ஜெயஷ்-இ-முகமது... பாகிஸ்தானில் செயல்படும் ஒரு பயங்கரவாத இயக்கம். கடந்த மாதம் 14ம் தேதி, காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது இந்த இயக்கம் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் ஜவான்கள் கொல்லப்பட்டனர்.
நாட்டையே பெரும் அதிர்வுக்குள்ளாக்கிய இந்த நிகழ்வையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலகோட்டில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது, இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறினாலும், இதுவரை தெளிவான விவரம் வெளியாகவில்லை.
இதைத் தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் f16 விமானங்களை துரத்திச் சென்ற, இந்திய விமானப்படை வீரர் அபி நந்தனின் MiG-21 ரக விமானம் சுடப்பட, பாராசூட் மூலம் தப்பித்து பாகிஸ்தானில் தரையிறங்கினார்.
அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவம், இந்தியா உட்பட உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து அபி நந்தனை கடந்த மார்ச் 1ம் தேதி ஒப்படைத்தது.
மேலும் படிக்க - ஜெய்ஷ் மதரஸாவின் நான்கு கட்டிடங்கள் மீது தாக்கியது உறுதி! - இந்திய விமானப்படை
இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பகவால்பூரில் அமைந்துள்ள, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தில் பல்வேறு வசதிகள் உள்ளது தெரியவந்துள்ளது.
3 ஏக்கர் நிலப்பரப்பில் அதி நவீன 'ஜிம்' , நீச்சல் குளம் என நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக வசதிகள் இங்கு உள்ளன. அந்த அமைப்பின் தலைவனான மசூத் அஸார் மற்றும் அவனது சகோதரர்கள், உறவினர்கள் இந்த வளாகத்தில் தான் தங்கி உள்ளனர்.
இந்த பயங்கரவாத அமைப்பில் சேருவோருக்கு, முதலில் இங்கு தான் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின், பாலகோட்டில் உள்ள முகாமில் பயிற்சி தரப்படும். 2012ல் கட்டத் துவங்கப்பட்ட இந்த கட்டிடம், 2015 முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதைக் கட்டுவதற்கு, பஞ்சாப் மாகாண அரசும், பாக்., அரசும் நிதி உதவி அளித்துள்ளன. இதைத் தவிர, பல்வேறு நாடுகளில் இருந்தும் மசூத் அஸார் நிதி திரட்டியுள்ளான்.
தவிர, இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மசூத் அசாரின் சகோதரன் அல்லது மூத்த நிர்வாகி என யாராவது ஒருவர், பயிற்சி பெறுபவர்களை 'ஜிஹாத்' குறித்து மூளைச் சலவை செய்வது வாடிக்கை எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கக் கோருவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை கைவிட பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க - பாலகோட் முகாமில் 3 வருடங்கள் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள்.. வெளிவரும் பகீர் தகவல்கள்!