Right to access internet a fundamental right : அடிப்படை சேவைகளை வழங்கி வரும் மருத்துவமனைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் முறையாக இணைய சேவைகளை திருப்பி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இணைய சேவையை பயன்படுத்துவது அடிப்படை உரிமையாகும் என்று மேற்கோள்காட்டியுள்ளது உச்சநீதிமன்றம்.
Advertisment
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்துகளை ரத்து செய்து ஆர்ட்டிக்கிள் 370 நீக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அத்தோடு மட்டுமல்லாமல் இணைய சேவைகளையும் முடக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அடிப்படை உரிமைகளை யாரும் அதிகாரத்திற்காக தடை செய்திட இயலாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது போன்ற சுதந்திரங்கள் தேவையான காரணங்களின் அடிப்படையில் மட்டுமே தடை செய்யப்பட வேண்டும். வேறேதும் வழியில்லாத பட்சத்தில் மட்டுமே இதனை செய்ய வேண்டும். ஆனால் அதிகாரத்திற்காக தன்னிச்சையாக அடிப்படை உரிமைகளை தடை செய்ய கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி வி.என். ரமணா அறிவித்தார்.
Advertisment
Advertisements
காலவரையற்ற இணைய சேவை முடக்கம் என்பது டெலிகாம் சட்ட விதிமுறைகளை மீறுவதாகும் என்று மூன்று பேர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இன்று சுட்டிக்காட்டியுள்ளது. முழுமையான இணைய சேவை முடக்கம், தவிர்க்கவே முடியாத காலகட்டம் உருவாகும் போது மட்டுமே செயல்படுத்த முடியும். காலவரையறற்ற இணைய சேவை முடக்கம் என்னும் போது, நிச்சயமாக அது நீதித்துறையின் கண்காணிப்பின் கீழ் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த சேவைகளுக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளதோ அதனை உடனே மறு ஆய்வு செய்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்க உச்ச நீதிமன்றம் அம்மாநில நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை எதிர்த்து மக்கள் வழக்குகள் பதிவு செய்ய அது உதவியாக உஇருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவை எதிர்த்து கருத்து கூறிய உச்ச நீதிமன்றம், 144 சட்டப்பிரிவை ஒரு கருவியாக பயன்படுத்தி, மாற்று கருத்துடையவர்களின் குரலை ஒடுக்க முடியாது என்றும் கடுமையாக கருத்தினை முன்வைத்தது.
வி.என். ராமன், ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், காஷ்மீர் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் அனுராதா பாஷின் ஆகியோர் தொடுத்த வழக்கின் விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் இந்த கருத்துகளை வழங்கியது.