Tamil Nadu Kerala couple got married at the border check post : தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியை சேர்ந்தவர் ரத்னம். அவருடைய மகன் பிரசாந்துக்கு (25) கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கணேசனின் மகள் காயத்ரியை (19) சில மாதங்களுக்கு முன்பு நிச்சயம் முடித்தனர். கேரளா, இடுக்கியில் அமைந்திருக்கும் வண்டிப்பெரியாறு வாளார்டியில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெறும் என்று பேசி முடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிரசாந்த் ஆன்லைனில் கேரளாவுக்கு செல்ல விண்ணப்பம் செய்தும் அவருக்கு இ.பாஸ் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று தமிழக கேரள எல்லையான குமுளி சோதனைச் சாவடிக்கு மணக்கோலத்தில் மணமக்கள் வந்தனர். இதனை கண்ட இருதரப்பு காவல்துறையினரும், விசயம் என்ன என்று விசாரித்தனர். அவர்களிடம் விசயத்தை சொல்லி வண்டிப் பெரியாருக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால் அதற்கு கேரள காவல்துறை மறுப்பு தெரிவித்தது.
இருதரப்பு ஆலோசனைப்படி, அவர்கள் இருவருக்கும் முகூர்த்த நேரத்தில், சோதனைச் சாவடி அருகே மணம் முடித்தனர். இந்த திருமணத்தில் காவல்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆனாலும் மணமக்களுக்கு எல்லைகளை தாண்ட இ-பாஸ் இல்லாத காரணத்தால் மணமகன் தன் வீட்டிற்கும், மணமகள் அவர் வீட்டிற்கும் திரும்பிச் சென்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“