Stop using photos of forces in campaign ads : நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தேதியினை அறிவிக்க இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில், மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
பாலகோட் மற்றும் புல்வாமா தாக்குதல் நடைபெற்று ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், தாக்குதலில் பலியான வீரர்களின் புகைப்படங்களை பொதுக்கூட்டங்களிலும் பிரச்சாரங்களிலும் அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.
Stop using photos of forces in campaign ads - தேர்தல் ஆணையம் கடிதம்
இதனை கவனித்த தேர்தல் ஆணையம் 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளை மறுஆய்வு செய்து அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இந்தியாவில் இருக்கும் அனைத்து முக்கியமான கட்சிகளின் தலைவர்களுக்கும், பொதுச்செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அதில் டிசம்பர் 04,2013 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையினை சுட்டிக்காட்டி “ராணுவ வீரர்கள் இந்நாட்டின் பாதுகாவலர்கள். அவர்கள் இந்த ஜனநாயக நாட்டினை அரசியல் பாகுபாடின்றி நிலை நிறுத்தும் வீரர்கள். அதனால் அவர்களின் புகைப்படங்களை பயன்படுத்துதல் அதன் மூலம் வாக்கு சேகரித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும் ராணுவ படைத் தளபதிகள் மற்றும் ஏனைய ராணுவ வீரர்களின் படத்தினை எந்த ஒரு கட்சியினரும் தேர்தல் விளம்பரங்கள், பொதுக்கூட்டங்கள், மற்றும் அறிக்கைகள் என எதிலும் பயன்படுத்தக் கூடாது என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளது.
ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் சனிக்கிழமை உள்ளூர் பாஜக தலைவர்கள் விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமானின் புகைப்படங்களை கட்சி போஸ்டர்களில் பயன்படுத்தியது குறித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கிறதா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார் அவர்.
சமீபத்தில் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் ராணுவ சீருடை அணிந்து வந்ததும், ராஜஸ்தானில் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
முன்னாள் கடற்படை வீரர் ராமதாஸ் என்பவர் தேர்தல் ஆணையத்திற்கு “ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது. ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி ராணுவ அமைப்பின் சாராம்சத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்” என்று கடிதம் எழுதினார்.
மேலும் படிக்க : எங்கள் அப்பாவையும் இப்படித்தான் இழந்தோம்… ராணுவ வீரர் அஞ்சலி நிகழ்வில் ராகுல் உருக்கம்!