திருப்தி தேசாய் : உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் தொடர்ந்து மூன்றாவது முறையாக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் 28ம் தேதி உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றினை வழங்கியது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்தளம் ராஜ குடும்பத்தினர் மற்றும் தலைமை தந்திரி குடும்பத்தினர் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் மண்டல மற்றும் சித்திர ஆட்ட விஷேசம் என இரண்டு நிகழ்வுகளுக்காக இரண்டு முறை ஐயப்ப தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டது. இருப்பினும் ஐயப்பனை தரிசிக்க வந்த பெண்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
சித்திர ஆட்ட விஷேச நிகழ்விற்கு வந்த பெண்ணிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட 150 பேர் மீது வழக்கு
இந்நிலையில் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்தி நாளை ஐயப்பனை தரிசிக்க விரும்புவதாக கேரள அரசிடம் கோரிக்கை வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை நிறைவேற்றி எனக்கு பாதுகாப்பு தர வேண்டியது மாநில அரசின் கடமை என்றும் கூறியிருக்கிறார்.
கொச்சி விமான நிலையம்
கொச்சி விமான நிலையத்தில் முடங்கிய திருப்தி தேசாய்
நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அனைத்துக் கட்சி பொதுக்கூட்டத்தினைக் கூட்டினார். அதில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை நிறைவேற்றுவதை தவிர மாநில அரசிற்கு வேறு வழியில்லை. நிச்சயமாக பெண்களின் அனுமதியை மறுக்க இயலாது என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
கொச்சி விமான நிலையம் முன்பு போராட்டத்தில் இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
தற்போது திருப்தி தேசாய் ஐயப்பனை தரிசனம் செய்ய கொச்சி புறப்பட்டு வந்திருக்கிறார். ஆனால் அவரை விமான நிலையத்தில் இருந்து விடுதிக்கு அழைத்து செல்ல மறுத்துவிட்டனர் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள். அதே போல், கொச்சி விமான நிலையத்திற்கு வெளியே ஐயப்ப பக்தர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கொச்சி விமான நிலையத்திலேயே முடங்கினார் தேசாய்.
யாரிந்த திருப்தி தேசாய் :
பூமாதேவி என்ற இயக்கத்தை நடத்தி வருபவர் திருப்தி தேசாய். இந்தியாவில் பெண்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கோயில்களுக்குச் சென்று மூடபழக்க வழக்கங்களை ஒழிப்படஹை லட்சியமாக கொண்டு செயல்படுவர் திருப்தி . என்ன நடந்தாலும் சரி ஐயப்பனை தரிசனம் செய்யாமல் மகாராஷ்ட்ரா திரும்ப மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அவருடன் மேலும் ஐந்து பெண்கள் ஐயப்பனை தரிசிக்க வந்துள்ளனர்.
மும்பை திரும்பிய திருப்தி தேசாய்
கொச்சி விமான நிலையத்தில் இருந்து நிலக்கலில் இருக்கும் விடுதிக்கு செல்ல டாக்சி ஓட்டுநர்கள் யாரும் முன்வராத நிலை நேற்று ஏற்பட்டது. மேலும் ஐயப்ப பக்தர்கள் கோஷங்களை எழுப்பிய வண்ணம் கொச்சி விமான நிலையத்திற்குள் போராட்டம் நடத்தினார்கள். எதிர்ப்பு அதிகமான காரணத்தால் நேற்று மும்பை திரும்பினார் திருப்தி தேசாய்.
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் “எங்களின் வருகையை எதிர்க்க வேண்டும் என்றால், நிலக்கல்லில் தான் எதிர்க்க வேண்டும். ஆனால் விமான நிலையம் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார். மேலும் “அடுத்த முறை சபரிமலைக்கு வரும்போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வருவேன். அப்போது எனக்கு காவல்துறை உதவி செய்வதாக கூறியிருக்கிறார்கள்” என்றும் கூறினார் திருப்தி தேசாய்.