியின் மத்தியில் உள்ளது. எவ்வாறாயினும், அதானி குழுமம் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
அதானி குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து பேசுகையில், பா.ஜ.க எம்.பி.க்கள் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ உடன் இணைந்து எதிர்ப்புத் தெரிவித்து, "அபத்தமான குற்றச்சாட்டுகளை" முன்வைக்க வேண்டாம் என்றும் அவரது கூற்றுகளுக்கு ஆதாரம் அளிக்குமாறும் கேட்டுக் கொண்டனர். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, குடியரசுத் தலைவரின் உரையில் கவனம் செலுத்துமாறு ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டார், மேலும் அவர்களின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், தொழிலதிபர் அதானியின் விமானத்தில் அதானியுடன் பிரதமர் மோடி இருக்கும் படத்தை ராகுல் காந்தி அவையில் காண்பிக்க விரும்பியதையும் சபாநாயகர் ஏற்கவில்லை.
ராகுல் காந்தி தனது உரையின் போது, 2014 மற்றும் 2022 க்கு இடையில் அதானியின் நிகர மதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 140 பில்லியன் அமெரிக்க டாலர்களாக எப்படி அதிகரித்தது என்றும் கேள்வி எழுப்பினார். “அதானி இப்போது 8-10 துறைகளில் இருக்கிறார் என்றும், 2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலர்களாக இருந்த அவரது நிகர மதிப்பு 140 பில்லியன் அமெரிக்க டாலர்களை எப்படி எட்டியது என்றும் இளைஞர்கள் எங்களிடம் கேட்டனர்,” என்று ராகுல் காந்தி கூறினார்.
பிரதமருடனான அதானியின் உறவு, பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறினார். “... ஒரு மனிதர் பிரதமர் மோடியுடன் தோளோடு தோள் நின்று, பிரதமருக்கு விசுவாசமாக இருந்தார் மற்றும் குஜராத் மறுமலர்ச்சி என்ற யோசனையை உருவாக்க திரு. மோடிக்கு உதவினார். பிரதமர் மோடி 2014-ல் டெல்லி சென்றபோதுதான் உண்மையான மேஜிக் தொடங்கியது” என்று ராகுல் காந்தி கூறினார்.
“அதானிஜியுடன் எத்தனை முறை (வெளிநாட்டுப் பயணத்தில்) ஒன்றாகப் பயணம் செய்தீர்கள்? உங்களின் வெளிநாட்டுப் பயணத்தில் அதானிஜி எத்தனை முறை உங்களுடன் சேர்ந்தார்? நீங்கள் வெளிநாட்டிற்கு வந்த பிறகு அவர் உங்களை எத்தனை முறை அணுகினார்? நீங்கள் வெளிநாடு சென்று வந்தப் பிறகு அதானிஜி அங்கு எத்தனை முறை ஒப்பந்தம் பெற்றார்?” என்று மோடியிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினர்.
விமான நிலையங்களில் முன் அனுபவம் இல்லாதவர்கள் முன்பு விமான நிலையங்களின் வளர்ச்சியில் ஈடுபடவில்லை என்று கூறி, அதானிக்கு ஆதரவாக மத்திய அரசு விதிகளை மாற்றியமைத்ததாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும், “இந்த விதி மாற்றப்பட்டு அதானிக்கு ஆறு விமான நிலையங்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு இந்தியாவின் மிகவும் இலாபகரமான விமான நிலையமான ‘மும்பை ஏர்போட்’ சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகளைப் பயன்படுத்தி ஜி.வி.கே.,யிலிருந்து கைப்பற்றப்பட்டு, இந்திய அரசால் அதானிக்கு வழங்கப்பட்டது,” என்றும் ராகுல் காந்தி கூறினார்.
சமீபத்தில் முடிவடைந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது, மக்கள் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் இதர பிரச்சனைகள் குறித்து பேசியதாகவும், ஆனால் ஜனாதிபதியின் உரையில் 'வேலைவாய்ப்பின்மை' பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இது தவிர, ‘அக்னிபாத்’ திட்டம் குறித்தும் ராகுல் காந்தி அரசாங்கத்தை கடுமையாக சாடினார், இது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் உள்துறை அமைச்சகத்தால் இராணுவத்தின் மீது திணிக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், “அக்னிவீரர் திட்டம் குறித்து, மூத்த அதிகாரிகள் எங்களிடம் கூறியது, இந்த யோசனை ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து வந்ததாகவும், இராணுவத்தின் மீது திணிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. நாங்கள் 1000 பேருக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வருகிறோம், அதன்பிறகு, அதிக வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு மத்தியில் அவர்கள் குடிமக்களாக மாறுவார்கள் என்றார்கள். இந்த யோசனையின் பின்னணியில் அஜித் தோவல் இருப்பதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர், என்றும் ராகுல் காந்தி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.