வடக்கு தாய்லாந்தில் இருக்கும் சியாங்க் மாகாணத்தில் 7 கி.மீ நீளமான குகையில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக 12 மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
தொடர் மழைக்காரணமாக அவர்களைக் காப்பாற்றுவதில் தாமதம் மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று தாய்லாந்தினைச் சேர்ந்த நீச்சல் வீரர், அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல முற்படுகையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை 10 மணி அளவில், அம்மாணவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்தாட்டப் பயிற்சியாளர் என 13 பேரையும் மீட்பதற்காக குகை நீச்சல்க்காரர்களை உள்ளே அனுப்பி இருக்கிறார்கள். மாட்டிக் கொண்ட முதல் நபரை மீட்பதற்கு மட்டும் சுமார் 11 மணி நேரம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்கள்.
இதைப்பற்றி சியாங் ராய் பகுதியின் ஆளுநர் நரோங்சக் ஒசடனகொர்ன் கூறுகையில், குகையில் இருக்கும் மாணவர்களை மீட்பதற்கு 13 வெளிநாட்டு வீரர்களையும் ஐந்து தாய்லாந்து வீரர்களையும் அனுப்பியுள்ளோம் என்று குறிப்பிட்டார். இன்று காலை பத்து மணிக்குத் தொடங்கிய இந்த மீட்பு நடவடிக்கைப்படி ஒருவரை மீட்பதற்கே சுமார் 11 மணி நேரம் தேவைப்படும் என்று கூறியுள்ளார்,
தாம் லுவாங் நாங் நாண் என்னும் 7 கிலோ மீட்டர் குகைக்குள் தண்ணீர் முழுவதும் சூழ்ந்துள்ளதால், நிறைய பகுதிகள் சேறும் சகதியுமாய் காணப்படுகிறது. மேலும் எந்த பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருக்கிறது என்பதை கண்டறிவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருக்கின்றன.
நீருக்குள் நீச்சல் அடிக்கும் பழக்கமற்றவர்களாக உள்ளூர் மக்களும், அந்த குழந்தைகளும் இருப்பதால் அவர்களைக் காப்பாற்றுவது மிகவும் கடினமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
கடந்த சில நாட்களாக நீர் அளவு ஓரளவிற்கு குறைந்துள்ளதால் இந்த மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வேளை மீண்டும் மழை வரும் பட்சத்தில் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.
மீண்டும் மழை வரும் பட்சத்தில் குகைக்குள் இருக்கும் குறைவான அளவு ஆக்சிஜனும் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. குகைக்குள் இருக்கும் நீரை மோட்டர் பம்ப் மூலம் எடுக்கும் பணி நடந்து வந்தாலும், வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீர் மீண்டும் குகைப்பாதையை நிரப்பிவிடுகிறது.
குகைக்குள் இருக்கும் மாணவர்களின் அருகில் ஒரு மருத்துவர் உட்பட மூன்று கடற்படை வீரர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருந்து, ஆக்சிஜன் டேங் ஆகியவை அளிக்கப்பட்டிருக்கிறது.