ராமர் கோவில் விவகாரம் : அயோத்தியில் ராமர் கோவில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக இந்து அமைப்பினருக்கு இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு அந்நிலம் யாருக்கு சொந்தம், அவ்விடத்தில் கோவில் கட்ட வேண்டுமா அல்லது மசூதி கட்ட வேண்டுமா என்ற சர்ச்சைகள் வருட கணக்காக அயோத்தியில் நடைபெற்று வருகிறது.
1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அது ராமர் பிறந்த இடம், இங்கு ராமர் கோவில் தான் கட்ட வேண்டும் என்று பெரிய பிரச்சனைகள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து பதியப்பட்ட வழக்கினை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி- பாபர் மசூதி அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சரி சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என கடந்த 2010-ல் தீர்ப்பளித்தது.
மேலும் படிக்க : ஃபைசாபாத் அயோத்தி என பெயர் மாற்றம்
ராமர் கோவில் விவகாரம் : அவசர வழக்காக விசாரிக்க இயலாது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால் இந்த வழக்குகள் மீதான விசாரணையை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இந்து மகா சபை அமைப்பு, அயோத்தி வழக்கினை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்றும், இந்த வழக்குகள் மீதான விசாரணைகள் ஜனவரி மாதம் தான் நடைபெறும் என திட்டவட்டமாக கூறியுள்ளது.