Uttar Pradesh 2022 Assembly elections : அனைத்திந்திய மஜிலிஸ்-இ-இத்தேஹாதூல்- முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி மீது நடத்தப்பட்ட தாக்குதல், உ.பியில் கால்பதிக்க முயலும் ஹைதராபாத்தை தளமாக கொண்ட கட்சியின் மீது கவனத்தை ஈர்த்தது.
2008ம் ஆண்டு பீகார் தேர்தலில் இருந்து செயல்பாட்டில் இருக்கும் கட்சி அந்த தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்று பலரின் கவனத்தையும் ஈர்த்தது. வருகின்ற உ.பி. தேர்தலில் மூன்றாம் முன்னணியை பகிதாரி பரிவர்தன் மோர்ச்சா, முன்னாள் உ.பி. அமைச்சர் பாபு சிங் குஷ்வாகாவின் ஜான் அதிகார் கட்சி மற்றும் வாமன் மெஷ்ராமின் பாரதிய முக்தி மோர்ச்சா கட்சியுடன் இணைந்து உருவாக்கியுள்ளது அனைத்திந்திய மஜிலிஸ் இ-இத்தேஹாதூல்-முஸ்லிமீன் கட்சி.
100 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கும் இக்கட்சி ஏற்கனவே 66 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அங்கு இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு முன்னதாக ஹைதராபாத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஓவைஸி அடிக்கடி உ.பி. மாநிலத்திற்கு செல்வதுண்டு. எஸ்.பி.எஸ்.பி. தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார், ப்ரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் ஷிவ்பால் யாதவ், மற்றும் ஆசாத் சமாஜ் கட்சியின் சந்திரசேகர் உட்பட அங்கே பல எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை.
தன்னுடைய உரைகளின் போது அடிக்கடி பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சியினரை தாக்கி அவர் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்களின் வாக்குகளை பிரிக்கும் அக்கட்சி பாஜகவின் ”பி.டீம்” என்ற விமர்சனங்களுக்கும் ஆளானது என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதம் தன்னுடைய பேச்சு ஒன்றில், முசாஃபர் நகர் கலவரம் நிகழ்ந்த போது ஒரு முதல்வராக வழக்குகளை அகிலேஷ் யாதவ் துவங்கியிருந்தால் யோகியால் 77 வழக்குகளை திரும்பப் பெற்றிருக்க முடியாது என்று சமாஜ்வாடியை தாக்கி பேசினார்.
உத்தரபிரதேசத்தில் சுதந்திரமான இஸ்லாமிய தலைவரை சமாஜ்வாடி கட்சி விரும்பவில்லை என்று அவர் அடிக்கடி கூறி வருகிறார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர், குறைந்த 10 தொகுதிகளிலாவது எங்களின் கட்சி கடுமையான போட்டியை தரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்டிருக்கும் தொகுதிகள் மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. பஹ்ரைச்சில் உள்ள நன்பரா, அயோத்தியில் ருதாவுலி, சித்தார்த் நகர் மாவட்டத்தில் டோமரியகஞ்ச், சஹாரன்பூர் டெஹாட், காஜியாபாத்தின் சாஹிபாபாத் மற்றும் மீரட்டில் உள்ள சிவல் காஸ் ஆகியவை கடும் சவாலை சந்திக்க இருக்கும் தொகுதிகளாக உள்ளன.
இக்கட்சி இன்னும் உ.பியில் கால் பதிக்க முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் ஓவைஸியின் புகழ் சி.ஏ.ஏவிற்கு எதிரான 2019ம் ஆண்டு டிசம்பர் மாத போராட்டத்தின் போது மாநிலம் முழுவதும் பரவியது. அனல் பறக்கும் பேச்சுகள் அவரை ஒரு இயல்பிலேயே கூட்டத்தை கவரக் கூடியவராக இருக்கின்ற போதும், பிரபலத்தை அவரால் வாக்குகளாக மாற்ற முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2017ம் ஆண்டு உ.பி. தேர்தலில் போட்டியிட்ட இக்கட்சி 38 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது. அப்போது அதன் வாக்கு வங்கி 0.24% ஆக இருந்தது. சம்பாலில் இதன் போட்டி கடுமையாக இருந்தது. அங்கே அக்கட்சியின் வேட்பாளர், பாஜகவிற்கு அடுத்த படியாக, ஜியூர் ரெஹ்மான் 59,336 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். அந்த தொகுதியில் இக்பால் முகமது 79248 வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 23 ஜில்லா பஞ்சாயத்து இடங்களில் வெற்றி பெற்றது.
உ.பி.யில் தோல்வி அடைவதால் இக்கட்சிக்கு இழப்பு ஏதும் இல்லை. ஆனால் சிறப்பாக பங்காற்றும் பட்சத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகளை அதிகம் நம்பியிருக்கும் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் அடியாக இருக்கும்.
ஓவைஸி கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியால் 10 ஆயிரம் வாக்குகளை பெற முடிந்தால் எங்கள் வாக்கு வங்கிகளில் இடம் பெற்றிருக்கும் இஸ்லாமியர்களின் வாக்கு தான். இது பல இடங்களில் பாஜகவிற்கு சாதகமான வாய்ப்பை வழங்கலாம் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார்.
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உ.பி. மாநிலத்தில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 19% ஆக உள்ளது. 60-70 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் கட்சியாக இக்கட்சி உள்ளது. இந்த தொகுதிகளில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 35% முதல் 50% வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
உ.பி. தேர்தல் குறித்த மேலும் பல செய்திகள்
உ.பி.தேர்தல் 2022: பா.ஜ.க.வுக்கு கவலை அளிக்கும் வேலையின்மை, விலைவாசி; காப்பாற்றும் இலவச ரேஷன்
தேர்தலுக்கு முன்பே விரிசலடையும் சமாஜ்வாடி கூட்டணி; குழப்பத்தில் தத்தளிக்கும் கட்சிகள்
தயாராகும் ராமர் கோவில்; ஆனாலும் அயோத்தியில் பா.ஜ.க-வுக்கு சவால்
உ.பி., தேர்தலில் ஆச்சரியமளித்த பாஜக; அகிலேஷூக்கு எதிராக மத்திய அமைச்சர் பாகேல் போட்டி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.