Republic Day Parade 2020 Full Schedule : இந்தியா முழுவதும் 71வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வந்த பின்பு இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த குடியரசு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்தியா கேட்டில் இருந்து துவங்கும் நிகழ்வுகள் இம்முறை தேசிய போர் நினைவிடத்தில் இருந்து துவங்க உள்ளது. அங்கு அவ்வீரர்களுக்காக மலர் வளையம் வைத்து மோடி இந்நிகழ்வினை துவங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் இம்முறை முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, கப்பற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதௌரியா ஆகியோருடன் மோடி இந்த விழாவில் பங்கேற்கிறார். இதே நிகழ்வில் மத்திய ராணுவத்துறை அமைச்சர்
ராஜ்நாத் சிங் மற்றும் துணை ராணுவ அமைச்சர் ஸ்ரீபாத் நாய்க் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் கார்க் ஆகியோரும் உடன் இருப்பார்கள். மலர்வளையம் வைக்கும் நிகழ்வு முடிந்தவுடன் ராஜ்பாத்திற்கு சென்று குடியரசு தினவிழா அணிவகுப்பின் மரியாதையை ஏற்றுக் கொள்வார். 10 மணிக்கு துவங்கும் இந்நிகழ்வு 90 நிமிடங்கள் வரை நடைபெறும்.
ப்ரேசில் நாட்டின் அதிபர் ஜெய்ர் பொல்சோனாரோ இந்த ஆண்டில் சிறப்பு விருந்தினராக குடியரசு தினவிழாவில் பங்கேற்கிறார். மூன்றாவது முறையாக பிரேசில் நாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
அணிவகுப்பின் சிறப்பு நிகழ்வுகள்
இந்த அணி வகுப்பில் 61 குதிரைப்படை வீரர்களின் அணி வகுப்புகள், 8 ஆயுதமேந்திய வீரர்களின் அணி வகுப்புகள், ருத்ரா மற்றும் த்ரூவ் ஹெலிகாப்டர்களின் அணி வகுப்புகள் இடம் பெறும். மேலும் மூன்று பரம் வீர சக்ரா மற்றும் நான்கு அசோக் சக்ரா விருது பெற்றவர்களும் பங்கேற்பார்கள்.
MI-17 மற்றும் ருத்ரா ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர்களின் அணி வகுப்புகள் நடைபெறும். புதிதாக வாங்கப்பட்ட ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அவற்றுள் 155 மிமீ / 45 தனுஷ் கன் சிஸ்டம் & கே -9 வஜ்ரா டி - தானியங்கி துப்பாக்கி, சர்வத்ரா பிரிட்ஜ் சிஸ்டம், போக்குவரத்து செயற்கைக்கோள் முனையம் மற்றும் ஆகாஷ் லாஞ்சர் ஆகியவையும் அடங்கும்.
ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள், டெல்லி காவல்துறையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ் மற்றும் மூன்றூ மிலிட்டரி பேண்டுகள் என மொத்தமாக 16 படைகளின் அணி வகுப்புகள் உள்ளது. ராணுவ அணி வகுப்பினை தலைமை தாங்கி வழி நடத்துகிறார் தன்யா ஷெர்கில்.
ரிசர்வ் படை பெண் காவலர்களின் இரு சக்கர வாகன அணி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்திய விமானப்படையின் விமான அணி வகுப்பும் நடைபெறுகிறது. லெஃப்டினண்ட் ஜெனரல் அசித் மிஸ்ட்ரி டெல்லி பகுதியின் பரேட் கமண்டராக இருப்பார். அதே நேரத்தில் மேஜர் ஜெனரல் அலோக் கக்கெர் மிஸ்ட்ரிக்கு கீழே இரண்டாம் நிலை பொறுப்பு வகிப்பார்.
நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் 22 மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளும் இந்த அணி வகுப்பில் இடம் பெறுகிறது. அவை முறையே சத்தீஸ்கர், தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலுங்கானா, அசாம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கோவா, ஒடிசா, மேகாலயா, குஜராத், ஆந்திரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் ஆகும்.
உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, நிதிச் சேவைத் துறை, என்.டி.ஆர்.எஃப், ஜல் சக்தி அமைச்சகம், கப்பல் அமைச்சகம் மற்றும் சி.பி.டபிள்யூ.டி ஆகியவற்றின் அணி வகுப்புகளும் நடைபெற உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.