சபரிமலையைத் தொடர்ந்து மசூதிகளுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி வேண்டும் - சுப்ரிம் கோர்ட்டில் மனு

உலகில் வேறெங்காவது ஒரே மசூதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சமமாக தொழுகை செய்கின்றார்களா ? நீதிபதிகள் கேள்வி

Women Entry in Mosques : கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி, கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து கேரளாவில் அங்கும் இங்கும் கலவர மூண்ட போதிலும், கேரள முதல்வர் பினராய் விஜயன், கோவிலுக்கு வரும் பெண் பக்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று உறுதியாய் நின்றார். இந்த தீர்ப்பின் மீது மறுசிராய்வு மனுக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதன் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா தம்பதியினர் தொடர்ந்த வழக்கு

இந்நிலையில் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த யாஷ்மீஜ் ஜபூர் அஹமது பீர்ஷேட் (Yasmeej Zuber Ahmad Peerzade) மற்றும் ஜபூர் அஹமது பீர்ஷேட் (Zuber Ahmed Peerzade)தம்பதிகள், மசூதிகள் பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், பெண்கள் மசூதிக்கு செல்வதைத் தடுப்பது என்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 21, 25 மற்றும் 29-ன் விதிமுறைகளை மீறுவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று கூறியிருக்கும் போது, அவர்களை ஏன் மசூதிக்குள் அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீதிபதிகள் விசாரணை

இந்த வழக்கினை, நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் எஸ். அப்துல் நசீர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனு குறித்த பதிலை அளிக்க மத்திய அரசு, மத்திய வக்பு வாரியம், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் வாரியம், மற்றும் தேசிய பெண்கள் ஆணையத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

மேலும் நேற்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகள், உலகில் வேறெங்காவது ஒரே மசூதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சமமாக தொழுகை செய்கின்றார்களா ? என்று கேள்வி எழுப்பினர். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான அஷ்தோஷ் தூபே அதற்கு மெக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசல் என்றார்.

அரசியல் சட்டப்பிரிவு 14ன் படி பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி பேசிய நீதிபதிகள், இப்பிரிவு என்பது அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட வேண்டியது. மாறாக தனிமனிதர், மசூதிகளை மேலாண்மை செய்வோர் மீது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசூதி என்பது ஒரு அரசாங்கமா, தேவாலயம் என்பது ஒரு அரசாங்கமா இல்லை கோவில் என்பது தான் ஒரு அரங்காங்கமா ? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் மனிதருக்கு சக மனிதர் எப்படி சமத்துவ உரிமையை வழங்க இயலாமல் தடுக்க இயலும் என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு மறுப்பு தெரிவித்த வழக்கறிஞர் பேசிய போது, அரசியல் அமைப்புச் சட்டம் 14 என்பது, ”ஒரு அரசு குடிமக்களுக்கு மறுக்க முடியாது” என்று தான் ஆரம்பமாகிறதே தவிர, வேறொன்று இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.

மனுவில் இடம் பெற்றிருந்த சாரம்சம்

ஜமாத் இ இஸ்லாமி, முஜாஹித் அமைப்பின் கீழ் இயங்கி வரும் மசூதிகளில் மட்டுமே பெண்களுக்கு அனுமதி உண்டு. சன்னி பிரிவில் உள்ள பெண்களுக்கு அனுமதியில்லை. மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி இருக்கிறது என்றபோதிலும் அவர்கள் வந்து செல்வதற்கும், தொழுகை நடத்துவதற்கும் தனிப்பாதை இருக்கிறது. ஆண்களுக்கும் தனிப்பாதை இருக்கிறது. அங்கு பாலின சமத்துவம் காக்கப்படுகிறது. மெக்காவில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக சேர்ந்து காபாவை சுற்றி வருகின்றார்கள் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் படிக்க : தொடரும் பாலின சமத்துவத்திற்கான போராட்டங்கள்…. சபரிமலையை அடுத்து அகஸ்தியகூடம் செல்லும் பெண்கள்…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close