டெல்லியில் ஓடும் பேருந்தில் பாராமெடிக்கல் மருத்துவம் படித்த மாணவி ஒருவர் 2012ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் சிங்கப்பூருக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.
Advertisment
இந்த வழக்கில் முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் (வயது 32), தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.
கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்த நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்ததாக, முகேஷ் சிங்கின் வழக்கறிஞர் வாதிட்டார். சிறையில் முகேஷ் சிங்கை மோசமாக நடத்தியதை காரணமாக காட்டி, கருணை காட்டும்படி கேட்கப்பட்டது. மரண தண்டனை தொடர்பான தீர்ப்புகளையும், கருணை வழங்குவது தொடர்பான ஜனாதிபதியின் அதிகாரம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
அதன்பின்னர் மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடும்போது, குற்றவாளிகள் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்றும், அவருக்கு கருணை காட்டக்கூடாது என்றும் தெரிவித்தார். கருணை மனு பரிசீலனைக்காக, வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், முகேஷ் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது சரியே என்றும் கூறி உள்ளனர்.
கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதியின் முடிவும், உள்துறை அமைச்சகத்தின் ஆவணங்களும் திருப்தியாக இருந்தன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.