ராஜபக்சேவை சந்தித்த இரா. சம்பந்தன் : இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்கள் மத்தியில், நேற்று (29/10/2018) அரசியல் சாசனத்தையும் மீறி ராஜபக்சே புதிய அமைச்சரவையை அமைத்தார். இந்நிலையில் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மகிந்த ராஜபக்சேவை விஜேராம இல்லத்தில் சந்தித்தார்.
நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் நிலைமைகள் குறித்து இருவரும் பேசிக் கொண்டனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரின் ஆதரவும் தனக்கு கிடைக்க வேண்டும் என சம்பந்தனிடம் பேசினார் மகிந்த ராஜபக்சே.
யார் நிறைவேற்றுவார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ?
இந்த சந்திப்பில், இலங்கையின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கலந்து கொண்டார். ரணில் விக்ரமசிங்கேவின் ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு ரணில், மகிந்த, அதிபர் சிறிசேனா ஆகியோர் இரா. சம்பந்தனை தனித்தனியாக சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
ரணில் மற்றும் மகிந்த ராஜபக்சே என இருவரிடமும் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தார் இரா. சம்பந்தன். இதில் எந்த அணி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என எழுத்து மூலம் உறுதிமொழி அளிக்கும் பட்சத்தில் அவர்களுடன் கூட்டணி வைக்கப்படும் என உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
இந்த சந்திப்பு முடிந்தவுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ராஜபக்சேவின் பதவியேற்பை எதிர்க்கும் உலக நாடுகள்