/tamil-ie/media/media_files/uploads/2022/09/gehlot-tharoor-pulse.jpg)
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடக்கவுள்ள தேர்தலில், லோக்சபா எம்.பி., சசி தரூர், தான் போட்டியிடுவது குறித்து சோனியா காந்தியிடம் பரிசீலித்துள்ளார், அப்போது தேர்தலில், "நடுநிலையுடன்" இருப்பேன் என, சோனியா காந்தி அவருக்கு உறுதியளித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு போட்டியிடுவார் என்று இன்னும் நம்புவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ராகுல் தனது முடிவில் உறுதியாக இருந்தால், அசோக் கெலாட் களத்தில் இறங்கலாம் என்றும், 22 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சி உயர் பதவிக்கான போட்டியைக் காணக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படியுங்கள்: போதையில் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டாரா பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்? ஜெர்மன் ஏர்லைன்ஸ் விளக்கம்
வெள்ளிக்கிழமை வெளிநாட்டிலிருந்து திரும்பிய சோனியாவுடனான சசி தரூரின் சந்திப்பு, ராகுலைத் தலைவராகப் பொறுப்பேற்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநில கமிட்டிகள் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் நடந்துள்ளது. நடக்கவிருக்கின்ற தலைவர் பதவிக்கானத் தேர்தலில் "நடுநிலையாக" இருப்பேன் என்று சோனியா, வேறுவிதமாகக் கூறினால், காந்தி குடும்பம் சசி தரூரிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சி எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதில் பெரும் மாற்றங்களை விரும்பும் G-23 தலைவர்களில் ஒருவரான சசி தரூர், 40 நிமிட சந்திப்பு பற்றிய விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். அவருடன் பேசிய சில தலைவர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் சோனியா தனது நடுநிலைமையை அவருக்கு உறுதியளித்ததாகக் கூறினர், இது அவர் எந்த வேட்பாளரையும் ஆதரிக்க மாட்டார் என்பதற்கான சமிக்ஞையாகக் கருதப்பட்டது, மேலும் அதிகாரப்பூர்வ அல்லது ஸ்தாபன வேட்பாளர் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் தெரிகிறது.
"சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு" சோனியா ஆதரவாக இருப்பதாகவும், ஆற்றல்மிக்க போட்டியின் மூலம் கட்சி வலுப்பெறும் என்று அவர் நம்புவதாகவும் சசி தரூருக்கு அபிப்பிராயம் கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
கட்சியை வழிநடத்துமாறு அசோக் கெலாட்டை சோனியா கேட்டுக் கொண்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் முன்னதாகவே தெரிவித்திருந்தன. அந்த பின்னணியில் தான் நடுநிலையாக இருப்பேன் என்று சசி தரூருக்கு அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. ஜி-23 தலைவர்கள் தேர்தல் நடைமுறையின் நேர்மை குறித்து கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்ற செய்தியை அனுப்பும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
சசி தரூர் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியபோது சோனியா அவரைத் தடுக்கவில்லை என்றும், அதற்கான காரணத்தை அவரிடம் கூறியதாகவும் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
"போட்டியிட விரும்பும் எவரும் தாராளமாக களமிறங்கலாம், மேலும் போட்டியிட வரவேற்கப்படுகிறார்கள். இது காங்கிரஸ் தலைவர் மற்றும் ராகுல் காந்தியின் நிலையான நிலைப்பாடு. இது ஒரு திறந்த, ஜனநாயக மற்றும் வெளிப்படையான செயல்முறையாகும். போட்டியிட யாருக்கும் யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
தேர்தல் குறித்த சோனியாவின் மனதை அறிய சசி தரூர் விரும்புவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ராகுலை ஆதரிக்கும் தீர்மானங்கள் மாநில காங்கிரஸ் கமிட்டிகளால் தலைமையின் உத்தரவின் பேரில் அவர் "அவரது மனதை மாற்றுவதற்கு" களத்தை தயார்படுத்துவதாக என ஜி-23 தலைவர்கள் நம்புகிறார்கள் என்ற உண்மையின் வெளிச்சத்தில் இது உள்ளது.
