கிங் பிஷ்ஷர் விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபருமான விஜய் மல்லையா கடன் தொல்லைகள் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார். கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து வெளியேறிய விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
விஜய் மல்லையா - வங்கி மோசடி வழக்கு
17ற்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளில் ரூபாய் 9000 கோடிக்கும் மேல் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தவில்லை மல்லையா. அவர் தற்போது லண்டனில் இருப்பதால் இந்தியாவில் இருக்கும் பொதுத்துறை வங்கிகள் இங்கிலாந்து உயர் வணிக நிதீமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் 12/09/2018 - ல் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவு பெற்றவுடன் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மல்லையா “தான் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை நேரில் பார்த்து நிலைமயை விளக்கிக் கூறினேன் என்றும் மிக விரைவாக கடன்கள் அனைத்தையும் திருப்பிச் செலுத்திவிடுவேன்” என்றும் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.
எஸ்.பி.ஐ சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை
இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் அருண் ஜெட்லி. இந்நிலையில் தற்போது ”எஸ்.பி.ஐ வங்கிக்கு, விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறுகிறார் என்பது முன்கூட்டியே தெரியும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடி அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க வேண்டும்” என்றும் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் அறிவுரை வழங்கியதாக கூறியுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் “எஸ்.பி.ஐ வங்கியின் உயர் அதிகாரிகள் சிலருக்கு விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து சந்தேகம் எழுந்தது. அதனால் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடி அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுத்து நிறுத்துங்கள் என்று ஆலோசனை கூறினேன்” என்று கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிற்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் “பிப்ரவரி மாதம் 29ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுங்கள் என்று ஆலோசனை கூறினேன். ஆனால் அதை அவர்கள் செயல்படுத்தவில்லை. நான்கு நாட்களில் விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்” என்று கூறினார்.
இது குறித்து எஸ்.பி.ஐயின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவிடம் பேசிய போது “தேவ் என்ன கூற வேண்டுமோ அதை அவர் கூறிவிட்டார். ஆனால் நான் தற்போது எஸ்.பி.ஐயில் இல்லை. ஆகவே தற்போது இருக்கும் வங்கி நிர்வாகிகளிடம் தான் இது குறித்து கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார்.
விஜய் மல்லையாவும் அருண் ஜெட்லியும் நேரில் பேசியதைப் பார்த்த எம்.பி
இது குறித்த கேள்விகளுக்கு பதில் கூறிய எஸ்.பி.ஐ நிர்வாகிகள் “வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு கட்ட மறுப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படியே கிங் பிஷ்ஷர் நிறுவனத்திடமும் நடந்து கொண்டோம். இந்த குற்றச்சாட்டு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர்.
எஸ்.பி.ஐ உள்ளிட்ட 17 வங்கிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 5ம் தேதி 2016ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. துஷ்யந்த் தேவ் அறிவுரை வழங்கியதோடு மட்டுமின்றி அடுத்த நாள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வதற்காகவும் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் எஸ்.பி.ஐ உயர் அதிகாரிகள் அங்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.