கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: இதுவரை நடந்தது என்ன?

கர்நாடக தேர்தலுக்கு பிறகு இதுவரை என்னென்ன நடந்தது என்பது குறித்த குட்டி ரீகேப் இங்கே... 

நேற்று காலை கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. முழுதாக 24 மணி நேரத்தை சக்சஸ் ஃபுல்லாக கடந்துவிட்டார். ஆனால், நாளை (சனி) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆக வேண்டும். இல்லையெனில், கதை மாறிவிடும். இந்நிலையில், கர்நாடக தேர்தலுக்கு பிறகு இதுவரை என்னென்ன நடந்தது என்பது குறித்த குட்டி ரீகேப் இங்கே…

மேலும் படிக்க – LIVE UPDATES கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம், 221 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 78 இடங்களை மட்டுமே கைப்பற்ற, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.

‘நாம் ஜெயிக்கவில்லை என்றாலும் பரவாயில்ல.. பாஜக கையில் ஆட்சி சென்றுவிடக் கூடாது’ என்று நினைத்த காங்கிரஸ், தேர்தலுக்கு முன்பு கூட்டணி வைக்காத மஜத கட்சியுடன், தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்தது. குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது காங்கிரஸ்.

இதை முற்றிலும் எதிர்த்த பாஜக, ‘மக்கள் எங்களை தான் பெரும்பாலான இடங்களில் வெற்றிப்பெற வைத்தனர். எனவே, எங்களை தான் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரியது பாஜக.

ஆனால், 16ம் தேதி இரவு, கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா, பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார். அதுமட்டுமின்றி, 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றார்.

பதறிய காங்கிரஸ், ஆளுநர் அறிவிப்புக்கு தடை கோரி, அன்று இரவே உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, அதை அவசரமாக விசாரிக்க கோரியது. விடிய விடிய நடந்த விசாரணையின் முடிவில், ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது. எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என உத்தரவிட்டது. மேலும், அடுத்தகட்ட விசாரணை மே 18(இன்று) காலை 10:30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.

மே 17 (நேற்று) காலை கர்நாடகாவின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார். பதவியேற்றவுடன் கர்நாடக மாநிலத்தில் ரூ.1 லட்சம் வரை விவசாய கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடிக்கான ஆணையில் தனது முதல் கையெழுத்தையிட்டார் எடியூரப்பா.

காங்கிரசின் பிரதாப் கவுடா, ஆனந்த்சிங் ஆகிய 2 எம்எல்ஏக்கள் மாயமாகியுள்ளதால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மே 18 (இன்று காலை) கர்நாடகாவில்  எடியூரப்பாவை  ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து  காங்கிரஸ் மற்றும் மஜத தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. அதில் தீர்ப்பளித்த நீதிமன்றம், நாளை (மே 19) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், மூத்த எம்.எல்.ஏ ஒருவரை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.’ என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக, தனது பெரும்பான்மையை நிரூபிக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!.

×Close
×Close