Ravik Bhattacharya, Santanu Chowdhury
Zomato beef-pork delivery protest in Howrah : இணைய உணவு டெலிவரி சேவைகளை வழங்கும் ஸொமாட்டோ நிறுவனம் தற்போது அடிக்கடி இணையங்களிலும், செய்திகளிலும் தலைப்பாகும் அங்கமாக மாறிவிட்டது. சமீபத்தில் இஸ்லாமியர் ஒருவர் எடுத்து வரும் உணவு எனக்கு வேண்டாம். உணவின் ஆர்டரை கேன்சல் செய்துவிடுங்கள் என்று ஒருவர் ட்வீட் செய்ய, உணவிற்கு மதங்கள் தெரியாது. உணவே ஒரு மதம் என்று பதிலடி கொடுத்தது ஸொமாட்டோ. பின்னர் அந்த வாடிக்கையாளர் தன்னுடைய ட்விட்டர் கணக்கை மூடிவிட்டு சென்றுவிட்டார். ஸொமாட்டோவின் இந்த பதிலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் கொல்கத்தாவில் வேறொரு விதமாக பிரச்சனை கிளம்பியுள்ளது.
மேலும் படிக்க : சகிப்புத்தன்மைக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஸொமாட்டோ… ட்விட்டரை விட்டு தலை தெறிக்க ஓடிய ‘அந்த’ வாடிக்கையாளர்!
Zomato beef-pork delivery protest in Howrah
ஆகஸ்ட் 5ம் தேதி பேமெண்ட் காரணமாக போராட்டத்தில் ஈடுபட இருப்படதாக அறிவித்தனர் ஸொமாட்டோவின் டெலிவரி எக்ஸ்க்யூட்டிவ்கள். ஆனால் அது பின்பு மதரீதியான பிரச்சனையாக உருமாற்றம் பெற்றது. ஞாயிற்றுக் கிழமை அவர்களின் பிரச்சனை நாடு முழுவதும் முக்கியத்துவம் பெற்றது.
மாட்டு மற்றும் பன்றிக்கறி உணவுகளை நாங்கள் எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களுக்கு தரமாட்டோம் என்று டெலிவரி எக்ஸ்க்யூட்டிவ்கள் போராட்டம் நடத்த துவங்கினர். 5ம் தேதி போராட்டத்தின் போது பாஜகவின் ஹவ்ரா மண்டல் 2 செயலாளர் சஞ்சய் குமார் சுக்லா, ஸொமாட்டோவின் டெலிவரி எக்ஸ்க்யூட்டிவ்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார். ஆனால் திங்கள் கிழமை அவர் அங்கே இல்லை. இது குறித்து அவரிடம் கேட்ட போது, ”இதை நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை மேலும் நான் ஒரு பாஜக உறுப்பினராக அந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால் எப்படி ஒரு இந்து மாட்டுக்கறி உணவுகளையும், ஒரு முஸ்லிம் பன்றிக்கறி உணவுகளையும் எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களுக்கு தருவார்கள்” என்று கேள்வி எழுப்பினார். இது மக்களின் மத நம்பிக்கைகளை காயப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
இது குறித்து மேற்கு வங்கத்தின் பழங்குடி நல அமைச்சர் ரஜீப் பானர்ஜீ தெரிவிக்கையில் “ஒரு நிறுவனம் தங்களின் ஊழியர்களை அவர்களின் மதத்திற்கு மாறான செயல்களை செய்ய வற்புறுத்தக் கூடாது” என்று கூறினார். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
எங்களின் பிரச்சனை சம்பளம் குறித்தது தான்...
எங்களுடைய ஊழியர்களில் பெரும்பாலானோர் சரியான சம்பளம் கிடைக்கவில்லை என்று தான் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின் முக்கிய காரணமே அது தான். அதன் பிறகு தான் பீஃப் மற்றும் போர்க் உணவுகளை எடுத்துச் செல்லமாட்டோம் என்றும் போராடினார்கள். ஆனால் முக்கிய பிரச்சனை என்னவோ சம்பளம் குறித்தது தான். ஆனால் ஊடகங்கள் தான் ”பீஃப் மற்றும் போர்க்” - விவகாரத்தை பெரிதாக ஹைலைட் செய்து காட்டியது என்று சுஜித் குமார் குப்தா கூறினார். அவர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஸொமாட்டோவில் பணி புரிந்து வருகிறார்.
நான் இந்த நிறுவனத்தில் பணியில் சேரும் போது ஒரு வாரத்திற்கு ஆர்டர் எடுக்கின்றோமோ இல்லையோ ரூ.4000 எங்களால் சம்பாதித்து விட இயலும். ஒவ்வொரு டெலிவரிக்கும் எங்களால் 80 முதல் 100 ருபாய் வரை சம்பாதிக்க இயலும். மேலும் எங்களுக்கு இன்செண்டிவ்வும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு ஆர்டருக்கு வெறும் ரூ.25 மட்டுமே தருகின்றார்கள். ஆரம்ப காலத்தில் ஒருவர் மாதத்திற்கு ரூ. 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பாதிக்க இயலும். ஆனால் தற்போது மதியம் 12 மணி துவங்கி நள்ளிரவு வரை உழைத்தாலும் வெறும் ரூ. 15 ஆயிரம் மட்டுமே எங்களுக்கு மாத வருமானமாக கிடைக்கிறது என்று கவலை தெரிவித்தார் குப்தா.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
போராட்டத்தில் ஈடுபட்ட மௌசின் அக்தர் என்பவர் கூறுகையில் ”நாங்கள் எங்களின் சம்பளம் குறைக்கப்பட்டது குறித்து நாங்கள் புகார் அளித்தோம். ஆனால் அவர்களோ, உங்களுக்கு அந்த வருமானம் பத்தவில்லை என்றால் தாராளமாக வேலையைவிட்டு நின்றுவிடலாம் என்று கூறிவிட்டார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு எங்களின் தலைமை அதிகாரி, நாங்கள் பீஃப் மற்றும் போர்க் உணவுகளை விற்கும் சில உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று கூறினார். ஆனால் இது எங்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை துன்புறுத்துவதாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
ஸொமாட்டோவின் கருத்து
வருகின்ற 16ம் தேதி தங்களின் நிர்வாகிகளுடன் இந்த பிரச்சனைகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் டெலிவரி எக்ஸ்க்யூட்டிவ்கள். இந்த பிரச்சனை பெரிதான போது, ஸொமாட்டோ தரப்பில் இருந்து ஒரே ஒரு அறிக்கை மட்டும் வெளியிடப்பட்டது. அதில் ”உணவு டெலிவரிக்காக வரும் நபர்கள் தங்களின் வேலை குறித்த முழு விபரங்களும் அறிந்த பின்னர் தான் வேலையில் சேர்கின்றனர். ஆனால் ஹவ்ராவில் தற்போது சில காரணங்களை முன்வைத்து தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இது குறித்து விரைந்து முடிவு செய்வோம்” என்று கூறிள்ளது.