கட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய சலசலப்பைக் கூட்டி, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், "ஆக்கபூர்வமான சீர்திருத்தங்கள்" மற்றும் உதய்பூர் பிரகடனத்தை முழுவதுமாக அமல்படுத்தக் கோரி இளம் காங்கிரஸ் உறுப்பினர்கள் குழு தாக்கல் செய்த மனுவை திங்களன்று சசி தரூர் ஆமோதித்தார். “கட்சியில் ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களைக் கோரி இளம் @INCIndia உறுப்பினர்கள் குழுவினால் விநியோகிக்கப்படும் இந்த மனுவை நான் வரவேற்கிறேன். இது இதுவரை 650 க்கும் மேற்பட்ட கையெழுத்துகளை சேகரித்துள்ளது,” என்று மனுவின் ஸ்கிரீன்ஷாட்களுடன் சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.
I welcome this petition that is being circulated by a group of young @INCIndia members, seeking constructive reforms in the Party. It has gathered over 650 signatures so far. I am happy to endorse it & to go beyond it. https://t.co/2yPViCDv0v pic.twitter.com/waGb2kdbTu
— Shashi Tharoor (@ShashiTharoor) September 19, 2022
மனுதாரர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாகிய அவர்கள், "நமது தேசத்தின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வகையில் கட்சியை வலுப்படுத்த விரும்புகிறோம்" என்று கூறியுள்ளனர், மேலும் மே 15 அன்று கட்சியின் சிந்தன் ஷிவிரில் உதய்பூர் பிரகடனத்தைப் பற்றிக் குறிப்பிட்டனர். "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரிடமும், தொகுதிக் கமிட்டி முதல் CWC வரையிலான கட்சி உறுப்பினர்களை ஈடுபடுத்துவதற்கான பொது உறுதிமொழியை மேற்கொள்ளவும், பதவியேற்ற முதல் 100 நாட்களில் உதய்பூர் பிரகடனத்தை முழுவதுமாக நடைமுறைப்படுத்தவும் கேட்டுக்கொள்கிறோம்,” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
திங்களன்று, மேலும் நான்கு மாநில காங்கிரஸ் கமிட்டிகளான பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மற்றும் மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகியவை ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் குஜராத் ஆகியவற்றுடன் இணைந்து ராகுலை கட்சித் தலைவராக ஆதரித்து தீர்மானங்களை நிறைவேற்றியது.
ராகுலுக்கு பதவியில் ஆர்வம் இல்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். “இந்த தீர்மானங்கள் அவரது விருப்பத்திற்கு எதிரானவை, இவை திட்டமிடப்பட்டவை அல்ல. சிலர் ராஜாவை விட விசுவாசமாக இருக்க முயற்சிக்கிறார்கள், ”என்று ஒரு தலைவர் கூறினார்.
இருப்பினும், G-23 தலைவர் ஒருவர் பதிலளித்தார்: “காந்திகளுக்குத் தெரியாமல் இதுபோன்ற விஷயங்கள் எப்படி நடக்க முடியும்? இந்த விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் அனைவரும் காங்கிரஸில் நீண்ட காலமாக இருக்கிறோம்.”
மற்றொரு தலைவர் கூறினார்: “இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதை காந்திகள் விரும்பவில்லை என்றால், தீர்மானங்கள் எதுவும் இருக்காது."
கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தற்செயலாக கூடி ராகுலைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. மற்ற மாநில பிரிவுகளைப் போலவே, மாநில காங்கிரஸ் தலைவர்களை நியமிக்கவும், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு AICC பிரதிநிதிகளை நியமிக்கவும் காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் மற்ற தீர்மானத்தை இந்த இரண்டு மாநில பிரிவுகள் நிறைவேற்றினர். இது காங்கிரஸ் அரசியலமைப்பின்படி தேர்தலுக்கு முன் செய்யப்பட வேண்டும்.
சில தலைவர்கள் காந்திகள் போட்டியிடாத நிலையில் ஒரு போட்டியை நடத்த விரும்புவதாகக் கூறினார்கள். தற்போதைய தலைமையை விமர்சிப்பவர்களில் ஒருவர், "ஒருமித்த தேர்வாக வேறு எந்த தலைவரும் வெளிப்படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்" என்று கூறினார்.
