கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 45.88 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 67 லட்சத்து 91 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 16 லட்சத்து 69 ஆயிரத்து 175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45 கோடியே 88 லட்சத்து 90 ஆயிரத்து 651 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 31 ஆயிரத்து 610 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்
பிலிப்பைன்சின் மானாய் நகரில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மானாய் நகரின் கிழக்கு தென்கிழக்கு திசையில் 51 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 09.57 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமியின் தரைப்பகுதியில் இருந்து 51.33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் செல்வேனா என எனக்கு தெரியாது-அமெரிக்க அதிபர்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “நீங்கள் (உக்ரைன் தலைநகரம்) கீவ் செல்வீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “எனக்கு தெரியாது என்பதுதான் உங்கள் கேள்விக்கான பதில்” என பதில் அளித்தார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் உக்ரைன் சென்று அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து தனது நாட்டின் ஆதரவைத் தெரிவித்தார்.
கண்டனத்திற்கு ஆளான இலங்கை.. முக்கியப் பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண்.. மேலும் செய்திகள்
நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரிவு
சர்வதேச சினிமா படங்களை பார்க்க உதவும் முன்னணி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் சர்வதேச அளவில் 20 லட்சம் சந்தாதாரர்களை இந்த காலாண்டில் இழந்துள்ளது.
மேலும் வரும் காலாண்டில் 20 லட்சம் சந்தாதாரர்களை அந்நிறுவனம் இழக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 10 ஆண்டில் இல்லாத அளவு சரிவாகும். சந்தாதாரர்கள் கடவுச்சொல்லை பகிர்வதை தடுக்க நெட்பிளிக்ஸ் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது, உக்ரைன் போர் மற்றும் எச்பிஓ, டிஸ்னி போன்ற ஓடிடி நிறுவனங்களின் வருகை ஆகிய காரணங்களால் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“