உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற குழு தள்ளுபடி செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் பணியாளர் ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் பிரமாணப் பத்திரம் அனுப்பியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஞ்சன் கோகாய், நீதித்துறை மீதான தாக்குதல் இது என்றும், குற்றச்சாட்டுக்கு பதிலளித்து தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.
மேலும் படிக்க - Sexual Harassment Case: நீதிபதி பாப்டேவை சந்தித்த சந்திரசூட்: தான் எழுப்பிய விவகாரங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள கோரிக்கை!
இதையடுத்து, ரஞ்சன் கோகாய் அளித்த பரிந்துரை அடிப்படையில், அவருக்கு அடுத்த சீனியர் நீதிபதியான எஸ்.ஏ.பாப்டே தலைமையில் இந்திரா பானர்ஜி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய இரு பெண் நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை குழுவின் முன்னிலையில் புகார் அளித்த பெண் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதேபோல, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் இந்த குழு முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்படுவதாக மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அறிவித்துள்ளது.
புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால், அதனை தள்ளுபடி செய்வதாக உள் விசாரணைக்குழு குறிப்பிட்டுள்ளது. உள்விசாரணைக்குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியிடம் சமர்பிக்கப்பட்டதோடு, இதில் சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதிக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டது.
அதேசமயம் இந்த விசாரணை குழுவின் அறிக்கை விபரங்கள் வெளியுலகிற்கு தெரிவிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.