Botswana Mystery elephant deaths caused by cyanobacteria : போட்ஸ்வானா நாட்டில் அமைந்திருக்கும் ஒக்காவங்கோ டெல்டா பகுதிகளில் நூற்றுக் கணக்கான யானைகள் மர்மமான முறையில் ஜூலை மாதம் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போஸ்ட்வானாவில் உலகிலேயே அதிக அளவில் யானைகள் உள்ள நாடுகளில் மூன்றாவது நாடாகும். 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகளை கொண்டுள்ளது இந்த நாடு. ஒக்காவங்கோ டெல்டாவின் வடக்கு பகுதியில் 330 யானைகள் இறந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, இந்த யானைகளின் மரணத்திற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வந்தனர். அதன் முடிவுகள் சமீபமாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் இயல்பாகவே பாசி படர்வது வழக்கமான ஒன்றாகும். அந்த டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் நீர் நிலை பகுதிகளில் விஷத் தன்மை வாய்ந்த சியானோ பாக்டீரியாக்களும் நீலபசும் ஆல்காக்களும் வளர துவங்கி இருக்கின்றன. இந்த கொடிய நஞ்சை ப்ளூம்ஸ் என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். வெப்பமான நீரில் அதிகமாக வளரக்கூடிய வகையாக இது இருப்பதால் நீர் நிலை முழுவதும் இந்த விஷம் பரவி, அதனை குடித்த யானைகள் இறந்திருக்க கூடுமென்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க : ஆசியாவின் மிகப்பெரிய பெண் யானை கல்பனா மரணம்! வனத்துறையினர் அஞ்சலி…
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கனடா மற்றும் அமெரிக்காவின் சிறப்பு ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பல தரப்பு சோதனைகளுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அந்நாட்டு வனத்துறையினர் இது குறித்து கூறும் போது, சியானோ பாக்டீரியாக்கள் நீர் நிலையின் விளிம்புகளில் தான் காணப்படுகிறது. ஆனால் யானைகள் எப்போதும் நீர் நிலைகளின் மையத்தில் இருந்து தான் நீர் அருந்தும் என்று கூறுகின்றனர். இருப்பினும் இறந்து போன யானைகளில் பெரும்பாலானவை நீர் நிலைகளை ஒட்டிய இடத்தில் தான் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil