2023-24 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதமாக இருக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையை 2025-26 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதமாகக் குறைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் நிதியமைச்சர் கூறினார்.

கடந்த ஆண்டு, ரஷ்யா- உக்ரைன் போர் பாதிப்பினால், இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்திய பொருளாதார மதிப்பில் 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம் என்றும், மேலும் உலகப் பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா ஆக உள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் மத்திய அரசின் பட்ஜெட் குறித்த பரபரப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்தப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு ரெசிஷன் காலகட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மத்திய அரசின் பட்ஜெட்டில் ஏழு முன்னுரிமைகள் கொண்டு மொத்த அறிக்கை உருவாக்கப்பட்டு உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அவை யாதெனில், 1. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி 2. கடைசி மைல் வரை அடையும் சேவை 3. உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 4. திறனை வெளிக்கொணரும் முயற்சி 5. பசுமை வளர்ச்சி 6. இளைஞர் சக்தி 7. நிதித்துறை, ஆகியவை ஆகும்.
இதுவரை நடைபெற்ற மோடி ஆட்சியில், 11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது, 47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வங்கி மற்றும் நிதியியல் சேவை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும், 2023-ம் ஆண்டு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கிராமத்தில் சிறுதானிய உற்பத்திக்கு மத்திய அரசு முன்னுரிமை தரும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கிராமப்புறங்களில் வேளாண் நிறுவனங்கள் தொடங்க முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.