Former President George H.W. Bush : அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் புஷ் தன்னுடைய 94வது வயதில் காலமானார். இது குறித்து அவருடைய மகன் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் அதிபருமான ஜார்ஜ் புஷ் அளித்த அறிக்கையில் “94 வருடம் வாழ்ந்த இந்த பெருவாழ்வினை என் தந்தை முடித்துக் கொண்டார் என்பதை நான், ஜெப், நெய்ல், மார்வின் மற்றும் டோரா மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
மனைவியின் மரணத்தால் துவண்ட புஷ்
அந்த அறிக்கையினை ஜார்ஜ் புஷ் சீனியரின் செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக்கர்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். எதனால் உயிரிழந்தார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் 2012ம் ஆண்டு, தான் வாஸ்குலர் பர்கின்சோனிஸம்மால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார் புஷ். கடந்த ஏப்ரல் 17ம் தேதி அவருடைய மனைவி பார்பரா புஷ் தன்னுடைய 93 வது வயதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1945ல் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. 73 வருடங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உற்ற துணையாக இருந்துள்ளனர். அது முதற்கொண்டே மிகவும் மோசமான மனநிலையையும் உடல் நிலையையும் பெற்றிருந்தார் புஷ்.
Former President George H.W. Bush பிறப்பும் வரலாறும்
ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் (George Herbert Walker Bush) 1924ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவின் கப்பற்படையில் பணியாற்றி நாட்டிற்காக தன்னுடைய ராணுவ சேவையை ஆற்றியவர்.
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று பின்பு அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த கடைசி மனிதர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
1988ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து இவருடைய மகன் ஜார்ஜ் W. புஷ் 43வது அதிபராக அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 குழந்தைகள் மற்றும் 17 பேரக் குழந்தைகள் ஜார்ஜ் புஷ்ஷிற்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஜார்ஜ் புஷ் சீனியரின் அரிய புகைப்படத் தொகுப்பு
டொனால்ட் ட்ரெம்ப் இரங்கல் செய்தி
அமெரிக்காவின் தற்போதைய அதிபராக பதவி வகிக்கும் டொனால்ட் ட்ரெம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலானியா ட்ரெம்ப் சார்பில் இரங்கல் தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ட்ரெம்ப்.