திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் -19 சிகிச்சை வார்டில், இரண்டு நோயாளிகள் இன்று (ஜூன்.10) தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Advertisment
இன்று காலை 11:30 மணியளவில், திருவனந்தபுரம் மாவட்டம் அனாடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், கோவிட் -19 தனிமை வார்டுக்குள் தூக்கில் தொங்கியதை செவிலியர்கள் கண்டனர். மருத்துவமனை ஊழியர்கள் அவரை கீழே இறக்கி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதிலும், அவர் உயிர் இழந்தார்.
மே 31 ஆம் தேதி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த 33 வயதான நபர், சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வெளியேற்றப்பட்டார். செவ்வாயன்று, அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த போது, யாருக்கும் தெரியாமல் தப்பியோடி அரசுப் பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்றார். உள்ளூர்வாசிகள், அவர் ஊருக்கு வந்ததை கண்டுபிடித்ததும், அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்த காவல்துறை சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, மனநல நிபுணர்களின் குழு அவருக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கியது. புதன்கிழமை காலை, செவிலியர்கள் அவருக்கு மருந்துகள் கொடுப்பதில் மும்முரமாக இருந்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர், அதே வார்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 38 வயதான அந்த நபர் புதன்கிழமை காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சம்பவங்களும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று சுகாதார அமைச்சர் அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது. குறைபாடுகள் இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது கூறியுள்ளது.
கொரோனா வார்டில் இருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, கேரள சுகாதார அமைச்சர் கே கே ஷைலஜா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்த அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“