ஒரு தலைவர் மேலும் கூறினார்: “ஒரு முறை தவிர, கடந்த 24 ஆண்டுகளில் காந்திகள் உயர் பதவிக்கான போட்டியை எதிர்கொண்டதில்லை. (1998ல் சோனியா காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார், 2000ல் ஜிதேந்திர பிரசாத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டப்போது போட்டியை எதிர்கொண்டார்). வேறு எந்தத் தலைவரும் காங்கிரஸ் தலைவராக விரும்பினாலும், காந்திகளின் ஆசி பெற்றாலும் (தேர்தல்) போராடித் தான் வெற்றி பெற வேண்டும். காந்திகள் மீதுதான் ஒருமித்த கருத்து உள்ளது.”
திங்களன்று, காங்கிரஸின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் மிஸ்திரியையும் சோனியா சந்தித்தார். ஆணையம் இதுவரை செய்த பணிகளைப் பற்றி மிஸ்திரி சோனியாவிடம் கூறினார், அதே நேரத்தில் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு சோனியா அவரிடம் கூறியதாக அறியப்படுகிறது.
ராகுலை ஆதரிக்கும் தீர்மானங்கள் குறித்து கேட்டதற்கு, மிஸ்திரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், மத்திய தேர்தல் ஆணையத்தால் அவற்றைப் பற்றி அதிகம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறினார். மேலும், “அவர்களை எப்படி நிறுத்துவது? ஆணையத்தின் தலைவராக நான் எப்படி அவர்களைத் தடுக்க முடியும்? நாங்கள் அறிவித்துள்ள தேர்தலுக்கான அட்டவணையை நிறைவேற்றி வருகிறோம்” என்றும் அவர் கூறினார்.
பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மதன் மோகன் ஜா கூறுகையில், ராகுலை தலைமைப் பதவிக்கு ஆதரிப்பதற்கான தீர்மானம் திங்கள்கிழமை மாநிலப் பிரிவால் "ஒருமனதாக" நிறைவேற்றப்பட்டது, மேலும் இது "தேசம் மற்றும் கட்சியின் நலன்" என்று கூறினார்.
ராகுல் ஆர்வம் காட்டாதது குறித்து மதன் மோகன் ஜா கூறுகையில், “அவரிடம் கோரிக்கை வைப்பது எங்கள் வேலை. தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளை அவரது கவனத்திற்கு கொண்டு வருவது எனது பொறுப்பு. தீர்மானத்தில் கலந்து கொண்டவர்களிடம் கையெழுத்து பெற்று அவருக்கு அனுப்பி வைக்கிறேன். மீதி அவர் கையில்” என்று கூறினார்.
தலைவர் பதவி தேர்தலுக்கான தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியது குறித்து கூறுகையில், “கட்சி அவரை பொறுப்பேற்கச் சொல்கிறது. அவர் போட்டியிட்டு அவரை எதிர்த்து யாராவது போட்டியிட முன்வந்தால், அப்போதுதான் தேர்தல் வரும். ராகுல் போட்டியிட்டால் களத்தில் இறங்க மாட்டோம் என்று மக்கள் சொல்கிறார்கள்... அவரை எதிர்த்து யாரும் போட்டியிடப்போவதில்லை. அதனால்தான் நாங்கள் அவரைக் கேட்டுக்கொள்கிறோம்… உங்கள் இல்லை என்பதை ஆம் என மாற்றவும்" என மதன் மோகன் ஜா கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்மொழிந்த “ஒருமித்த” தீர்மானத்தில், தமிழ்நாடு மாநில கமிட்டி., தேசிய அரசியலில் வகுப்புவாத அரசியலின் “அசாதாரண சூழ்நிலை” காணப்படுவதாகக் கூறியது. மக்களை மீட்கவும், 2024 லோக்சபா தேர்தலில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் வெற்றியை உறுதி செய்யவும், கட்சியின் தலைமையை ராகுல் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் என்று தீர்மானம் கூறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.