அயோத்தி வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தன் தீர்ப்பில், 'அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும். இதற்காக ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளையிடம், இந்த நிலத்தின் பராமரிப்பை ஒப்படைக்க வேண்டும். இந்த அறக்கட்டளை எப்படி செயல்பட வேண்டும், அதில் இடம் பெற்றுள்ளோரின் அதிகாரம் என்ன, கோவில் கட்டுமானம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்குள் இந்த அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும். இந்த வழக்கின் ஒரு தரப்பான, நிர்மோஹி அகாடாவைச் சேர்ந்தவர்களை அறக்கட்டளை யில் சேர்ப்பது குறித்து, மத்திய அரசு முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டது'.
இந்நிலையில், 1990 களில் அயோத்தி கோயில் போராட்டத்தில் முன்னிலை வகித்த, ராம் ஜன்மபூமி நியாஸின் (Ram Janmabhoomi Nyas) தலைவருமான மஹந்த் நிருத்யா கோபால் தாஸ், திங்கட்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், "புதிய அறக்கட்டளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை தான் நியாஸ் ஆகும். நிர்மோஹி அகாரா போன்ற மற்றவர்களும் கோவிலை கட்டிமுடிக்க எங்களுடன் சேரலாம்" என்றார்.
ஆனால் நிர்மோஹி அகாராவின் மஹந்த் தினேந்திர தாஸ் இதற்கு உடன்படவில்லை. "நாங்கள் ராம் ஜன்மபூமி நியாஸ்க்கு எதிராக போராடி வருகிறோம். அவர்களின் அறக்கட்டளையில் நாம் உறுப்பினராக வேண்டும் என்று ஒருவர் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? எங்கள் அறக்கட்டளையுடன் அவர்களுடைய அறக்கட்டளையை இணைத்து, எங்களின் ஒரு பகுதியாக மாறலாம். நாங்கள் நிர்மோஹி, அவர்களில் ஒரு பகுதியாக இருக்க முடியாது," என்றார்.
உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச், அயோத்தி தலைப்பு வழக்கு தொடர்பாக சனிக்கிழமை ஒருமனதாக அறிவித்த 5-0 தீர்ப்பில், அயோத்தி கோவிலை நிர்வகிக்க உரிமைகளை வழங்குவதற்கான நிர்மோஹி அகாராவின் கூற்றை நிராகரித்தது. ஆனால் பெஞ்ச், "சர்ச்சைக்குரிய இடத்தில் நிர்மோஹி அகாராவின் வரலாற்று இருப்பு மற்றும் அவர்களின் பங்கு" ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, ஒரு அறக்கட்டளையை உருவாக்குவதற்கான ஒரு திட்டத்தை வகுக்கும் அதே வேளையில், அகாராவிற்கு "கோவில் நிர்வாகத்தில் பொருத்தமான பங்கை" ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.
அயோத்தியில் ஆதிக்கம் செலுத்தும் அகாரங்களில் ஒன்றான திகம்பர் அகாரா, நியாஸ் தலைவரான பரம்ஹான்ஸ் ராம்சந்திர தாஸ்(2003ல் அவர் இறக்கும் வரை) தலைமையில் இருந்தது. இந்நிலையில், திகம்பர் அகாரா தலைவர் மஹந்த் சுரேஷ் தாஸ் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை புதன்கிழமை சந்தித்து, தற்போதுள்ள எந்த அறக்கட்டளையும் ராம் கோயிலைக் கட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்போவதாக கூறப்பட்டுள்ளது.
நியாஸ் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் ஒரு புதிய அறக்கட்டளையின் அவசியம் குறித்து கேள்வி எழுப்பினார்: "இது ஏன் உருவாக்கப்பட வேண்டும்? யார் அதை உருவாக்குவார்கள்? அதன் உறுப்பினர்கள் யார்? தேவை என்ன? ”
திகம்பர் அகாராவின் மஹந்த் சுரேஷ் தாஸ் தான் முதல்வரை சந்திப்பதாக உறுதிப்படுத்தினார். "இது ஒரு அழகான தீர்ப்பு. சோம்நாத் கோயில் அறக்கட்டளையைப் போல ஒரு புதிய அறக்கட்டளையை உருவாக்குவது அவசியம், ஏனென்றால் கோவிலைக் கட்டுவது அரசாங்கத்தின் வேலை அல்ல," என்றார்.