இரண்டாம் முறை நீட் எழுதப் போகின்றவர்களா நீங்கள்? உங்களுக்கான சில முக்கிய குறிப்புகள்:
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், சி்றிது நேரத்திற்கு முன்பு, இனி வருடத்திற்கு இரண்டு முறை நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் நடைபெறும் என்று கூறியுள்ளது. கடந்த மே மாதம் நீட் தேர்வு எழுதி அதில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களா நீங்கள்? உங்களால் அடுத்த நீட் தேர்வினை வரும் டிசம்பர் மாதம் எழுத இயலும்.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளார்கள். இந்த இரண்டு தேர்வுகளிலும் ஒரு மாணவரால் கலந்து கொள்ள இயலும். இந்த இரண்டு தேர்வுகளின் முடிவில், அதிகமான மதிப்பெண் பெற்ற தேர்வு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதைப் பற்றி என்ன சொல்கிறது மத்திய அரசு
தற்கொலை அல்லது மாற்றுக் கல்வி என்று உங்களின் கனவுகளை தொலைப்பதற்கு பதிலாக எதிர்வரும் அடுத்த நீட் தேர்விற்கு நீங்கள் தயாராவதற்கு சில டிப்ஸ் இதோ.
1. உங்களின் பலம் மற்றும் பலவீனமான பாடங்கள் எது என்பதை கண்டறியுங்கள். மீண்டும் முதலில் இருந்து அந்த பாடங்களை வரிசையாக படித்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி அந்த பாடங்களில் தேர்வெழுதுங்கள். கடைசி நேரத்தில் படிப்பதற்கு அந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்.
2. முக்கியமான பாடப் பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது நல்லது. அனைத்தையும் புரிந்து படித்து அதை நினைவில் வைத்துக் கொள்ள படங்கள், கிராப்கள் போன்றவற்றை பயிற்சி செய்யுங்கள்.
3.நேர மேலாண்மை மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். முதலில் எந்த பகுதி கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும், கடைசியில் எந்த பகுதி கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
4. பயிற்சி வகுப்புகளில் சேர்வது பற்றி யோசித்து முடிவெடுங்கள். உங்கள் பள்ளியில் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ அதையே உங்களின் பயிற்சிப் பள்ளிகளிலும் சொல்லிக் கொடுத்தார்கள் எனில், அதைப் பற்றி யோசித்து முடிவு செய்யுங்கள். பயிற்சி வகுப்பில் இருக்கும் ஒரே ஒரு நல்ல விசயம் என்னவென்றால் அதிகமாக எழுதப்படும் தேர்வுகள். அதை நீங்கள் உங்களின் வீடுகளிலேயே முயற்சி செய்து பாருங்கள். ஏதாவது சந்தேகம் வருகிறது என்றால் ஆன்லைன் செயலிகள் மூலம் அதை சரி செய்து கொள்ளுங்கள். தனியாக படித்தல் என்பது உங்களின் நேரம், பணம் ஆகியவற்றை மிச்சப்படுத்தும்.