மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அக்கட்சியின் பிரிவினர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சிவசேனாவின் தேர்தல் சின்னமான வில் மற்றும் அம்புகளை முடக்கி இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவிட்ட ஒரு நாள் கழித்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவு மாற்றுச் சின்னமாக திரிசூலம், உதயசூரியன் மற்றும் ஜோதி ஆகிய மூன்று விருப்பத்தேர்வுகளை பட்டியலிட்டு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியது.
"சின்னத்திற்கான எங்கள் விருப்பங்களை நாங்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம். முன்னுரிமைகள் திரிசூலம், ஜோதி மற்றும் உதயசூரியன் ஆகும்,” என்று தெற்கு மும்பை எம்.பி.,யும் உத்தவ் தலைமையிலான குழுவின் தலைவருமான அரவிந்த் சாவந்த் கூறினார்.
இதையும் படியுங்கள்: ‘ரியல் சிவசேனா’.. கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடி
கடந்த ஆண்டு செப்டம்பரில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட இலவச சின்னங்களின் சமீபத்திய பட்டியலின்படி, உத்தவ் தலைமையிலான சிவசேனாவின் விருப்பத்தேர்வுகள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கட்சி சின்னம் முடக்கம் விவகாரம் தொடர்பாக கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் உத்தவ் தாக்கரே பேச உள்ளார்.
இருப்பினும், உத்தவ் தலைமையிலான பிரிவுக்கு மாறாக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு மாற்று சின்னங்கள் எதையும் கோரவில்லை. வில் மற்றும் அம்பு சின்னத்திற்கு உரிமை கோரப்போவதாக ஏக்நாத் ஷிண்டே குழுவின் தலைவர்கள் தெரிவித்தனர்.
“தேர்தல் ஆணையத்தின் முடிவு எங்களுக்கு ஒரு அநீதி. வில் மற்றும் அம்பு எங்களின் உரிமை என்பதால், அதை உரிமை கொண்டாடும் எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் இன்னும் உறுதியாக இருக்கிறோம். நாங்கள்தான் உண்மையான சிவசேனா... சின்னம் முடக்கப்பட்டதில் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம்” என்று மாநில அமைச்சரும் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியின் செய்தித் தொடர்பாளருமான தீபக் கேசர்கர் கூறினார்.
உத்தவ் தலைமையிலான பிரிவினர் உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் பதில் அளிக்காததால் சின்னம் முடக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், “அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் பதிலைச் சமர்ப்பிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இன்னும் அவகாசம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். எனவே, தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்க முடிவு செய்தது, இப்போது அந்தப் பிரிவு (உத்தவ்) எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது மற்றும் தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கிறது… அவர்கள் இதைச் செய்வதன் மூலம் மக்களிடமிருந்து அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறார்கள், நாங்கள் தேர்தல் ஆணைய முடிவை ஏற்றுக்கொண்டோம். தேர்தல் ஆணையத்தை மீண்டும் அணுகி எங்கள் தரப்பு கோரிக்கையை முன்வைப்போம்,” என்றும் கேசர்கர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.